ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டம்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 18:53

புதுடெல்லி

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றுகிற ஊழியர்கள் தங்கள் வேலைநிலைமை, ஊதியம் ,ஓய்வூதியம் குறித்து எந்த விளக்கமான தகவல்களையும் நிர்வாகம் தரவில்லை. ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்தை விலைக்கு விற்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன .அதனால் தங்கள் நலனை காத்துக்கொள்ள போராட ஏர் இந்தியா ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

போராட்டத் திட்டங்களை  வகுக்கும் பணியில் இப்பொழுது ஏர் இந்தியா நிறுவன தொழிலாளர்கள், அதிகாரிகள் சங்கங்கள் இறங்கியுள்ளன.

சுற்றறிக்கை

இதற்கிடையில் ஏர் இந்தியா நிர்வாகத்தின் சார்பில் சுற்றறிக்கை ஒன்று தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஸ்வினி லோகானி கையெழுத்திட்டுள்ளார். சுற்றறிக்கை விவரம்:

இன்றுள்ள மிகவும் சிக்கலான சூழ்நிலையிலும் ஏர் இந்தியா என்ற பெயர் அதனை இன்னும் காப்பாற்றிக் கொண்டுள்ளது .

எதிர்காலம் பற்றி ஏர்இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கவலையில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதை நிர்வாகம் நன்கு அறியும்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர் மாறும்பொழுது பணி, கலாச்சாரம் ,பணிச் சூழல் முற்றிலும் மாறிவிடும் என்பதை ஏர்இந்தியா தொழிலாளர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் .

அதனால் அவர்களுக்கு கவலை ஏற்பட்டு இருப்பது இயல்பான தாகும்.

 ஏர் இந்திய தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து ஏர் இந்தியா நிறுவனமும் கவலை கொண்டுள்ளது என்பதை தொழிலாளர்கள் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மிகவும் சிக்கலான நிதிச் சூழலில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. அதன் கடன்கள் பெரியதாக வளர்ந்து விட்டன. அதனால் கடனுக்கான தவணையை செலுத்துவதே மிகவும் கடினமான காரியமாக உள்ளது.

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் நிலைபெற்று வளர்வது என்பது அதன் முழுத் திறன்களையும் பயன்படுத்திக் கொள்வதில் அமைந்துள்ளது.

 எனவே நம்முடைய இந்தியா தன்னுடைய பொருளாதார இலட்சியங்களை அடைவதற்கு ஏர் இந்தியா ஊழியர்கள் ஆகிய நாமும் நம்முடைய பங்கைச் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த நெருக்கடியான சூழலிலும் ஏர் இந்தியா நிர்வாகம் தனது பொறுப்புக்களை உணர்ந்து பணியாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அஸ்வினி லோகானி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.