சென்னையில் காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 16:50

சென்னை,

சென்னையில் காற்று மாசு அளவு கடந்த சில நாட்களில் டில்லியை விட அதிகரித்துள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் வியாழனன்று  காற்று மாசுக் குறியீடு
அண்ணா நகரில் 374 ஆகவும்,   ராமாபுரத்தில் 363,
கொடுங்கையூர், மணலி ஆகிய இடங்களில் 317,
ஆலந்தூரில் 312, கொடுங்கையூரில் 297 ஆகவும் அதிகரித்துள்ளது.
இன்று காலை மணலியில் 320 ஆகவும், வேளச்சேரியில் 292 ஆகவும், ஆலந்தூரில் 285 ஆகவும் உள்ளது.
சென்னையின் சொகுசு பகுதி என்றழைக்கப்படும் அண்ணாநகரில் தான் காற்று மாசு அதிகமாக உள்ளது.

 டில்லியின் காற்று மாசுவை விட 50% கூடுதலான காற்று மாசு சென்னையில் உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் மூச்சு விட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளான கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளில் இருந்து மீத்தேன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியாவதும், அந்த குப்பைக் கிடங்குகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதும் தான் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.  சீரமைக்கப்படாத சாலைகளில் இருந்து எழும் புழுதியும் சென்னையின் காற்று மாசுக்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

காற்று மாசு அளவைத் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் உண்டு.

சென்னையில் உள்ள இரண்டு  குப்பைக் கிடங்குகளில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் மையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது காற்று மாசுவை அதிகரிக்கும்

குப்பைக் கிடங்குகளை மூடுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்திருத்த பணிகளை மேற்கொள்வதன் மூலம் சென்னையில் காற்று மாசுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் .

இவ்வாறு,  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.