5 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட அனைத்து மாநிலங்களும் உதவும்: பிரதமர் மோடி நம்பிக்கை

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2019 16:40

தர்மசாலா

இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட அனைத்து மாநிலங்களுக்கும் எல்லா இந்திய மாவட்டங்களுக்கும் ஒரு பங்கு பணி உள்ளது. அந்தப் பணியை எல்லா மாவட்டங்களும் மாநிலங்களும் சிறப்பாக நிறை வேற்றும் என்று நம்புவதாக பிரதமர் மோடி இன்று கூறினார்.

ஹிமாச்சலப்பிரதேச அரசு சர்வதேச முதலீட்டாளர்களின் இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செயதுள்ளது.

இரண்டாவது நாள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தனது துவக்க உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய விவரம்:

“இந்திய நாட்டின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக உயரும். சர்வதேச அரங்கில் இந்திய மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்கும்.

இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாவட்டமும் அதிக பொருளாதார ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட இவை அனைத்துக்கும் முக்கிய பங்கு உண்டு அந்த பங்கு பணியை அவை நிறைவேற்றும் என்று நம்புவதாக பிரதமர் மோடி கூறினார்.

”முந்தைய காலத்தைப் போல் இல்லாமல், இப்போதெல்லாம் அனைத்து மாநிலங்களும், முதலீடுகளை ஈர்க்க கடுமையாக உழைக்கின்றன. சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றல் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு உண்டு.

சர்வதேச நாடுகள் மத்தியில், எளிதில் தொழில் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது” என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.