பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 17:04

கொல்கத்தா,

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழித்துவிட்டதாக மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே இது நாட்டின் பொருளாதாரத்தையும் பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் எனக் கூறினேன்.

நான் கூறியதை இப்போது அனைத்து நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களும் இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று என காட்டியுள்ளது.

அன்று துவங்கிய பொருளாதார சீரழிவு இன்று எங்கு வந்து நிற்கிறது என பாருங்கள்.

வங்கிகள் நிதி அழுத்ததில் உள்ளன. விவசாயிகள், இளம் தலைமுறையினர், தொழிலாளர்கள், வர்த்கர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மம்தா பானர்ஜி டுவிட்டரில் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக மறுப்பு

மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு மேற்குவங்க பாஜக பொது செயலாளர் சயந்தன் பாசு, பதிலடி கொடுத்து பேசியதன் விவரம் :

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு தொழிற்சாலை கூட நிறுவப்படவில்லை. எனவே பாஜகவை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடுவதை விட்டுவிட்டு மாநிலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்ய மம்தா பானர்ஜி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால் நன்றாக இருக்கும்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி என்பது உலகளாவிய பிரச்சனை. அனைத்து நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. தன்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை பற்றி முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சயந்தன் பாசு, தெரிவித்துள்ளார்.