பணமதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசின் பயங்கரவாத தாக்குதல் : ராகுல் காந்தி சாடல்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 15:58

புதுடில்லி,

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பயங்கரவாத தாக்குதல். இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகளும் எழுந்தன.

அதேசமயம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசை இன்று வரை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக சாடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதன் விவரம் :

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, பலரது உயிரை பறித்து, லட்சக்கணக்கான சிறு, குறு வர்த்தகங்களை முடக்கி, கோடிக்கணக்கான இந்தியர்களின் வேலைகளை பறித்த பணமதிப்பிழப்பு என்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி கருத்து

காங்கிரஸ் பொறுப்பு தலைவர் சோனியா காந்தி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம் :

இந்த மோசமான நடவடிக்கையால் 120 பேர் உயிரழந்துள்ளனர். இந்தியாவின் சிறு,குறு, நடுத்தர வர்த்தகத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டது.

இதற்கெல்லாம் பொறுப்பேற்காமல் மோடி அரசு எவ்வளவுதான் தப்பிக்க நினைத்தாலும் பொதுமக்கள் அவர்களை விடமாட்டார்கள். பிரதமர் மோடி அரசு இந்த நடவடிக்கைக்கு பொறுப்பேற்பதை அவர்கள் உறுதி செய்வார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசுவதை பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் கடந்த 2017ம் ஆண்டு முதல் நிறுத்திவிட்டனர். இந்த நாடு அதைபற்றி மறந்துவிடும் என நினைத்துவிட்டனர். ஆனால் இந்த தேசம் மற்றும் வரலாறு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மறக்காமல் இருப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும் என சோனியா காந்தி தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி டுவிட்டர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதன் விவரம் :

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை தடுக்கும் என கூறிய மத்திய அரசு மற்றும் இந்த நடவடிக்கை குறித்து பெருமை பேசியவர்கள் அனைவரும் இன்று மவுனமாக தலையை திருப்பி கொண்டுள்ளனர்.

உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் சீர்கேடாக மாறியுள்ளது.  இந்திய பொருளாதாரத்தை அழித்துவிட்டது. இதற்கு யாராவது பொறுப்பேற்க முன்வருவார்களா? என பிரியங்கா காந்தி டுவிட்டரில் சாடியுள்ளார்.

நவீன காலத்து துக்ளக்

காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கூறுகையில் :

கடந்த 1330ம் ஆண்டு சுல்தான் முகமது பின் துக்ளக் தன் தேசத்தின் நாணயத்தை மதிப்பிழப்பு செய்தார். இன்றைய நவீன காலத்து துக்ளக் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.

3 ஆண்டுகள் கடந்தும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை போன்ற பாதிப்புகளில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை. இந்த நடவடிக்கையால் பயங்கரவாதமோ, கள்ள நோட்டுக்களோ தடுக்கப்படவில்லை. இதற்கு யார் பொறுப்பு ?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்திலும் கூட மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன் ? என ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.