ஒரு பேனாவின் பயணம் – 230 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2019

இந்தியா...!

 நிஜாமின் ஐதராபாத்தை போலந்து போலவோ, காங்கிரஸ் ஹிட்லரின் நாசிகள் போலவோ காண்பது சற்று அதீதம்தான்.  மகாத்மாவிடம் கொண்டிருந்த நீண்டகால வெறுப்பாலோ என்னவோ, சர்ச்சில் கூட இந்த உருவகத்தால் தூண்டப்பட்டார். அவர் பிரிட்டன் பார்லிமென்ட்டில் பேசும்போது, ` பிரிட்டிஷாருக்கு ஒரு தனிப்பட்ட கடமை உண்டு. தனியுரிமை பெற்ற சமஸ்தானம் என்று அறிவிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் கழுத்தை நெறிக்க, பட்டினி போட்டு ஒழிக்க, வன்முறையால் அடக்கி ஒடுக்க இந்தியாவை அனுமதிக்கக்கூடாது’ என்றார். சர்ச்சிலின் கட்சிக்கு பலம் சேர்ப்பது போல, கட்சியில் புதிதாக செல்வாக்கு பெற்று வரும் ஆர். ஏ. பட்லர்` ஐதராபாத்தில் நியாயமான சுதந்திர நிலை கோரிக்கையை பிரிட்டனும் வற்புறுத்த வேண்டும்’ என்றார்.

 நிஜாமும் மேலும் சில ராஜாக்களும் பாகிஸ்தான் அளித்த ஆதரவால் பலம் பெற்றனர். ` காங்கிரஸ் ஐதராபாத் மீது, தன் செல்வாக்கைப் பிரயோகித்து நெருக்கடி கொடுத்தால், இந்தியாவில் ஒவ்வொரு இஸ்லாமியரும், ஆம், நூறு மில்லியன் இஸ்லாமியர்களும், இந்தியாவின் மிகப்  பழம்பெரும் இஸ்லாம் வம்சத்தைக் காப்பாற்ற, ஒரே மனிதனாக எழுவார்கள்’ என்று ஜின்னா, மவுண்ட்பேட்டனிடம் கூறினார்.

 நிஜாம் இணைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாமல் இந்தியாவுடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார். ` 1947 நவம்பரில், அவர் பிரிட்டிஷ் பேரரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே, அதன் புதிய வாரிசு அரசாங்கத்துடனும் தொடரலாம்’ என்று தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிஜாம் சம்மதித்தார்.  இந்த இருவருக்கும் அவகாசம் அளித்து, நிஜாம் தன் சுதந்திரக் கோரிக்கையை மறு பரிசீலனை செய்யலாம்.  இந்தியர்களும் அவரை இணைய வைக்க சிறந்த வழிகளை யோசிக்கலாம்.

 இந்த ஒப்பந்தப்படி, நிஜாமும் இந்திய அரசாங்கமும் ஒருவர் மற்றவர் பகுதிக்கு பிரதிநிதிகளை அனுப்பிவைத்தனர்.  வல்லபாயின் நம்பிக்கைக்கு உரிய கே. எம். முன்ஷி இந்திய பிரதிநிதியானார். நவம்பரில் நிஜாம்,  மிர் லெயிக் அலி என்ற, பாகிஸ்தானிடம் பரிவு கொண்ட பெரும் பணக்கார வர்த்தகரை, திவானாக நியமித்துக் கொண்டார். லெயிக் அலி தம் நிர்வாகத்தில் சில இந்துக்களுக்கும் வாய்ப்பளித்தார்.

ஆனால், சமஸ்தான காங்கிரஸ் கட்சியின் கருத்துப்படி, ` அது மிகக் குறைவானதும், மிகத் தாமதமாகச் செய்யப்பட்டதுமாகும்’. எப்படியும் உண்மையான அதிகாரம் ரஜாக்கர்களுக்கு தலைவர் காஸிம் ரஸ்விக்கும் போய்விட்டது. 1948 மார்ச் வாக்கில் இத்திஹாத் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டிவிட்டது.  அதில்  பத்தில் ஒரு பங்கினர் ஆயுதப் பயிற்சியும் பெற்றனர். ஒவ்வொரு ரஜாக்கரும் அல்லாவின் பெயரில், ` தக்காணத்தில் இஸ்லாம் அதிகார ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வோம்’ என்று உறுதிமொழியை  மேற்கொண்டனர்.

