மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ – 7

பதிவு செய்த நாள் : 05 நவம்பர் 2019

 பராசரர் சொன்னார், ‘பிராமணரே, ஜகன்மாதாவான லட்சுமி என்றுமே அழியாதவள். விஷ்ணுவை விட்டு என்றும் பிரிந்ததேயில்லை. மகாவிஷ்ணுவுக்குண்டான அதே பலம் மகாலட்சுமிக்கும் உண்டு. அதற்கு சில உதாரணங்களைச் சொல்கிறேன் ,கேள். விஷ்ணு பொருள் என்றால், லட்சுமி வாக்கு ஆவாள். அவர் தர்மம். இவள் நற்செயல். அவர் காமம், இவள் இச்சை. அவர் அக்னிதேவன். இவள் ஸ்வாஹாதேவி. அவர் சங்கர பகவான். இவள் கவுரி பகவதி. அவர் சூரியன். இவள் ஒளி. அவர் சந்திரன், இவள் நிலவு. அவர் இந்திரன். இவள் இந்திராணி. அவர் முருகன். இவள் தேவசேனா. அவர் மரம். இவள் கொடி. மைத்ரேயரே! இன்னும் சொல்வதென்ன? சுருங்கக் கூறவேண்டுமானால், ஒன்றை மாத்திரம் தீர்மானமாகக் கூறலாம். பிரபஞ்சத்தில் தேவர்கள், மனுஷ்யர்கள், பிராணிகள் எவரானாலும் அவற்றுள் புருஷ ஸ்வரூபன் மகாவிஷ்ணு. ஸ்திரி ஸ்வரூபம் மகாலட்சுமி. இதற்கு மேல் கூறவேண்டியதென்ன?

பராசரர் தொடர்ந்தார், ‘மகாலட்சுமியைப் பற்றி நீர் கேட்டீர் அல்லவா? அந்த தேவியின் வரலாற்றை நான் துர்வாச  மஹரிஷியிடமிருந்து கேட்டறிந்திருக்கிறேன். அவற்றை நான் உமக்கு இப்போது கூறுகிறேன். கவனமாகக் கேளும். துர்வாசர் சங்கரனின் அம்சமாகப் பிறந்தவர்.  ஒரு சமயம் அவர் பித்தனைப் போன்று பூமியில் திரிந்து கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ ஓர் அபூர்வ நறுமணம் ஒரு காட்டிலிருந்து வந்து  கொண்டிருந்ததை உணர்ந்தார். அந்த அதிசய வாசனை, தவத்திலிருந்த ஒரு வித்யாதர ஸ்த்ரீயின் கையிலிருந்த பூமாலையிலிருந்து வந்தது. மஹரிஷி அந்த மாலையை அவளிடம் வேண்ட, அவளும் மிகுந்த மரியாதையுடன், அன்புடன் அதனை முனிவருக்கு தந்தாள். அதை அவர் தன் சிரத்தின் மீது வைத்துக் கொண்டு ஒரு பித்தனாகவே அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அப்போது இந்திரன் ஐராவத யானையின் மீதமர்ந்து தேவர்கள் பின்தொடர ஆர்ப்பாட்டமாக பவனி வந்து கொண்டிருந்தான். முனிவர் தன் தலை மீது வைத்திருந்த பூமாலையை இந்திரன் மீது வீசியெறிந்தார். அதை அவன் தன் கையில் வாங்கி அலட்சியமாக யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். ஒரு பித்தனின் கையிலிருந்த மாலையை அவன் வாங்க விரும்பவில்லை. மதம் கொண்ட யானை அந்த பூமாலையை துதிக்கையில் எடுத்து கீழே எறிந்தது.   இதை கண்ணுற்ற மஹரிஷி வெகுண்டு இந்திரனைப் பார்த்தார்.

‘அடே! இந்திரனே ! நான் உன் நல்லதுக்காக அன்புடன் அளித்த மாலையை அலட்சியப்படுத்தி விட்டாய். நான் கொடுத்ததை மரியாதையுடன் ஏற்று, ‘தங்கள் கிருபை’ என்று எனக்கு நன்றி கூறி, தலைவணங்கி நீ அதை ஏற்று அணிந்திருக்க வேண்டும். தேவர்களின் அரசன் என்று திமிர் பிடித்திருக்கிறாய். என்னை ஒரு சர்வ சாதாரணமான பிராமணன் என்று நீ நினைத்துவிட்டாய். உன்னை விட்டு ஐஸ்வர்யங்கள் யாவும் நீங்கி விடும்.  நீ  ஆண்டு கொண்டிருக்கும்  மூவுலகத்திலிருந்து திருமகள் மறைந்து விடுவாள். இது என் சாபம்!’ என்றார்.

