தாய்லாந்தில் பிரதமர் மோடி – ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் சந்திப்பு

பதிவு செய்த நாள் : 05 நவம்பர் 2019 13:31

பாங்காக்

தாய்லாந்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸனையும் வியட்நாம் பிரதமர் நகுயென் சூவான் பூக்  ஆகியோரை சந்தித்துப் பேசினார். பயண நிகழ்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்.

ஆசியன் நாடுகளுடன் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து நாட்டிற்கு வந்திருந்தார். மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி, பல நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், கிழக்காசிய மாநாட்டிற்கு இடையில் ஆஸ்திரேலிய  பிரதமர் ஸ்காட் மாரிஸனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வது குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், இலவச, திறந்த, வெளிப்படைத்தன்மையான மற்றும் உள்ளடக்கிய இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, செழிமை ஆகியவற்றை ஊக்குவிக்க ஒத்துழைப்பை நல்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், பாதுகாப்புத்துறையில் இருதரப்பும் ஒத்துழைப்பு நல்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக கடல்சார் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை வழங்குவதாக இருதரப்பும் முடிவு செய்துள்ளன. இதைத்தவிர, தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க ஒன்றிணைந்து செயல்பட இருநாட்டு பிரதமர்களும் முடிவு செய்தனர்.

2020ம் ஆண்டு ரெய்சினா மாநாட்டில சிறப்புரை ஆற்ற ஆஸ்திரேலியா பிரதமர் மாரிஸனை வரவேற்பதாக  மோடி  அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மாரிஸன் உறுதியளித்தார்.

தாய்லாந்தில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் மாநாடுகளும் முடிவடைந்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு திரும்பினார்.