1948 ஏப்ரலில் லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை நிருபர் ஐதரபாத்துக்கு வந்தார். காஸிம் ரஸ்வியை பேட்டி கண்டார். ` அவர், நிர்வாகத்திறன் கொண்ட ஆவேசமான அரசியல்வாதியாக விளங்கினார். சாதாரண மக்களை கிளர்ந்தெழச் செய்வதில் பிறரால் வெல்ல முடியாதவர். இருவர் மட்டுமே உரையாடும்போதும் தம் கருத்தை அழுத்தமாக வற்புறுத்துபவர்’’ ரஸ்வி தம்மை எதிர்கால இஸ்லாமிய அரசின் தலைவராக கருதினார். ராணுவத் தலைவர் போல இருந்தாலும், ஐதராபாதிகளின் ஜின்னாவாக தன்னைத் நினைத்தார். அவரது அறையில் பாகிஸ்தான் தலைவரின் படம் கண்ணில் நன்றாகப் படும்படி வைக்கப்பட்டிருந்தது.  இந்தியப் பத்திரிகையாளர் ஒருவரிடம் அவர், தான் ஜின்னாவைப் பெரிதாக மதிப்பதாகவும், தனக்கு ஏதாவது சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் ஜின்னாவிடம் செல்வதாகவும், அவரும் மறுக்காமல் உதவுவதாகவும் சொன்னார்.

 ரஸ்வியின் படங்கள் அவரை, நீண்ட பெரிய தாடியுடன் காட்டுகின்றன. அவர் ஏறத்தாழ ஜெர்மானிய புராதனக் கதைகளில் காணப்படும் மெபிஸ்டோபிலிஸ் என்ற பிசாசைப் போலக் காட்சியளித்தார்.. அவருடைய கண்கள்தான் அவருடைய சிறப்பான அம்சம். அதிலிருந்துதான் அவருடைய வெறி வெளிப்படும். அவருக்கு காங்கிரசிடம் வெறுப்பு.

 ` எங்களை பிராமணரோ, பனியாவோ ஆள்வதில் விருப்பமில்லை’ என்பார். ` பாகிஸ்தானும் இந்தியாவும் மோதினால் நீங்கள் யார் பக்கம் சேருவீர்கள் ?’ என்று கேட்டால், ` பாகிஸ்தான் தன்னைத்தானே காத்துக் கொள்ளும்’ என்பார். ` இஸ்லாம் நலன் பாதிக்கப்படுமானால் எங்கள் ஆர்வமும் கனிவும் வெளிப்படும் ‘ என்றார். ` இது பாலஸ்தீனத்துக்கும் பொருந்தும். இஸ்லாமியர்களுடைய நலன் நரகத்தில் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்காக எங்கள் இதயம் இரங்கும்’ என்றார்.

 ரஜாக்கர்கள், டில்லி- ஐதராபாத் சண்டையை இந்து-, இஸ்லாம் கண்ணோட்டத்தில் பார்த்தனர். ஆனால் காங்கிரஸ் அதை ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராகக் கண்டது. உண்மையில் அது இரண்டும்தான். இந்த இரண்டு போராட்டங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டவர்கள் ஐதராபாத்வாசிகளே. 1947 ஆகஸ்டுக்குப் பிறகு, மிகவும் பாதுகாப்பற்ற ஒரு காலம் இருந்தது சில இந்துக்கள், அருகிலுள்ள மதராஸ் ஜில்லாக்களுக்கு ஓடிவிடத் தலைப்பட்டனர்.   இதற்கிடையே மத்திய மாகாணத்திலிருந்து இஸ்லாமியர்கள் ஐதராபாத்தில் குவிய ஆரம்பித்தனர். இந்தப் படிக்காத இஸ்லாமிய பாமர மக்கள், வங்காளத்திலும் பஞ்சாபிலும் தங்கள் மதத்தவர் தாக்கப்பட்டு வருவதாகக் கேள்விப்பட்டிருந்தனர். அவர்கள் ஐதராபாத்திலும் சிறுபான்மையினர் என்பதை அறிந்து கொள்ள மறந்துவிட்டனர். ஒரு பார்வையாளர் குறிப்பிட்டது போல, ` இந்த வந்தேறி இஸ்லாமியர்கள், யூனியன் மாகாண நிர்வாகத்தை விட நிஜாமின் படைகள் மற்றும் அராபியர்கள் மீது, அதிகமான நம்பிக்கை வைத்திருந்தனர்.

