ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 12:25

சென்னை,

ஐ.ஐ.டி. உள்பட தொழில் நுட்ப கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை (ஜே.இ.இ.- JEE) தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

ஐ.ஐ.டி. உள்பட இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டும் இந்தி, ஆங்கிலத்துடன் குஜராத்தி மாநில மொழியிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மட்டுமே தங்கள் மாநில மொழியில் தேர்வு நடத்தக் கேட்டுக் கொண்டது என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை கூறிய கருத்து உண்மை அல்ல.

 ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்று ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி பத்தாண்டுகளுக்கு முன்பே வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு விசாரணையின் போது சிபி எஸ் இ அல்லது தேசிய தேர்வு முகமை எந்தத் தகவலும் இதுவரை கூறவில்லை.

தமிழுக்கு எதிரான இந்த சமூக அநீதியை நியாயப்படுத்த தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

தேசிய தேர்வு முகமை தான் நீட் தேர்வை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்துகிறது. அதேபோல், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வையும் 10 மொழிகளில் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே 2020ஆம் ஆண்டிலிருந்து ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும்.

இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.