சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 417 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 06 நவம்பர் 2019

நடிகர்கள் : விஷால், பாரதிராஜா, லட்சுமி மேனன், விக்ராந்த், சூரி, ஷரத் லோஹிதஷ்வா, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர். இசை :

டி.இமான், ஒளிப்பதிவு : ஆர். மதி, எடிட்டிங் : ஆண்டனி, தயாரிப்பு : விஷால் பிலிம் பேக்டரி. திரைக்கதை, இயக்கம் : சுசீந்திரன்.

ஓய்வு பெற்ற அரசு பணியாளரான கல்யாணசுந்தரம் (பாரதிராஜா) தனது இரு மகன்கள் குடும்பம் என மகிழ்வோடு வாழ்கிறார். மூத்த மகனான நாகராஜ் (குரு சோமசுந்தரம்) நேர்மையாக பணியாற்றும் அரசு அதிகாரி. இளைய மகனான சிவகுமார் (விஷால்) மொபைல் போன்களை விற்பது மற்றும் சர்வீசுக்கான கடை வைத்திருக்கிறார். தன் வீட்டில் குடியிருக்கும் பள்ளி ஆசிரியை மலர்விழியை (லட்சுமி மேனன்) சிவா விரும்புகிறார். தன் நண்பர்கள் சேது (விக்ராந்த்) மற்றும் சூரி உதவியுடன் மலர் மனதில் இடம் பிடிக்கிறார். சேது தனது தோழி அமுதாவை தாதாவின் கையாளான பரணியிடம் (ஹரிஷ் உத்தமன்) இருந்து காப்பாற்றுகிறார். இந்த போராட்டத்தில் காயமடையும் பரணி பழிவாங்க காத்திருக்கிறான்.

தாதா சிம்மக்கல் ரவி (ஷரத் லோஹிதஷ்வா) மதுரையை ஆட்டிப் படைக்கிறார். அவரது ஊழலுக்கு பணியாத நேர்மையான அதிகாரியான நாகராஜை விபத்து எனும் போர்வையில் கொல்கிறார். அவரது கர்ப்பிணி மனைவியும், மகளும் உடைந்து போகின்றனர். மகன் மேல் மிகுந்த பாசம் கொண்ட கல்யாணசுந்தரம், மகனது இறப்பு கொலை என்று அறிந்து பழிவாங்குவதற்காக கூலிப்படையை தேடியலைகிறார். அவர் ஏற்பாடு செய்யும் ரவுடிகள் தாதாவிடம் மாட்டிக்கொள்கின்றனர். தனது அண்ணனின் மரணத்திற்காக பழிவாங்க துடிக்கும் சிவா அதற்காக பொறுமையாக அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்து திட்டங்கள் தீட்டுகிறான். தாதா குழுவிடம் மாட்டிக் கொள்ள இருந்த தந்தையையும், அவரது பணத்தையும் சிவா ரகசியமாக காப்பாற்றுகிறான்.

இதற்கிடையே சிவாவுக்கும், மலருக்கும் திருமணம் நிச்சயமாகிறது. தந்தைக்கு தெரியாமல் தாதாவை கொல்ல சிவா போடும் திட்டம் தோற்று தாதாக் குழுவிடம் மாட்டிக்கொள்கிறான். தப்பித்து ஓடுகையில் சந்திக்கும் அமுதா மூலம் நண்பன் சேது, தாதா குழுவால் கொல்லப்பட்டது தெரியவர கொந்தளிக்கும் சிவா அனைவரையும் கொல்கிறான். தாதாவை மட்டும் குகைக்குள் தள்ளி உயிரோடு தவிக்க விடுகிறான். சிவா – மலரின் திருமணம் அனைவரையும் சந்தோஷப்படுத்துகிறது. நான்கு நாட்கள் கழித்து  பிணமாக மீட்கப்படும் தாதாவின் செய்தியை பார்த்து கல்யாணசுந்தரம் மகிழ்கிறார். கல்யாண செலவு போக மீதமிருக்கும் பணத்தை பார்க்கும் கல்யாணசுந்தரம் நடந்த உண்மைகளை புரிந்து மகன் சிவாவை மகிழ்வோடு அணைத்துக் கொள்கிறார்.