 இதற்குப் பதிலாக மத்திய மாகாண இஸ்லாமியர்கள், ஐதராபாத்தில் இருந்த இந்துக்களை அவர்களது வீடுகளிலிருந்து நிஜாமின் ஆட்கள் உதவியுடன் வெளியேற்றினர். சமஸ்தானத்தில் இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக்க திட்டம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. அவுரங்கதபாத், பீடார், ஐதராபாத் ஆகியவற்றில் இந்துக்கள் வசித்த இடங்கள் காலி செய்யப்பட்டுக் காட்சியளித்தன.

 1948 மத்தியில் பிரச்னை அதிகரித்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதக் கடத்தல் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது பிரிட்டிஷ் கூலிப்படையினர் உதவியுடன் விமானம் மூலம் நடைபெறுவதாகச் சொல்லப்பட்டதுடன், கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது. மதராஸ் பிரதமர், ஐதராபாத்திலிருந்து வெளியேறும் அகதி வெள்ளத்தைச் சமாளிக்க கஷ்டமாக இருப்பதாக, படேலுக்குக் கடிதம் எழுதினார். நிஜாமின் துரோகம் பற்றியும், சுதந்திரம் பற்றிய அவருடைய சிந்தனை பற்றியும், இந்திய அரசை ` டில்லி போக்கிரிகள்’ என்று அவர் குறிப்பிடுவதையும், இரவு பகலாக நிஜாமின் ரேடியோ உரைகளிலும், செய்தித்தாள்களிலும், நாடகங்கள் வழியாகவும் இந்திய யூனியனுக்கு எதிரான விஷம் கலந்த பிரசாரங்கள் நடந்து வருவது பற்றியும்  கே.எம்.முன்ஷி பயங்கரமான அறிக்கைகளை அனுப்பியவண்ணம் இருந்தார்.

 அந்த நேரத்தில் இந்தியர்கள், காலம் கனியக் காத்திருந்தனர். டில்லியில் மேனனும் லெயிக் அலியும் பலமுறை சந்தித்துப் பேசினர். சமஸ்தானத்தில் பிரதிநிதித்துவம் ஆட்சி ஒன்றை அமைக்கவும், இணைப்பு பற்றி வாக்கெடுப்பு நடத்தவும் மேனன் விரும்பினார். நிஜாமின் கண்ணியத்தைக் காப்பாற்ற பல விதிவிலக்குகள்   அளிக்கவும் ஆலோசனைகள் கூறப்பட்டன. அவற்றுள் நிஜாம், படைகளை தொடர்ந்து வைத்துக்கொள்வதும் அடங்கும். எதுவும் ஐதராபாத்துக்கு ஏற்புடையதாக இல்லை. இதற்கிடையே முன்னாள் திவான் மிர்ஸா இஸ்மாயில், சமாதானம் செய்து வைக்க முன் வந்தார். லெயிக் அலி இந்தப் பிரச்னையை ஐ.நா. சபைக்குக் கொண்டு செல்வதாக அச்சுறுத்தியிருந்தார். மிர்ஸா இஸ்மாயில், ஐதராபாத் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று நிஜாமுக்கு அறிவுறுத்தினார். மேலும், ரஜாக்கர்களின் பிடியிலிருந்து மீள, நிஜாமை இந்திய யூனியனுடன் இணையுமாறு ஆலோசனை வழங்கினார். நிஜாம் தன் ஆட்சியின் பலவீனமான நிலையை உணருமாறு இஸ்மாயில் கேட்டுக்கொண்டார்.

