பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு இன்று 92-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 13:30

புதுடில்லி,

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று தனது 92வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். டில்லியில் உள்ள அவருடைய வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவரான அத்வானி இன்று தனது 92-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளையொட்டி அத்வானிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

அத்வானி இல்லத்தில் நேரில் சென்று பிரதமர் மோடி அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகிய தலைவர்களும் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அப்போது, அத்வானியின் மகள் பிரதிபா, மகன் ஜெயந்த், மருமகள் கீத்திகா ஆகியோர் உடனிருந்தனர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

நமது இந்திய மக்களை மேம்படுத்துவதில் அத்வானி அளித்த சிறப்பான பங்களிப்பை இந்தியா எப்போதும் மதிக்கும்.

இந்திய அரசியலில் பாரதீய ஜனதா கட்சியை முன்னிலைக்கு உயர்த்தியவர் அத்வானி.

அத்வானியைப் பொறுத்தவரை பொதுச்சேவை என்பது எப்போதும் நியாயங்களுடன் தொடர்புடையது. இதனை ஒரு முறை கூட அத்வானி சமரசம் செய்ததில்லை. அமைச்சராக இருந்தபோது முன்னிலையில் இருந்தார். அவரது நிர்வாகத் திறன்கள் உலக அளவில் பாராட்டப்படுகின்றன.

மரியாதைக்குரிய அத்வானி அவர்களின் பிறந்த நாளில் அவர் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  என்று பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.