ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - இந்திய வீரர் பலி

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 17:43

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பயங்கரவாதிகள் மற்றும் ராணுவப் படையினர் இடையே இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் ராகுல் பைரூ சுலேகேகர் என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார்.

பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.
உடனடியாக ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டனர். அதற்கு பயங்கரவாதிகளும் எதிர்த் தாக்குதல் நடத்தினர். இருதரப்பிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் ராகுல் பைரூ சுலேகேகர் என்ற இந்திய வீரர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ராகுல் உயிரிழந்தார். இவர் கர்நாடகம், பெல்காம் மாவட்டம் உச்சகான் கிராமத்தை சேர்ந்தவர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்:

கிருஷ்ணா காட்டி பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவியாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இந்த்த் தாக்குதலில் இந்திய வீரர் ராகுல் பைரூ சுலேகேகர் உயிரிழந்தார். அவர் மிகவும் தைரியமான நேர்மையான வீரர். அவரது தியாகத்தை இந்த தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.

இந்திய எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ முகாமை தாக்குவதற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.