துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 54

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019

நெல்லைச் சீமை ஒரு மீள்பார்வை!

நெல்லை என வழங்கப்படும் – திருநெல்வேலி மாவட்டம், தமிழகத்தின் தென் பகுதியில் கிழக்கு கடலோரமாக அமைந்துள்ளது. பிற்காலத்தில் இதன் ஒரு பகுதி தூத்துக்குடி மாவட்டாக பிரிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நெல்லை மாவட்டத் தின் ஒட்டு மொத்த பரப்பளவு நான்கா யிரத்து 337 சதுர அடி கொண்டதாக இருந்தது. இதன் வடக்கே ராமநாதபுரம் மாவட்டமும் (இப்போது விருதுநகர்) கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்மேற்குப் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டமும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்குள்ள மலைப் பகுதிகள் சுமார் 3000 மீட்டர் முதல் 5000 மீட்டர் அளவில் உயரம் கொண்டவை. அடர்த்தியான காடுகள் இப்பகுதியில் உள்ளன. இங்குள்ள அகத்திய மலைதான் மிக உயரமானது. இதன் உயரம் சுமார் 6200 அடி. நாங்குநேரி அருகிலுள்ள மகேந்திரகிரி எனும் மலை சுமார் 5,370 அடி உயரமுள்ளது. இந்த மலை மீது இருந்துதான் அனுமன் இலங்கைக்கு தாவியதாக ராமாயணம் கூறும்.

நெல்லை மாவட்டத்திலுள்ள ஆறுகள் யாவும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் தோன்றி கிழக்கு நோக்கி ஓடி வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும். இவற்றில் முக்கியமானது தாமிரபரணி ஆறு ஆகும். இது அகத்திய மலையில் தோன்றுகிறது. மணிமுத்தாறு, சிற்றாறு ஆகியவை இதன் துணை ஆறுகளாகும். இம்மாவட்டத்தின் நீர்பாசனத்திற்கு இந்த ஆறுகளே துணை செய்கின்றன.

தாமிரபரணி ஆற்றில் கலியாணி தீர்த்தம் எனும் நீர்வீழ்ச்சிக்கு மேலே அணைக்கட்டி பாபநாசம் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நீர் மின் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாற்றின் குறுக்கே மற்றொரு பெரிய அணையும் கட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு, எள், வேர்க்கடலை, பருத்தி, வாழை, பாசிப்பயிறு, உளுந்து, கொள்ளு (காணப்பயிறு), மிளகாய், வெங்காயம் உள்ளிட்டவை விளைகின்றன. நெல்லை அம்பாசமுத்திரத்தில் அரிசி ஆராய்ச்சி நிலையமும், கோவில்பட்டியில் விவசாய ஆராய்ச்சி நிலையமும் இருக்கின்றன.  

இந்த மாவட்டத்தில் நிறைய பஞ்சாலைகள் உள்ளன. பனைப் பொருட்கள் தயாரிப்பது, பனை வெல்லம், பனங்கற்கண்டு, இது சார்ந்த இனிப்பு பொருட்கள் உற்பத்தி என்பது இம்மாவட்டத்தின் பிரத்யேக தொழிலாக உள்ளது. குறிப்பாக திருநெல்வேல் அல்வா என்பது உலகப் பிரசித்தம். கடற்கரையோரப் பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது. இம்மாவட்டத்தின் பத்தமடை பாய் மிகவும் பிரசித்தி பெற்றது.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, பாபநாசம், திருக்குற்றலாம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய நகர்களில் சிவத்தலங்களும், ஆழ்வார் திருநகரி, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் வைணவத் தலங்களும், திருச்செந்தூர், கழுகுமலை ஆகிய இடங்களில் சுப்பிரமணியத் தலங்களும் உள்ளன. தென்காசி பகுதியிலுள்ள குற்றாலம் அருவி மிகவும் பிரசித்தி பெற்றது.

