திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நிறைவு

பதிவு செய்த நாள் : 02 நவம்பர் 2019 16:18

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் கடற்கரையில் வேல் கொண்டு முருகன் பெருமான் அசுரனை அழிக்கும் சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபங்கள், விடுதிகள், தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.

விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலையில் ஜெயந்தி நாதர் யாகசாலை புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நடந்தது.

அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை,

2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4.30 மணி அளவில் கோவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது

சூரசம்ஹாரத்தில் கஜமுக வடிவில் ( யானை முகம்) வந்த சூரபத்மனை முதலில் முருகன் வதம் செய்தார்.

பின்பு சிங்கம் முகத்தில் வந்த சூரபத்மனையும், தொடர்ந்து சுய ரூபமான அரக்க வடிவத்தில் வந்த சூரபத்மனையும் முருகன் வதம் செய்தார்.

மாமரமும் சேவலாகவும் மாறும் அசுரனை வதம் செய்தார் ஜெயந்தி நாதர்

இறுதியில் சூரபத்மனை சேவலும், மயிலும் ஆக முருகன் ஆட்கொண்ட நிகழ்வு நடந்தது.

இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு ஊர்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்திருந்தனர்.

பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் - வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

சுவாமி ஜெயந்திநாதர் - வள்ளி, தெய்வானை புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிவீதி வலம் வந்தனர்.

பிற கோவில்களில் சூரசம்ஹாரம்

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடி, எண்கன் மற்றும் சென்னை - வடபழனி, போன்ற முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாம் நிகழ்வு நடைபெற்றது.