1948 ஜூன் 21 அன்று மவுன்ட்பேட்டன் கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து விலகினார். அதற்கு மூன்று நாட்கள் முன்னதாக அவர் நிஜாமுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவரைச் சமாதானமாகப்   போகுமாறும், வரலாற்றில் தென்னிந்தியாவில் அமைதியை நிலைநாட்டியவர்,  சமஸ்தானத்தைக் காப்பாற்றியவர், நிஜாம் வம்சத்தை, மக்களைக் காத்தவர் என்று இடம்பெறுமாறும், அவர் பிடிவாதமாக இருந்தால் உலக அரங்கில் கண்டனத்தைப் பெறுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நிஜாம் அதைக் கேட்பதில்லை என்று முடிவு செய்துவிட்டார். மவுன்ட்பேட்டன் போன பிறகு, படேலுக்கு தீர்மானமான  நடவடிக்கை எடுப்பது எளிதாயிற்று.  13 செப்டம்பர் அன்று, இந்தியப் படைகள் ஐதராபாத்துக்கு அனுப்பப்பட்டன.

நான்கு நாட்களுக்கும் குறைவான அவகாசத்தில் சமஸ்தானம் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டுகள் வந்துவிட்டன. சண்டையில் நாற்பத்திரண்டு இந்தியப் படை வீரர்களும், சுமார் இரண்டாயிரம் ரஜாக்கர்களும் உயிரிழந்தனர்.

 27ம்தேதி இரவு, நிஜாம் ரேடியோவில் பேசினார். அதை கே. எம். முன்ஷி எழுதியிருக்கக்கூடும். நிஜாம், ரஜாக்கர் மீது தடை விதிப்பதாக அறிவித்தார். மக்களை, இந்தியாவிலுள்ள மற்றவர்களோடு அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ அறிவுறுத்தினார். ஆறு நாட்கள் கழித்து அவர் மீண்டும் ரேடியோவில் பேசினார். ` ரஸ்வியும் அவருடைய ஆட்களும் ஹிட்லர் முறையில் ஆட்சியைக் கைப்பற்றி, பயங்கரத்தைப் பரப்புவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவுடன் தான் ஒரு கவுரவமான தீர்வுக்கு வர ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் அந்தக் கூட்டம் அவ்வப்போது இந்திய அரசு அளித்த உரிமைகளைப் பெறமுடியாமல் தடுத்தது என்றும் பேசினார்.

 யதேச்சையாகவோ திட்டமிட்டோ ஐதராபாத்தின் மீதான இந்திய நடவடிக்கை, பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் மறைந்த இரண்டு நாட்கள் கழித்துத் தொடங்கியது. ` நிஜாம் சமஸ்தானம் அச்சுறுத்தப்பட்டால் நூறு மில்லியன் இஸ்லாமியர்கள் கொதித்தெழுவார்கள்’ என்றார் ஜின்னா. அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானின் சில பகுதிகளில் எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தது. கராச்சியில் 5 ஆயிரம் பேர் இந்தியத் தூதரகம் முன் அணிவகுத்து வந்தனர். பழைய காந்தியவாதியான தூதர் வெளியே வந்து அவர்களை அமைதிப்படுத்த முயன்றார். ` நீங்கள் கோழைகள், எங்கள் தந்தை இறந்துவிட்ட சமயத்தில் எங்களைத் தாக்கியிருக்கிறீர்கள்’ என்று அவர்கள் கோஷமிட்டனர்.

 ஜூன் பிற்பகுதியில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் நிஜாமிடம், ` இந்திய யூனியனுடன் சமாதானமாக இருந்தால் ஐதராபாத்தின் மாட்சிமை பொருந்திய நவாப் மாஸ்கோ அல்லது வாஷிங்டனில் இந்தியா முழுவதுற்குமான மேதகு தூதராகலாம்’ என்று சொன்னார். அவர் உடை அல்லது நடை, பாவனை அல்லது எல்லாமுமாகச் சேர்ந்து அவரை அந்த ராஜதந்திரப் பணிக்குப் பொருத்தமாக ஆக்கியிருக்காவிட்டாலும், முடிவில் அவர் பணிந்து போனதால் ஐதராபாத் என்கிற புதிய மாகாணத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

