திருவள்ளுவரும் நானும் பாஜக சாயத்தில் சிக்கமாட்டோம் – ரஜினிகாந்த் பேட்டி

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 12:20

சென்னை,

எனக்கும் திருவள்ளுவருக்கும் காவிச்சாயம் பூச பாஜக முயற்சிக்கிறது அதில் நாங்கள் இருவரும் சிக்கமாட்டோம் என ரஜினி காந்த் இன்றைய பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இயக்குனர் பாலச்சந்தரின் சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது:

எனது கலையுலக அண்ணன் கமல்ஹாசன் மற்றும் அனைவருக்கும் நன்றி. என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, குரு, பிதாமகன் பாலச்சந்தர்தான்.

அரசியலுக்கு வந்தாலும், தாய்வீடான சினிமாவை மறக்கமாட்டார் கமல். கலையை உயிராக கொண்டிருப்பவர் கமல்ஹாசன்.

கிராபிக்ஸ் இல்லாத காலத்திலேயே அபூர்வ சகோதர்கள் படம் எடுத்தவர் கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்து விட்டு நள்ளிரவு கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று வாழ்த்தினேன். ஹே ராம் படத்தை 30, 40 தடவை  பார்த்துள்ளேன். நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் ஹே ராம், காட் பாதர், திருவிளையாடல் ஆகிய படங்கள்தான்.

ரஜினிகாந்த் பேட்டி

எனக்கு காவிச் சாயம் பூச முயற்சி நடைபெறுகிறது, நான் சிக்க மாட்டேன்  என  ரஜினி திட்டவட்டமாக தெரிவித்தார்.

திருவள்ளுவருக்கு காவி சாயம் போல, எனக்கும் பா.ஜ.க. சாயம் பூச பார்க்கிறார்கள். வள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்ட மாட்டேன் .

திருவள்ளுவர் நாத்திகர் இல்லை, ஆத்திகர் ; அவரது குறளை பார்த்தாலே தெரியும்.

திருவள்ளுவருக்கு காவி அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம்.

மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது. காவி விவகாரத்தை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன.

எனக்கு பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதிகாக்க வேண்டும்.

நான் எப்போதும் வெளிப்படையாகத்தான் பேசுவேன். தமிழகத்தில் சரியான ஆளுமையான, தலைமைக்கு வெற்றிடம் உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை –

அரசியல் கட்சி தொடங்கும்வரை திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

மத்திய அரசு சிறப்பு விருது அளிப்பதற்கு நன்றி.

இவ்வாறு, போயர் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறினார்.