பிராந்திய பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது : பிரதமர் மோடி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2019 20:59

பாங்காக்,

16 நாடுகள் இடையாயான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு (Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா முன்வைத்த கவலைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததால் இந்த ஒப்பந்தத்தில் இணைய போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகள் மற்றும் அந்நாடுகளின் சுதந்திர வர்த்தக ஒப்பந்ததாரர்களான சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 16 நாடுகளின் கூட்டமைப்பு ஆர்.சி.இ.பி (RCEP) என்றழைக்கப்படும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு ஆகும்.

இந்த கூட்டமைப்பின் மாநாடு தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 3600 கோடி மக்கள் தொகை கொண்ட 16 ஆர்.சி.இ.பி நாடுகளை சுதந்திர வர்த்தக மண்டலமாக மாற்றுவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட துவக்கம் முதல் இந்தியா தயக்கம் காட்டி வந்தது.

இந்த ஒப்பந்தத்தால் வெளிநாட்டு பொருட்கள் இந்தியாவுக்கு தடையில்லாமல் இறக்குமதியாகும். அதன் விளைவாக சீனாவின் மலிவான பொருட்கள் இந்திய சந்தைகளில் குவிய வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் உள்நாட்டில் சிறு குறு வணிகர்களின் பொருளாதாரம் நசிய வாய்ப்புள்ளதாக இந்தியா தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இந்தியா தன் தரப்பு பிரச்சனைகளை உறுதியாக வலியுறுத்தி வந்தது.

இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசு இதில் கையெழுத்திட கூடாது என வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என பிரதமர் மோடி இன்று ஆர்.சி.இ.பி மாநாட்டில் உறுதியாக கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.சி.இ.பி கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி தன் முடிவை அறிவித்தார்.

பிரதமர் மோடி பேச்சு

இந்த ஒப்பந்தம் குறித்து இன்று ஆர்.சி.இ.பி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதன் விவரம்:

ஆர்.சி.இ.பி கூட்டமைப்பின் வழிகாட்டு கொள்கைகள் மற்றும் அடிப்படை லட்சியங்களை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கவில்லை. இந்தியா முன்வைத்த கவலைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு இந்த ஒப்பந்தம் திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை. எனவே இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது சாத்தியமில்லை.

எங்கள் விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்துறையினர் ஆகியோருக்கு இந்த முடிவில் முக்கிய பங்கு உள்ளது. அதேபோல் இந்தியாவை மிக பெரிய சந்தையாக மாற்றி, வாங்கும் திறனில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெயர் பெற காரணமாக இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் இதில் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

இந்தியா மிக சிறந்த பிராந்திய ஒருங்கிணைப்புக்காக துணை நிற்கும். அதேபோல் சர்வதேச ஒழுங்குமுறை விதிகளுடன் கூடிய சுதந்திர வர்த்தகத்திற்கு ஆதரவளித்து வருகிறது. ஆர்.சி.இ.பி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கியது முதல் இந்தியா இதில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டது.

ஆர்.சி.இ.பி ஒப்பந்தம் தொடர்பாக ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் இன்றைய நிலவரத்தை ஆராயும் போது உலக பொருளாதாரம், வர்த்தக சூழ்நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை நாங்கள் கவனிக்காமல் இருக்க முடியாது.

இந்தியர்களின் நலனுடன் ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது எனக்கு நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. எனவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மகாத்மா காந்தியடிகளின் கொள்கையும் எனது மனசாட்சியும் இடம் கொடுக்கவில்லை என பிரதமர் மோடி ஆர்.சி.இ. பி மாநாட்டில் தெரிவித்தார்.

இந்திய அரசின் முடிவு பிரதமர் மோடியின் வலிமையான தலைமைக்கு  சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வர்த்தக விவகாரத்தில் வளர்ந்த நாடுகளின் அழுத்தத்திற்கு இந்தியா அடிப்பணிந்த காலம் மலையேறிவிட்டது. இந்த முறை இந்தியா தன் நிலைப்பாட்டில் இருந்து சிறிதும் பின்வாங்கவில்லை.

சர்வதேச வர்த்தக விவகாரங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியான நிலைப்பாட்டை பின்பற்றும் என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.சி.இ.பி ஒப்பந்ததில் இந்தியா கையெழுத்திட மறுத்துள்ள நிலையில் மற்ற 15 நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.