தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம் தான்: ரஜினி குறித்து கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 13:05

சென்னை,

திரைப்பட இயக்குனர் பாலச்சந்தரின் சிலையை திறந்து வைத்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் பேசினார். சிறப்பு விருது என்பது தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம் தான் என்று ரஜினியின் விருது குறித்து கமல்ஹாசன் பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் பாலச்சந்தரின் (60 கிலோ எடையும் 2 அடி உயரமும் கொண்ட)  சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் மணிரத்னம், கே,எஸ். ரவிக்குமார், நடிகர்கள் ஸ்ருதிஹாசன், நாசர், கவிஞர் வைரமுத்து, பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,  

இயக்குநர் பாலச்சந்தரின் சிலை என்னை கண்காணிப்பதற்காக இந்த அலுவலகத்தில் நான் வைத்துள்ளேன்.

ரஜினியும், நானும் ஒருவருக்கொருவர் ரசிகர்களாக இருக்கிறோம். இன்று வரை எங்கள் இருவர் கைகளையும் யாராலும் பிரிக்க முடியவில்லை என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

விருதை குறிப்பிட்டு பேசிய கமல்ஹாசன், ரஜினிக்கு சிறப்பு விருது என்பது தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம் தான். 44 ஆண்டுக்கு பிறகு ஐகான் விருது கொடுக்கிறார்கள்.

சினிமாவிற்கு நடிக்க வந்த முதல் ஆண்டிலேயே ஐகான் ஆனவர் ரஜினிகாந்த்  என்று கமல்ஹாசன் கூறினார்.