மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா? 2 நாளில் ஆதாரத்துடன் பதில்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 13:16

சென்னை:

மிசா சட்டத்தில் மு.க. ஸ்டாலின் கைதானாரா? இல்லையா? என 2 நாளில் ஆதாரங்களுடன் பதிலளிக்கப்படும் என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாளை (339வது பிறந்த நாள்) முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி. ஜெயகுமார், க. பாண்டியராஜன், செங்கோட்டையன், பெஞ்சமின் மற்றும் வளர்மதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன்  உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் க. பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

மிசா சட்டத்தில் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என அதிமுக கேள்வி எழுப்பவில்லை என்றும், மிசாவில் ஸ்டாலின் கைதானது பற்றி தனக்கு தெரியாது என பொன்முடி கூறியதால் தான் பிரச்னை எழுந்தது.

எதற்கு கைதானேன் என்பதை ஸ்டாலின் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்காலாமே? என கூறிய அமைச்சர் பாண்டியராஜன், ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை என்பதால் சந்தேகம் எழுப்பினேன். 

மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானதற்கான காரண குறிப்பு ஏதுவும் இல்லை.  2 நாளில் ஆதாரங்களுடன் ஸ்டாலினுக்கு பதிலளிக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், 

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி எந்த ஆணையத்தின் அறிக்கையிலோ அல்லது அது பற்றிய புத்தகங்களிலோ குறிப்பிடப்படவில்லை என்றார்.

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.