 புராதன ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து மும்பை பத்திரிகையாளர் கே.ஏ. அப்பாஸ் ஐதராபாத்துக்கு விஜயம் செய்தார். ராஜா தீனதயாளின் நூறு வருட பழைய போட்டோ ஸ்டூடியோவின் ஜன்னலில், நகரத்தை விடுவித்த வீரர் கர்னல் ஜே. என். சவுத்ரி என்று இந்தியப் படைத்தளபதியின் படம் நிஜாமின் படங்களுக்கு பதிலாக இடம்பெற்றிருந்தது. ஐதராபாத்தில் பழைய கூம்பு வடிவான அஸாப் ஜாஹி தஸ்தார் என்ற ரெடிமேட் தலைப்பாகைக்குப் பதிலாக ஆளும் வர்க்கத்தின் தலைத் தொப்பியாக காங்கிரஸ் குல்லாய் இடம்பெற்று இந்தியப் படையெடுப்புக்கு முன்பிருந்த அதே பயத்தை விளைவித்துக் கொண்டிருந்தது.

 1947 ஆகஸ்டில் துணைக்கண்டத்தில் பணியாற்றிய, அனுபவம் வாய்ந்த பிரிட்டிஷார் ஒருவர்,` இந்தியாவும் எதிர்காலமும்’ என்ற ஆரவாரமான ஒரு தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். பிரிட்டிஷ் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர்,` பிரிவினை அத்துடன் அங்கேயே நின்றுவிடுமா?’ என்று கேட்டிருந்தார். ` துணைக்கண்டம் மேலும் எண்ணற்ற, சிறு சிறு சண்டையிடும் நாடுகளாகப் பிளவுபடுமா?,’ பாகிஸ்தான் இயல்பாகவே நிலையற்று காணப்பட்டது. வடமேற்குப் பகுதிகள் பதானிஸ்ஹான் என்ற சுதந்திர நாடு ஆவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தன. இந்தியாவும் அதிகமான நிலைத்தன்மையுடன் இல்லை.

 பல திறமையான பார்வையாளர்கள், ` மதராஸ் (மாகாணம்) முடிவாக சுதந்திர நாடாகப் பிரிந்துவிடும்’ என்று நம்பினர். சம்ஸ்தானங்கள், குறிப்பாக சிறிய மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சமஸ்தானங்கள், இந்தியாவுடன் சேருவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் ` தெற்கேயுள்ள  பெரிய- குறிப்பாக ஐதராபாத், மைசூர், திருவிதாங்கூர், - சமஸ்தானங்களின் நிலை முற்றிலும் மாறானது. அவசியமானால், அவை தனியாக இயங்க முடியும். காங்கிரசில் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல், அவர்கள் தங்கள் நலனுக்கு ஆதரவாக மட்டுமே இவ்விஷயத்தை முடிவு செய்வார்கள்.’

 இந்த தீர்க்கதரிசி, ` இந்தியாவின் முடிவான வடிவம், பிரிட்டிஷ் இந்தியாவுக்கு பதிலாக, மூன்று நான்கு தேசங்களையும் தென் இந்திய அரசுகளின் கூட்டாட்டக் கட்சியையும் கொண்டிருக்கும்’ என்று முடிவு செய்தார். இது ஏறத்தாழ பதினாறாம் நூற்றாண்டு இந்தியாவுக்குத் திரும்பும்.’

 இப்படி பல துண்டு துண்டான பிரதேசங்களைக் கொடுத்து விட்டு, அவ்வளவு எதிர்ப்புகளையும் கடந்து, எண்ணற்ற வேறுபாடுகளாலான ராஜ்ஜியங்களை இணைத்தது உண்மையிலேயே மாபெரும் சாதனையாகும். வெகு நேர்த்தியாகவும் ஒழுங்காக செய்யப்பட்ட விதத்தால், இது மக்களை, இந்தியா ஒரு காலத்தில் நாடாக அல்ல, ஐநூறு நாடுகளாக இருந்தது எனபதையே மறக்கச் செய்துவிட்டது. 1947,1948 ஆண்டுகளில் போபால், திருவிதாங்கூர் போன்ற இடியாப்பச் சிக்கல்களும், ஐதராபாத் மீதான படைத்தாக்குதலும் நாடு சிதறிவிடுமோ என்ற பயத்தைக் கொடுத்தன.

கடைசி மகாராஜா தன் சமஸ்தானத்தைக் கையொப்பமிட்டு அளித்த அடுத்த ஐந்தாண்டுகளிலேயே,  இந்தியா ஒரு நாடுதான் என்று உலகமே ஒப்புக்கொண்டது.

 (தொடரும்)