அரசியல்மேடை : ‘ஆழ்துளை’ அரசியல் அவசியமா...?

பதிவு செய்த நாள் : 02 நவம்பர் 2019

தமிழ்நாட்டில் தொட்டதற்கெல்லாம் அரசியல் என்ற நிலை உருவாகி விட்டது. ஆளும் கட்சித் தரப்பில், அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரி எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அரசியல் சாயம் பூசி விமர்சிப்பது என்பது எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகி விட்டது.

குறிப்பாக 1972–ம் ஆண்டு முதல் அதிமுகவும், திமுகவும் இரு துருவங்களாக இருந்து எதிர்மறை அரசியலை செய்து வருவதை நாடறியும். எந்த பிரச்னையானாலும் இந்த இரண்டு அரசியல் கட்சிகளும் எதிரும் புதிருமான கருத்துக்களையே எழுதியும், பேசியும் வருகின்றன.

தமிழர்களின் வாழ்வாதார பிரச்னைகள் ஆகட்டும், தமிழ்நாட்டின் நலம் சார்ந்த பிரச்னைகள் ஆகட்டும், எதிலும் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு என்பதை காண்பது அரிது.

இப்போது தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் விமர்சன கருத்துக்களுக்கு விதை போட்டது திமுக தலைவர் ஸ்டாலின் தான். கடந்த மாதம் 2௫ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமத்தில், தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த ஆழ்துளை குழாய்க் கிணற்றில், அவரது இரண்டு வயது மகன் சுஜித் வில்சன் எனும் சிறுவன் விழுந்து, நான்கு நாட்களுக்கும் மேலாக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும்,  அந்த சிறுவனை உயிரோடு மீட்க முடியவில்லை.

இதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது, அரசின் முயற்சிகளை, பணிகளை வரவேற்றுப் பாராட்டிப் பேசிய ஸ்டாலின், குழந்தை உயிருடன் மீட்கப்பட முடியாத நிலை ஏற்பட்டவுடன் இதற்கு அரசின் மெத்தனப் போக்கும், அலட்சியமும்தான் காரணம். அமைச்சர்கள் தொலைக்காட்சி பேட்டிகளில் கவனம் செலுத்தினார்களே தவிர, மீட்பில் கவனம் செலுத்தவில்லை என்று ஸ்டாலின் குற்றாச்சாட்டுக் கூறினார். இதற்கு அரசு தரப்பிலும், பொதுமக்கள் மத்தியிலும் கூட கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

25ம் தேதி மாலை ௬ மணி முதல் தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளை பல தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ததை உலகெங்கும் வாழ்கின்ற மக்கள் பார்த்தனர். நிமிடத்துக்கு நிமிடம் என்ன நடந்தது என்பதை திமுக ஆதரவு பத்திரிகைகள் உட்பட பல பத்திரிகைகள் பெட்டிச் செய்திகளாக வெளியிட்டன.

சுஜித் எனும் இரண்டு வயது சிறுவனை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பல்துறை வல்லுநர்கள் அங்கே ௫ நாட்களாக முகாமிட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடும், மிகுந்த ஈடுபாட்டோடும் இரவு – பகல் பாராமல் பணிகளை மேற்கொண்டனர்.

