![]() | ![]() |
ஒரு வழியாக உள்ளாட்சித் தேர்தல் வந்தே தீரும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆட்சியினரும் எப்படியும் வரும் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக அதிமுக தரப்பில், மாநில, மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டங்கள், தொகுதி வாரியான செயல் வீரர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2016–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17,19 தேதிகளில் நடைபெறும் என்று செப்டம்பர் மாதம் 16–ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் 19–ம் தேதியன்று சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் அறிவிப்பினையும் வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் அதிமுக, சார்பில் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கல் தொடங்கியது. திமுக தரப்பிலும் முதல்கட்ட பட்டியலை வெளியிட்டனர்.
இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடந்த மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சி அமைப்புப் பட்டியலில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பதால், இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்து விட்டு சுழற்சி முறையையும், முறையான இட ஒதுக்கீட்டையும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சி தேர்தலையேரத்து செய்து விட்டார். மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அரசாணைகளுக்கும் அவர் தடை விதித்தார். இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தது.
பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு, வார்டு மறு வரையறைப்பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டது. இதில் காலதாமதம் ஏற்பட்டதால், திமுக தரப்பிலும், பொது வழக்காகவும், பலர் நீதி மன்றத்துக்கு சென்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்தி மக்கள் பிரதி நிதிகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தின் படி, தாமதம் இன்றி விரைவாக தேர்தலை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டன.
இதனால் அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் உள்ளாட்சித் தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடத்த முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. தேர்தலை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நியமிக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறும், வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தவிர, இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக, அதிமுக சார்பில், ஆங்காங்கே கட்சியின் செயல்வீரர் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 6–ம் தேதி புதன்கிழமை, சென்னை ராயப்பேட்டை பகுதியிலுள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலாசிக்கப்பட்டுள்ளது. அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளிடம் இடப்பங்கீடு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கவும் தீர்மானித்து உள்ளனர். திமுக தரப்பிலும் கூட்டணிக் கட்சிகளிடம் இடப்பங்கீடு தொடர்பாக விரைவில் பேச இருப்பதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அபரிமிதமான வெற்றியை பெற்ற திமுக, அதே உற்சாகத்தோடு, உள்ளாட்சித் தேர்தலையும் சந்தித்து அதிக இடங்களை கைப்பற்றலாம் என கணக்கு போட்டது. படுதோல்வியை சந்தித்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்தில் இருந்த ஆட்சிக் கட்சியான அதிமுகவுக்கு விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றி புதிய தெம்பை கொடுத்திருக்கிறது. இதே வேகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்திவிடலாம் என்று கருதி அக்கட்சியும் களத்தில் இறங்க முடிவு செய்துவிட்டது. விரைவில் இரண்டு கட்சிகளின் சார்பிலும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுக்களை தொடங்க வாய்ப்புண்டு
இரண்டு அணியினருமே, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடரும் நாங்கள் முகாம் மாறமாட்டோம் என உறுதிபடக் கூறியுள்ளனர். ஆனால், இடப்பங்கீட்டில் சிக்கல் ஏற்படுமேயானால் அதிருப்தி உருவானால், எதுவும் நடக்க வாய்ப்பு உண்டு. திமுக அணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற இடப்பங்கீட்டு அடிப்படையில், சுமார் 30 சதவீத இடங்களை உள்ளாட்சி அமைப்புகளில் தரவேண்டும் என கோரிக்கை வைக்க இருப்பதாக, அக்கட்சியின் முக்கிய தலைவர்களே கூறுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் கூட தங்களுக்கு கணிசமான அளவிற்கு இடங்கள் தேவை என வலியுறுத்த வாய்ப்புகள் உண்டு.
திமுகவை பொறுத்தவரை சுமார் 70 சதவீத இடங்களில் திமுக போட்டியிடுவது என்றும், மீதமுள்ள 30 சதவீத இடங்களை மட்டுமே கூட்டணிக் கட்சிக்கு வழங்க முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். இதை கூட்டணி கட்சியினர் ஏற்பார்களா? எனத் தெரியவில்லை.
இதே போன்று அதிமுக கூட்டணியிலும் சிக்கல் உருவாக வாய்ப்பு உள்ளது. இக்கூட்டணியில் உள்ள பா.ம.க. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, மாவட்டக் கவுன்சிலர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும், கவுன்சிலர் பதவிகளுக்கும் கனிசமான இடங்களை கோரிப்பெற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிக இடங்ளில் போட்டியிடத் திட்டமிட்டிருக்கும் பா.ஜ. அதற்கு முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 25 சதவீத அளவிற்கு இடங்களை பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளும் என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர். இது தவிர த.மா.கா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. இவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது அதிமுகவுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருக்கும். ஆனாலும், தங்களிடம் உள்ள கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தி, இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் போது யார் கை ஓங்கும், எந்த கட்சியின் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்பதுதான் பெரும் கேள்வியாக எழுந்து நிற்கிறது.