 சாபத்தைக் கேட்ட இந்திரன் மனம் வருந்தி, யானை மீதிருந்து கீழே இறங்கி முனிவர்கள் தாள்களில் பணிந்து, மன்னிப்பு வேண்டினான்.  ஆனால் துர்வாசர் மனமிரங்கவில்லை. இந்திரனிடம் அவர் கூறினார். ‘நான் மற்ற முனிவர்களைப் போல அல்ல! உன்னைத் துதி பாடும் கவுதம மஹரிஷி அல்ல நான்! தயாள குணம் படைத்தவர் என்று கூறப்படும் வசிஷ்டர் அல்ல நான். அவர்கள் யாவரும் உன்னைப் பாராட்டுவதால் உனது கர்வம் கட்டு மீறிவிட்டது. நான் கோபம் கொண்டால், எனது புருவங்கள் கோரமாய் நெறித்துக் கொள்ளும்! எனது ஜடாமுடிகள் தீ ஜ்வாலைகளாக சுட்டெரிக்கும். எனது கோபத்தைக் கண்டு அஞ்சாதவர் மூவுலகிலும் இல்லை. நீ என்னை எவ்வளவு வேண்டினாலும், நான் உன்னை மன்னிக்கப் போவதில்லை’ என்றார்.

 அவர் இப்படி சொன்னதும், முனிவர் தன் வழி சென்றுவிட்டார். இந்திரனும் செய்வதறியாது அமராவதி திரும்பினான். ஆனால், அன்று முதல் மூவுலகும் சோபையை இழந்துவிட்டது. பயிர்கள் வாடி அழிந்தன. யாகங்கள் நடைபெறவில்லை. உலகத்தில் தான, தர்மங்கள் நின்று விட்டன. ஜனங்கள் சாமர்த்தியம் இழந்து, அற்ப விஷயங்களுக்கு ஆசைப்பட்டார்கள். எங்கு  சாமர்த்தியம் இருக்கிறதோ, அங்கு லட்சுமிதேவி இருக்கிறாள். எங்கு அது இல்லையோ, அவ்விடம் திருமகளும் இல்லை. மக்களிடம் குணங்கள் இல்லை. பலம் இல்லை. வீரம் இல்லை. சக்தி இல்லை.

 இவ்விதம் திருமகளின் அருட் பார்வையற்றிருந்த தேவர்கள் தானவர்கள் சண்டையிட்டு வென்று விட்டார்கள்.  ஒளியிழந்த தேவர்கள், இந்திரன் முதலானோர் நாடு இழந்து, வலுவிழந்து, பிதாமஹரை சரணம் அடைந்தார்கள்.  பிரம்மா அவர்களை யாவரையும் ரட்சிக்கும் சர்வ வல்லமை படைத்த பகவானை, வணங்குவோரில் இன்னல்களை போக்கும் மஹாவிஷ்ணுவைத் தஞ்சம் அடைவோமாக என்று கூறி, அவர்கள் யாவரையும் பாற்கடலுக்கு அழைத்துச் சென்று ஹரிபகவானை பிரார்த்தனை செய்தார்கள்.

 ‘சர்வேஸ்வரனான அனந்தனுக்கு நமஸ்காரம். பூமிக்கு ஆதாரமானவனுக்கு வந்தன. குறையேதுமில்லாத நாராயணனுக்கு வணக்கம். அணுவிற்கெல்லாம் அணுவாகவும், பெரியவற்றிற்கெல்லாம் பெரியதாகவும் இருக்கும் பரம்பொருளுக்கு நமஸ்காரம். அவனே எல்லாவற்றிற்கும் காரணம், காரியம், காரியங்களுக்குக் காரிணன், காரியம், கர்த்தா, காரணம், எல்லாம் அவனுடைய ஸ்வரூபம். அவன் ஸ்தூலம் இல்லை. ஸர்வவியாபியான விஷ்ணு பகவானே! தயை கூர்ந்து எங்களுக்கு உன் திவ்ய தரிசனத்தை அருள வேண்டும்’ என்றார்.