மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 13:50

சென்னை,

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தீபாவளி முதல் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என்று கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

லட்டு தயாரிப்பு, விநியோக இடம் தேர்வுக்கு கால அவகாசம் தேவைப்பட்டதால், திட்டம் தள்ளி வைக்கப்பட்டு, இன்று முதல் தொடங்கியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை  தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதன்படி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக 30 கிராம் லட்டு இலவசமாக வழங்கப்படும். அம்மன் சன்னதியில் இருந்து வெளியே வரும் வழியில் உள்ள கூடல் குமரன் சன்னதி முன்பு லட்டு வழங்கப்பட உள்ளது.

லட்டு தயாரிப்பதற்காக மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு ஆடி வீதியில் தனி அறை அமைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் லட்டு தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

1 மணி நேரத்தில் 2,400 முதல் 3,000 லட்டுகள் வரை தயார் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகையைப் பொறுத்து தினமும் 20,000 லட்டுகள் தயாரிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. லட்டு தயாரிப்பதற்காக 15 பேர் கொண்ட குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருடந்தோறும், இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் லட்டு வழங்கி முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

கோயில் கட்டடங்கள் திறப்பு

இரத்தினகிரி - அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ஆலங்குடி - அருள்மிகு ஆபத்சகாயயேஸ்வர சுவாமி திருக்கேயில், பீர்க்கன்காரணை - அருள்மிகு சூராத்தம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.