ரப்பரின் கதை!

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019

வாகன டயர், காலணிகள், மழைக்கோட்டு, மாணவ, மாணவியர் பயன்படுத்தும் அழிப்பான், பந்து, பலுான் என, ரப்பர் பொருள் இல்லாத உலகை, இன்று கற்பனை செய்ய முடியாது. மனித நாகரிகத்தில் குறுகிய காலத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்களைத் தேடி அலைந்த ஐரோப்பிய மாலுமிகள், தென் அமெரிக்கா கண்ட பகுதியில், ரப்பர் உருண்டைகளைக் கண்டனர்.

அங்கு, ஒரு வகை மரத்தில் வழிந்த பாலை சேகரித்து, உருட்டி, சிறுவர், சிறுமியர் விளையாடினர். அது, தரையில் மோதிய போது, எம்பி குதித்து ஆட்டம் காட்டியது.

அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ், 1490ல், இந்த உருண்டைகளை கண்டார். ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு, அதன் மாதிரிகளை எடுத்து வந்தனர். உடனடியாக, ஐரோப்பியர் கவனத்தை அது ஈர்க்கவில்லை. கிட்டத்தட்ட, 200 ஆண்டுகள் கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது.

ஐரோப்பாவில், பிரான்ஸ் அறிவியல் கழகம், அந்த உருண்டைகளை ஆராயத்துவங்கியது. அதன் வினோத தன்மையால் வியந்த, அறிஞர் சார்லஸ் மேரோ, அது பற்றிய அறிவியல் உண்மைகளை, 1751ல் வெளியிட்டார். பல வகையிலும், அதை பயன்படுத்த முடியும் என உலகறியச் செய்தார்.

உடனே, தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காட்டில், ஒரு குழு ஆய்வு செய்தது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில், ரப்பர் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலை துவங்கப்பட்டது. ரப்பர் பொருட்கள் புழக்கத்துக்கு வந்தன.

பென்சிலால் எழுதியதை, ரப்பர் துண்டால் தேய்த்தால், அழியும் என்பதை, 1770ல் கண்டறிந்தார், வேதியியல் அறிஞர் ஜோசப் ப்ரீஸ்ட்லி. ஆங்கில சொல்லான, 'ராப்' என்பதற்கு, 'தேய்த்தல்' என்று பொருள். இதில் இருந்து தான், 'ரப்பர்' என்ற பெயர் நிலைத்தது.

ரப்பர் பாலை உறையவைத்து, அழகிய காலணியாக உருவாக்கி, 1755ல், போர்ச்சுக்கல் மன்னருக்கு பரிசளித்தனர். போர் வீரர்கள் பயன்படுத்த, பைகளும் தயாரிக்கப்பட்டன. எளிமையாக இருந்ததால், பிரபலமாகிவிட்டது.

வாகனங்களுக்கு டியூப், கண்டறியப்பட்ட பின், ரப்பர் முக்கியத்துவம் பெற்றது; அதன் தேவை அதிகரித்தது. மனித நாகரிகத்தை விரைவு படுத்தியது.

ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்தவர் ஹென்றி விக்ஹாம். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இருந்து, 70 ஆயிரம் ரப்பர் மர விதைகளை, 1870ல் எடுத்து வந்தார். இங்கிலாந்தில், 2000 விதைகள் முளைத்தன.

தொடர்ந்து, இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த, ஆசிய நாடுகளில், பயிரிட திட்டம் தீட்டப்பட்டது. ஆசிய நாடுகளான இலங்கை, மலேஷியாவில், 1905ல் சோதனை முறையில், மிகவும் ரகசியமாக பயிரிடப்பட்டது. திட்டம் வெற்றி பெற்றதால், சாகுபடி பரப்பு விரிவானது. அது பணப்பயிராக உயர்ந்தது. சமூக, பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

இயற்கையாக கிடைக்கும் ரப்பர் பாலுடன், வேதிப்பொருளான கந்தகத்தைச் சேர்த்தால், வலிமை மிக்க பொருட்கள் தயாரிக்க முடியும் என, அமெரிக்க அறிஞர் குட் இயர், 1839ல் கண்டறிந்தார்.

