இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் இன்று பதவியேற்றனர்

பதிவு செய்த நாள் : 01 நவம்பர் 2019 10:52

சென்னை,

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச்செல்வன், நாராயணன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக முத்தமிழ்ச்செல்வன் பதவியேற்றார்

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக ரெட்டியார்பட்டி நாராயணன் பதவியேற்றார்

தமிழக சட்டசபையில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் நாங்குநேரி, தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடு வெற்றி பெற்றனர்.

எம்எல்ஏவாக பதவியேற்பு

இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்க உள்ள ரெட்டியார்பட்டி நாராயணன் , முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர், சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் இருவரும் பதவியேற்றுக்கொண்டனர். இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்வில் சட்டமன்றம் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

2 புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 124ஆக உயர்ந்தது.