ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 05 நவம்பர் 2019

* ஒரே ராசி, நட்சத்திரம், லக்னம் இரண்டு பிள்ளைகளுக்கும் ஒன்றாக இருந்தால், பரிகாரம் செய்ய வேண்டுமா? எஸ். ஆர். ரமணன், தென்காசி.

 2 நட்சத்திரம் மற்றும் லக்னங்கள் நல்லவையாகவே இருந்தால் எதுவும் தோஷம் கிடையாது. தீய நட்சத்திர லக்கினங்களாக இருந்தால் ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று தக்க பரிகாரம் செய்யவும்.

* செவ்வாய்க்கிழமையில் சாமி படங்களுக்கு பூ சாத்த இயலவில்லை. புதன்கிழமையில் பூ சாத்தலாமா? எம். லக்ஷணா, ஆச்சிராமம்.

சாமி படங்களுக்கு பூ  சாத்தி வழிபடுவதற்கு செவ்வாய், வெள்ளி மட்டும் பார்க்கக்கூடாது. தினமுமே பூ சாத்தி வழிபாடு செய்ய வேண்டும். இயலாத நிலையில் இயன்ற நாட்களில் செய்ய வேண்டும்.

* கடவுள் நல்வழி காட்டுவார் என்று நம்பிய எங்களுக்கு அவர் நல்வழி காட்டாத போது அவர் மீது நம்பிக்கை குறைகிறது. ந. தண்டபாணி, பாளையங்கோட்டை.

 கடவுள் எல்லாம் அறிந்தவர். நமக்கு நல்வழி காட்டுவது என்பது அவருக்கு ஒரு சாதாரண விஷயம். எனினும், நாம் இப்பிறவியில் அவர் நல்வழி காட்டவேண்டும் என்று வேண்டிக்கொண்டாலும், நாம் இதற்கு முன் செய்திருக்கிற பாவ புண்ணியங்கள் மற்றும் ஜாதகரீதியான குறைபாடுகள் இவற்றினால் அவரது அருள் நம்மை அடைவதற்கு காலதாமதப்படலாம். எனவே, கடவுள் விஷயத்தில் நம்பிக்கை குறைவு ஏற்படுவது என்பதே நம்மிடமுள்ள மிகப்பெரிய குற்றமாகும். காலமறிந்து கொடுப்பார். பொறுத்திருக்க வேண்டும். இதனைத் திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் “ஆசை தீர கொடுப்பார்” என்ற சொல்லினால் குறிப்பிடுவதும் உணர வேண்டும்.