காவல்துறை, தீயணைப்புதுறை, மாநில,மத்திய பேரிடர் மேலாண்மையின் மீட்புத்துறையினர், ஏற்கனவே ஆழ்துளை கிணறுகளில் விழுந்த சிறுவர், சிறுமிகளை மீட்ட சிறப்பு நிபுணர்கள் என பலரும் முகாமிட்டு, தங்களால் முடிந்த அளவிலான முயற்சிகளை மேற்கொண்டனர். சிறுவன் விழுந்த அந்த ஆழ்துளை கிணற்றின் அமைப்பு, குழந்தை விழுந்து சிக்கிக்கொண்ட பாறை இடுக்கு, குழந்தை அங்கு இருந்த விதம் இவை காரணமாகவே, மீட்புப் பணியில் கடும் சிக்கல் நிலவியது. மீட்புக் கருவிகளோ, கம்பி, கயிறு போன்ற உபகரணங்களோ, சிறுவன் சிக்கிய பகுதிக்குள் சென்று அவனை மீட்க முடியாத நிலை உருவானதை எல்லா காட்சி ஊடகங்களும் நேரடியாகவே காட்டின. அங்கு களத்தில் இருந்த செய்தியாளர்களும் என்ன நிலை  அங்கு உள்ளது என்பதை அவ்வப்போது தெரிவித்து வந்தனர். இந்த நிபுணர்களின் முயற்சி பலனிக்காத நிலையில்தான், தனியார் துரப்பக் கருவிகள், என்எல்சி ரிக், பொக்லைன் என கொண்டு வந்து அவைகளின் மூலமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு மீட்புப் படையினரும் முகாமிட்டுத் தீவிரமாக பணியாற்றியும், நாட்கள் கடந்ததால், இயற்கையும் சதி செய்தததால், இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கும் முற்பட்ட கடின பாறைகள் அங்கு இடையூறு ஏற்படுத்தியதால் அந்த குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை. இது பெரிதும் வேதனைக்குரியதுதான். உலகமே பிரார்த்தித்தும், துரதிர்ஷ்ட வசமாக இப்படி ஒரு சோக முடிவு ஏற்பட்டு விட்டது. இதன் வலியையும், வேதனையையும், வெளியே இருந்து உணர்பவர்களை விட, அங்கு நேரடியாக ஊண் உறக்கமின்றி களப் பணியாற்றிய அமைச்சர்களும், அதிகாரிகளும், பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுநர்களும், அவர்களுக்கு உதவிய நூற்றுக் கணக்கானவர்களும் நிச்சயம் உணர்வார்கள்.

இந்த நிலையில், வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றுவதைப் போல, திமுக தலைவர் ஸ்டாலினும், அவருக்கு ஆதரவு நிலையில் உள்ள காங்கிரஸ் மற்றும் இடது சாரிக்கட்சியினரும் விமர்சிப்பது வேதனையானது, கொடுமையானது, தேவையற்றது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இத்தகைய அணுகுமுறை மிகவும் மலினமானது என்பதே பொதுவெளிப் பார்வை. இரண்டு வயது குழந்தையின் மரணத்திலும் அரசியல் தேடுவதா? என மக்கள் பேசிக் கொள்வதை காண முடிகிறது.

திமுகவினரின் புகார், மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் ஈபிஎஸ் 5 நாட்களாக இரவு – பகல் பாராமல் அங்கே முகாமிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் நிர்வாக ஆணையர், டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரிய விளக்கத்தையும், பதிலையும் அளித்துள்ளனர்.

எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டது. தனியார் தோண்டி, அவரால் சரியாக மூடப்படாத அந்த ஆழ்துளை கிணற்றில் அவரது குழந்தையே விழுந்து விட்டது. அந்த குடும்பத்தின் அஜாக்கிரதை, அலட்சியம், கவனமின்மை காரணமாகவே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்று விட்டது. அந்த குழந்தையை உயிருடன் மீட்க எடுத்த எல்லா முயற்சிகளும் கைகொடுக்கவில்லை. இதை அறிந்த மக்கள் வேதனையோடு இருப்பதை நாடறியும். இந்த வேதனையில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிதான் ஏற்புடையதில்லை என மக்கள் கருதுகிறார்கள்.

இந்த குழந்தையின் குடும்பத்திற்கு அரசு உட்பட கட்சி மாட்சர்யம் இன்றி லட்சக்கணக்கில் பண உதவி வழங்குகிறார்கள். தவறில்லை. ஆனால், இதே போல கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 12 குழந்தைகள் இதே போல ஆழ்துளைக் குழாய் கிணற்றில் விழுந்து மரணித்துள்ளதே. அந்த குடுமபத்தினர் மீது யாருடைய பார்வையும் செல்லவில்லையே ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. அதையும் தவிர்க்க முடியாது. எது எப்படியோ – இனி வரும காலத்திலாவது எந்த அரசியல் கட்சியும் இதுபோன்ற ‘மரண மலிவு’ அரசியலை கடைப்பிடிக்க கூடாது என்பதுதான் மக்களின் கருத்து.