ஐஎஸ் தலைவன் பாக்தாதியின் சகோதரி சிரியாவில் கைது!

பதிவு செய்த நாள் : 05 நவம்பர் 2019 12:22

அங்காரா

சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பாக்தாதி, பதுங்கி இருப்பதை துப்பறிந்து கடந்த அக்டோபர் 26ம் தேதி, அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து அல் பாக்தாதி பலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அல் பாக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா (வயது 65), அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை துருக்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணம் அஜாஸ் நகரில் கணவர் மற்றும் உறவினர்களுடன் வசித்துவந்த ராஸ்மியாவை நேற்று மாலை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ராஸ்மியா தொடர்பில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரை கைது செய்து விசாரணை நடத்துவதன் மூலம், உளவுத்துறைக்கு முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.