உ.பி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச்செயலர் டிஜிபியிடம் ரஞ்சன் கோகாய் விசாரணை

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 16:41

புதுடில்லி,

அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் உத்தரபிரதேசத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் ஆகியோரிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேட்டறிந்தார்.

சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக அயோத்தியில் கடந்த மாதம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அமைதி காக்க வேண்டும் என இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று உச்சநீதிமன்றத்தில் உள்ள தன் அலுவலகத்திற்கு உத்தரபிரதேச தலைமை செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் டிஜிபி, ஓம் பிரகாஷ் சிங் ஆகிய இருவரையும் அழைத்தார். அங்கு இருவருடனும் பேசினார்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது உத்தரபிரதேச மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரு அதிகாரிகளும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த சந்திப்பில் மேற்கொண்டு என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

அவசர உதவிக்கு ஹெலிகாப்டர்கள்

உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அயோத்தியில் அவசர உதவிக்காக 2 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்தியநாத் நேற்றிரவு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில் அவசர உதவிக்காக 2 ஹெலிகாப்டர்களை அயோத்தியில் தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் லக்னோவில் மாநில அளவிலான சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைக்கவும்  மாவட்டந்தோறும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பின் முதல்வர் யோகி ஆதித்தியநாத் வெளியிட்ட அறிக்கையில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.