எச்.1.பி விசா விண்ணப்பத்தின் விலை 10 டாலர் அதிகரிப்பு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 19:01

வாஷிங்டன்,

அமெரிக்க அரசு எச்.1.பி விசாவுக்கான விண்ணப்பத்தின் விலையை 10 டாலர் (ரூ. 713) அதிகரித்துள்ளது. புதிதாக அமல்படுத்தப்படவுள்ள மின்னணு பதிவு அமைப்புக்காக (Electronic registration system) விண்ணப்பத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வெளிநாட்டு பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்ற வழங்கப்படுவது எச்.1.பி விசா. இந்த விசா மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற பின் எச்.1.பி விசா விஷயத்தில் பல கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். அதன் பின் இந்தியர்களுக்கான எச்.1.பி விசா

விண்ணப்பங்கள் நிராக்கரிக்கப்படுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எச்.1. பி விசாவுக்கான விண்ணப்பத்தின் விலை 10 டாலர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைத்துறை தலைவர் கென் குச்சினெல்லி செய்தியாளர்களிடம் பேசுகையில் :

குடிவரவு அமைப்பை நவீனமயமாக்கவும் முறைகேடுகளை தவிர்க்கவும் தேர்வு முறைகளை வலிமைப்படுத்தும் முயற்சிகளில் ஒருபகுதியாக இந்த புதிய எலக்டிரானிக் பதிவு சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காகத்தான் விண்ணப்பத்தின் விலையில் 10 டாலர் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மூலம் எச்.1.பி விசாவுக்கு விண்ணப்பிக்கிறவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முதலில் எலக்டிரானிக் முறையில் பதிவு செய்ய வேண்டும்.

சோதனைகளுக்கு பின் இந்த புதிய எலக்டிரானிக் பதிவு அமைப்பு வரும் 2021ம் ஆண்டுக்கான எச்.1.பி விசா தேர்வு முறையில் பயன்படுத்தப்படும்.

இது குறித்து பொதுமக்களுக்கு முன்பே அறிவிக்கப்படும். எலக்டிரானிக் பதிவுக்கான கால அவகாசம் மற்றும் தேதிகளும் முன்பே அறிவிக்கப்படும் என்று கென் குச்சினெல்லி கூறினார்.