இந்தியா ‘ஏ’ அணியை வீழ்த்தியது ஆஸி., ‘ஏ’

பதிவு செய்த நாள்

10
ஆகஸ்ட் 2015
14:52

சென்னை: இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில் கிறிஸ் லின் அரைசதம் கடந்து கைகொடுக்க, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான லீக் போட்டியில் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்தியா ‘ஏ’ அணி கேப்டன் உன்முக்த் சந்த், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

அகர்வால் அரைசதம்: முதலில் ‘பேட்’ செய்த இந்தியா ‘ஏ’ அணிக்கு மயாங்க் அகர்வால் (61), மணிஷ் பாண்டே (51) அரைசதம் அடித்தனர். கேப்டன் உன்முக்த் சந்த் (5), கேதர் ஜாதவ் (0) ஏமாற்றினர். கருண் நாயர் (32), சஞ்சு சாம்சன் (23), அக்சர் படேல் (20), ரிஷி தவான் (26*) ஓரளவு கைகொடுத்தனர். இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி சார்பில் ஆஷ்டன் அகார் 5 விக்கெட் வீழ்த்தினார்.

லின் நம்பிக்கை: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு கேப்டன் உஸ்மான் கவாஜா (18) ஏமாற்றினார். டிராவிஸ் ஹெட் (45), கிறிஸ் லின் (63) நம்பிக்கை அளித்தனர். ஹேண்ட்ஸ்கோம்ப் (19), மாத்யூ வேட் (5) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஆடம் ஜம்பா (54) அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய பெர்குசன் (41*) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 48.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் கரண் சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார்.