திருநெல்வேலியை பாண்டிய நாட்டு சைவத் திருப்பதி என்பார்கள். ஐந்து சபைகளில் ஒன்றான தாம்பிர சபையை உடையது. வேத சர்மா என்னும் அந்தனன் உலர்த்தி வைத்திருந்த நெல்லை வெள்ளம் அடித்துச் செல்லா வண்ணம் சிவபெருமான்  வேலியிட்டுக் காத்ததால், ‘திருநெல்வேலி’ என்ற பெயர் உருவானதாக புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள காந்தியம்மை உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில் பிரசித்தி பெற்றது. அதே போல இப்பகுதியிலுள்ள தேரி மணல் மேடுகளில் ஆய்வு செய்தபோது கிடைத்த படிகக்கற்கள், சிறு கருவிகள், வெட்டுக் கருவிகள் மேலும் பல கூரிய கருவிகள் கி.மு. 6000 முதல் கி.மு.1000 வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் கிடைத்துள்ள முதுமக்கள்தாழி உள்ளிட்ட தொல்பொருட்கள், சுமார் ஆயிரம் ஆண்டு பழமை மிக்கவை என தெரிய வருகிறது.

இந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் நடைபெற்றபோது, பல்வேறு வகையான இரும்புக் கருவிகள், வெண்கலக் கலங்கள், நகைகள், கயிற்றில் கோர்க்கப்பட்ட தங்க நகைகள், நவரத்தின மணிகள் உள்ளிட்டவை  கிடைத்துள்ளன. இது தவிர, அம்மிக்கல், சிறு பெட்டிகள், மண் கலயங்கள், அதில் நெல் உமி, சிறு தானிய உமி, துணி, மரத்துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இது குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு நடைபெற்று வருகின்றன.

நெல்லை சீவலப்பேரி பகுதி யிலும் சங்கர நாயினார் கோயில் வட்டத்திலுள்ள வீரசிகாமணி எனும் ஊரிலும் இயற்கையாகவே உண்டான குகைகளில் உள்ள பாறைவெட்டு படுக்கைகள், பண்டைய காலத்தில் பவுத்தவர்களும், சமண முனிவர்களும் பயன்படுத்தி யவை. இவை மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனவும் ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர்.

இம்மாவட்டத்திலுள்ள மானூர் அம்பலவாண சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்புடை மருதூர் கோமதி அம்மன் கோயில், ஆழ்வார் திருநகரி ஆதிநாத சுவாமி கோயில், கங்கை கொண்டான் கைலாசபதி கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் எனும் குகைக்கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் 7–ம் நூற்றாண்டிலிருந்து, 10–ம் நூற்றாண்டுக் காலத்தை சேர்ந்தவை என்றும், பல்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இவை உருவாகியிருப்பதாகவும், கல்வெட்டுக்கள் மூலமாக அறியப்படுகிறது.

பொட்டல் புதூரிலுள்ள மசூதி 1674–ம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், நாகூர் மசூதிக்கு இணையானது என்றும் பாக்தாத் நகரிலுள்ள மசூதிக்கு அடுத்த படியான சிறப்பு வாய்ந்த மசூதி எனவும் இதை போற்றுகின்றனர். இந்து கோயில்  போன்ற அமைப்பில் கட்டப்பட்ட இம்மசூதியில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்தூரி என்னும் முஸ்லிம் விழாவில் இந்துக்களும், இப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதே போல கயத்தாறு பகுதியில் 17–ம் நூற்றாண்டில் கட்டிய பெரிய ரோமன் கத்தோலிக்க மாதா கோயிலும் இப்பகுதியில் பிரசித்தி பெற்றது.

ஒரு காலத்தில் தென் இந்தியாவின் ஜிப்ரால்டர் என்று கூறப்பட்ட வலிமைமிக்க பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை 1755 – 1802 காலகட்டங்களில் நடைபெற்ற பாளையக்காரர்களின் போரின்போது முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது. அதே போல 18–ம் நூற்றாண்டில் மிகவும் வலிமைமிக்க கோட்டை ஒன்று பாளையங்கோட்டையில் இருந்ததாகவும், அதுவும் பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், நாங்குநேரி வட்டம் களக்காடு பகுதியில் அமைந்திருந்த கோட்டையின் சிதைவுகள் இன்றளவும் காணப்படுகின்றன.

பல்வேறு தொன்மைச் சிறப்புகளும், கலை, கலாச்சார, நாகரிகப் பண்பாடுகளும் நிறைந்த மாவட்டமாகவே இன்றளவும் நெல்லைச் சீமை திகழ்கிறது.