கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலை ஒத்திவைக்கும்படி தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 18:38

புதுடில்லி,

கர்நாடகத்தில் வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பதவி ஏற்ற முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் அரசு, 17 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் கவிழ்ந்தது. குமாரசாமி ஆட்சி கலைவதற்கு முன்னதாக ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார்.

தங்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் வரும் டிசம்பர் 5ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த அக்டோபர் 21ம் தேதி நாடு முழுவதும் 17 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் கர்நாடக இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

ஆனால் கர்நாடக எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் டிசம்பர் 5ம் தேதிக்கு இடைத்தேர்தலை ஒத்தி வைத்தது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நவம்பர் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாததால் இடைத்தேர்தலுக்கான தங்கள் வேட்பு மனுக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களால் தாக்கல் செய்ய முடியாது.

எனவே தீர்ப்பு வரும் வரை கர்நாடகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹாட்கி இன்று உச்சநீதிமன்றத்தில் கோரினார்.

அவரது கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.