மகாராஷ்டிர அரசியலில் புது திருப்பம்: ஆட்சி அமைக்க பட்னாவிசை அழைக்க ஆளுநர் முடிவு

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2019 20:27

மும்பை

மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் முன்வராத காரணத்தினால், கூடுதலான சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பட்னாவிசை அரசு அமைக்க அழைப்பதென்று மாநில ஆளுநர்  கோஷ்யாரி முடிவு செயதுள்ளார். இன்று அல்லது நாளை அழைப்பு அனுப்பப்படும் என தெரிகிறது.

கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது அக்டோபர் மாதம் 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனை 56 இடங்களைப் பிடித்தது.

மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் 56 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. மீதமுள்ள 29 இடங்களை பிற அரசியல் கட்சிகளும் சுயேட்சைகளும் கைப்பற்றியுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னரே தேர்தல் கூட்டணி அமைத்த பாரதிய ஜனதா கட்சியும் சிவனையும் ஆட்சி அமைப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன.

அமைச்சரவை பங்கீடு, முதலமைச்சர் பதவியை இரண்டரை வருடங்களுக்கு எங்களுக்குத் தர வேண்டும் என்ற சிவ சேனையின் கோரிக்கை காரணமாக இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணி சார்பில் உரிமை கோரவில்லை.

இந்த நிலையை மகாராஷ்டிர மாநில ஆளுநரிடம்பாஜக தலைவர்கள் தெரிவித்தார்கள்.

இந்தச் சூழலில் ஆளுநர் சட்ட விதிகளின் படியும் மரபுப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆளுநரிடம்  தெரிவிக்கப்பட்டது.

மாநில பாஜக தலைவர் சந்திர காந்த் பாட்டில் தலைமையில் ஆளுநரை இன்று சந்தித்த குழுவினர் இந்த செய்தியை ஆளுநரிடம் குறிப்பிட்டனர்

அட்வகேட் ஜெனரல் அழைப்பு

இதை தொடர்ந்து மாநில அட்வகேட் ஜெனரல் அஷுதோஷ் கும்பகோனி ஆளுநர் மாளிகைக்கு அழைக்கப்பட்டார். அவருடன் ஆளுநர் மகாராஷ்டிரத்தில் நிலவும் சட்ட சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்றால் கூடுதல் இடங்களைப் பெற்ற அரசியல் கட்சியை ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் அழைக்கலாம் என்று அஷுதோஷ் கும்பகோனி ஆளுநருக்கு விளக்கமளித்தார். அவ்வாறு அழைக்கப்படும் கட்சி ஆட்சி அமைக்க முடியாவிட்டால் இரண்டாவது கூடுதலான இடங்களைப் பெற்ற கட்சியை, ஆளுனர் ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்றும் அஷுதோஷ் கும்பகோனி தெரிவித்தார். மேலும் சட்டமன்றத்தின் ஆயுள் காலம் நவம்பர் 9ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்குள் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மேலும் காபந்து அரசின் ஆயுட்காலம் எவ்வளவு என்பது அரசியல் சட்டத்தில் நிர்ணயிக்கப்படவில்லை. அதனால் ஆளுநர் எந்தவித தயக்கமும் இல்லாமல் கூடுதல் இடங்களை வென்றுள்ள அரசியல் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்றும் மற்ற சட்ட நிபுணர்களும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

மகாராஷ்டிர மாநில முன்னாள் அட்வகேட் ஜெனரல்களும் இதே கருத்தை ஆளுநருக்கு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி அமைக்கும்படி மாநில ஆளுநர் கோஷியாரி அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி பதவி ஏற்ற பிறகு பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கு 40 இடங்கள் தேவைப்படுகிறது. அந்த இடங்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அழைப்பை ஏற்று அரசு அமைக்க பாரதிய ஜனதாக் கட்சியும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

சிவசேனையும் தயாராகிறது

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனை சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று உத்தவ் தாக்கரேயின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீண்டும் சிவசேனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் 50% சிவசேனை வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள் முதலமைச்சர் பதவியையும் சிவசேனைக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

சிவசேனை சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நிறைவடைந்ததும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அருகில் உள்ள ரங்க்சாரதா என்ற ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கேயே சிவசேனை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வேண்டும் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

சிவசேனைக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளன என்று சிவசேனை எம்பி சஞ்சய் ரவுத் பின்னர் கூறினார்.

நிதின் கட்காரி மறுத்தார்

இதற்கிடையே மத்திய அமைச்சராக உள்ள நிதின் கட்காரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்படும் மகாராஷ்டிர அரசில் முதல்வராக பொறுப்பேற்பார் என்று மும்பையில் ஒரு செய்தி உலவி வருகிறது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று நிதின் கட்காரி மறுத்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் பட்னாவிஸ்தான். அவர்தான் முதல்வராக பொறுப்பேற்பது நியாயம் என்றும் கட்காரி கூறினார்.

மகாராஷ்டிர அரசு அமைக்கும் விஷயத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் பாகவத் பெயரை யாரும் இழுத்து முடிச்சு போடக் கூடாது என்றும் கட்காரி குறிப்பிட்டார்.