விரைவில் அயோத்தி தீர்ப்பு: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2019 18:41

புதுடில்லி

அயோத்தி வழக்கில் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வர உள்ளதால் மாநில அரசுகள் தத்தம் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெறுகிறார். எனவே அதற்குள்ளாக அயோத்தி வழக்கு உள்ளிட்ட ஒரு சில முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் அயோத்தி உட்பட உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அயோத்தியில் பாதுகாப்பு படையினர் 12,000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக 4 ஆயிரம் பேர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சட்ட ஒழுங்கை விழிப்புடன் கண்காணிக்கும்படி என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. உளவுத்துறையைப் பயன்படுத்தி  மாநில பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். உளவுத்துறை அறிக்கையின் மாநில பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்,. கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவியுங்கள்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் உங்கள் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கவேண்டும். அனைத்தும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது, என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

அயோத்தி தீர்ப்பு எந்த நேரத்திலும் வழங்கப்படலாம் என்பதால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே போலீஸ் விடுமுறையில் உள்ள தனது ஊழியர்களின் விடுமுறையை எல்லாம் ரத்து செய்துள்ளது. உடனடியாக அனைவரும் பணிக்குத் திரும்பும்படி உத்தரவிட்டுள்ளது. எல்லா ரயில்களும் போலீஸ் படைபிரிவின் பாதுகாவலோடுதான் இயங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.