முதல் தொல்லியல் அகழாய்வு!

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019


இன்றைய 'தொல்லியல்' என்ற நவீன அறிவுத்துறை செயற்படத் தொடங்கி சுமார் 150 ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொல்லியல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளன.

கி.மு. 1550 - 1070 வரையில் எகிப்திய அதிகாரத்தில் இருந்த, புதிய அரச கால (New Kingdom Egypt) பாரோ மன்னர்கள் பூமிக்குள் இருந்த, மனிதத்தலை கொண்ட ஸ்பிங்க்ஸ் (Sphinx) சிற்பத்தை, அகழ்ந்தெடுத்து மறுகட்டுமானம் செய்தனர்.

இது, எகிப்திய மண்ணில் ஆட்சி செலுத்திய நான்காம் அரச வம்சத்தினரால் கி.மு. 2575 - 2134 காலத்தில் கட்டப்பட்டது. காலப்போக்கில் ஸ்பிங்க்ஸ், மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு போனது.

எந்த பாரோ இதைத் தோண்டுவதற்கான ஆணையை இட்டார், என்ன மாதிரியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்கள் இதை மீட்டெடுத்தனர் என்பது பற்றி நம்மிடம் தகவல்கள் இல்லை.

ஆனால், பழைய கட்டுமானத்திற்கும், மறுநிர்மாணத்தின்போது, செய்யப்பட்ட திருத்தங்களுக்குமான வேறுபாடுகள் அங்கு வெளிப்படையாகக் தெரிகின்றன.

இந்த முயற்சியைத்தான் நாம் செய்த, முதல் தொல்லியல் அகழாய்வு (First archaeological excavation) என்று அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

–- பா.சரவணன்