துவக்கத்தில், வாகன டயர்கள், வெண்மை நிறத்தில் தான் இருந்தன. 'கார்பன் பிளாக்' என்ற பெட்ரோலிய கச்சாபொருளை, ரப்பர் பாலுடன் சேர்த்த போது, உறுதி அதிகரித்தது. தொடர்ந்து, 1912 முதல் வாகனங்களின் டயர், கரிய நிறத்திற்கு மாறியது.

ரப்பர்... உலகம் முழுவதும் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.

குழந்தைகளே... ரப்பர் மரம் பற்றிய அறிவியல் உண்மைகளை அறிந்தால், பல தொழில்கள் செய்யலாம். நாட்டை உயர்த்தி, நாமும் உயரலாம்.


பயன் மரம்!

* ரப்பர் மரத்தை, தென் அமெரிக்கர்கள், 'கூச்சீ' என்பர்; கண்ணீர் வடிக்கும் மரம் என்று பொருள். தாவரவியல் பெயர் கிவியா பிரேசிலியன்சிஸ். 30 மீட்டர் வரை வளரும். மூன்று மீட்டர் சுற்றளவு வரை பெருக்கும். நடவு செய்த, ஏழாம் ஆண்டு முதல், 50 ஆண்டுகள் வரை பால் தரும். பின், பலகையாக பயன்படும்

* கூர்முனை கத்தியால், மரத் தண்டில், வெட்டுவாய் உருவாக்கி, கிண்ணத்தில் பால் சேகரிப்பர். முதல், ஆறு ஆண்டுகள் மரத்தின் ஒரு புறமும், அடுத்த, ஆறு ஆண்டுகள் மறுபுறமும் வெட்டுவாய் உருவாக்குவர்

* மர பாலை, 'லாடெக்ஸ்' என்பர். இதில், 60 சதவிதம் ஹைட்ரோ கார்பனும், பிசினும் உள்ளன. எண்ணெய், புரோட்டீன், அமிலங்கள், உப்புகள், சர்க்கரை சத்துக்களும் உள்ளன. பால், வெண்மை நிறமானது; பருவத்துக்கு ஏற்ப, மஞ்சள், வெளிர் ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறங்களிலும் இருக்கும்

* உலக அளவில் ரப்பர் தேவை, 1830ல், 150 டன்; அது, 1856ல், 7,000 டன்னாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 23 ஆயிரம் டன்னாக, அதாவது, 23 ஆயிரம் கோடி கிலோவாக உயர்ந்தது. இதில், 60 சதவீதம் தேவையை, செயற்கை ரப்பர் தான் நிறைவேற்றுகிறது

* ரப்பர் உற்பத்தியில், ஆசியா கண்டம் முதலிடம் வகிக்கிறது. இங்குள்ள தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா, இந்தியா ஆகிய நாடுகள், முறையே முதல், நான்கு இடங்களை பிடித்துள்ளன

* நம் நாட்டில், 90 சதவீதம் ரப்பர், கேரளாவில் உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டில், 25 ஆயிரம் டன் ரப்பர் உற்பத்தியாகிறது.

* இந்திய ரப்பர் வாரியம், 1947ல் அமைக்கப்பட்டது. இது, ரப்பர் தொழிலை மேம்படுத்த ஆராய்ச்சி செய்கிறது; விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குகிறது; உற்பத்தியாகும் ரப்பரை விற்பனை செய்யவும் உதவுகிறது

* தமிழகத்தில், ரப்பர் பயிரிட துவங்கிய போது ஏற்பட்ட மாற்றங்களை, புதினமாக எழுதியுள்ளார், நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன்.