எல்­லாம் தெரிந்த ஏகாம்­ப­ரம்!

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019

காட்சி தொழில் நுட்பம்!

சுலபமாக கையாள தக்க எளிய வடிவமைப்புடன், 'டிவி' ரகங்கள் சந்தையில் குவிந்து வருகின்றன. எல்.இ.டி., - எல்.சி.டி., - ஓ.எல்.இ.டி., என, தொழில் நுட்பங்களில் தயாரானவை. தொழில் நுட்பமே விலையை நிர்ணயிக்கிறது. எதை வாங்குவது என்ற திணறல் ஏற்படும். தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டால், வாங்குவது எளிது.

'லிக்விட் கிரிஸ்டல் டிஸ்பிளே' என்ற ஆங்கில சொற்றொடரின் சுருக்கமே, எல்.சி.டி., என்பதாகும். இதை, திரவ படிக பிம்பம் என அழைக்கலாம்.

அதுபோல, 'லைட் எமிட்டிங் டையோடு' என்பதன் சுருக்கமே, எல்.இ.டி., என்பதாகும். இதை, 'ஒளி குமிழ்' எனலாம்.

இந்த, இரண்டு தொழில் நுட்பங்களும், சிறு வேறுபாடுகளைக் கொண்டது.

சமீபத்தில் வந்தது, ஓ.எல்.இ.டி., என்ற தொழில் நுட்பம். 'ஆர்கானிக் லைட் எமிடிங் டையோடு' என்ற ஆங்கில தொடரின் சுருக்கம். கரிம ஒளி குமிழ் என, தமிழில் சொல்லலாம். மிகவும் முன்னேறிய தொழில் நுட்பம் இதுதான்.

மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்க்கலாம்.

திரவ படிக பிம்பம் என்ற எல்.சி.டி., 'டிவி'யில், கண்ணாடி இழைக்கு நடுவே உள்ள திரவ படிவத்தில் ஒளி ஊடுருவி, அலைக்கற்றையாகி காட்சியை உமிழும்.

இதில், புளோரசன்ட் விளக்கு பயன்படுத்தப் படுவதால், ஒளி கசியும்; 'டிவி'யின் ஓரத்தில் காட்சி துல்லியம் குறையும். கண் கூசும் அளவு வெளிச்சம் வரும்.

ஒளி குமிழ் என்ற எல்.இ.டி., யில், செமி கண்டக்டர் என்ற கருவி வழியாக ஒளி பாயும். 'டிவி' மிகவும் மெலிதாக இருக்கும். காட்சிகளில் தெளிவு இருக்கும். வண்ணச் சக்கரம் அல்லது ஆர்.ஜி.பி., என்ற சிவப்பு, பச்சை, நீல வண்ண விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது. காட்சிக்கு ஏற்ப, ஒளி வண்ணங்கள் குழைந்து, துல்லியத்தை தரும். மின்சாரத்தையும் சேமிக்கும்.

இந்த தொழில் நுட்பத்தில் உருவான 'டிவி'க்கள், அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில், கடந்த, 10 ஆண்டுகளாக பிரபலமாக உள்ளன.

இரண்டு வகை, 'டிவி'க்களையும் ஓரமாக அமர்ந்து பார்த்தால், மாறுபட்டு தெரியும். ஓரங்களில் சீராக ஒளி பாயாததே இதற்கு காரணம்.

கரிம ஒளி குமிழ் என்ற ஓ.எல்.இ.டி., தொழில்நுட்பம், 2013ல் புழக்கத்துக்கு வந்தது. இந்த ரக, 'டிவி'க்கள் மிக மெலிதாக இருக்கும்; எடையும் குறைவு. வண்ணங்கள் குழைந்து, நேரடியாக பார்ப்பது போல் இருக்கும்.

எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், காட்சிகள் சிறப்பாகவும், இயல்பாகவும் தெரியும். குமிழில், ஒளி சீராக பாய்வதே இதற்கு காரணம்.

இப்போது, கியூ எல்.இ.டி., மற்றும் மைக்ரோ எல்.இ.டி., போன்ற முன்னேறிய தொழில்நுட்பங்கள் வளர்ந்த நாடுகளில் வர துவங்கி விட்டன.

குழந்தைகளே... தேவையில்லாமல், 'டிவி' முன் அமர்ந்து பொழுதை போக்கக் கூடாது. அதற்கு பதிலாக, புதிதாக அறிமுகமாகும் தொழில் நுட்பங்களை கற்றறிந்து கொள்ள வேண்டும்.

சொல்லறிவோம்...

எல்.சி.டி: திரவ படிக பிம்பம்

எல்.இ.டி: ஒளி குமிழ்

ஒ.எல்.இ.டி: கரிம ஒளி குமிழ்