துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 53

பதிவு செய்த நாள் : 02 நவம்பர் 2019

இமயம் ஒரு பார்வை...!

இந்தியாவின் வட எல்லையாக ஓங்கி உயர்ந்து நிற்கும் நம் தேசத்தின் மிகப்பெரிய அடையாளம் இமயமலை. இது மிகப்பெரிய மலைத்தொடர் ஆகும். இது 73 டிகிரி கிழக்கு அட்சரேகையிலிருந்து, ௯௫ டிகிரி கிழக்கு அட்சரேகை வரையிலும் சுமார் 1500 மைல் நீளமும், 150 மைல் அகலமும் கொண்டது. ‘ஹிமலயா’ எனும் வடமொழிச் சொல்லுக்கு பனிகளின் இருப்பிடம் என்பது பொருளாகும். அந்த வகையில் பனி படர்ந்த இந்த மலைத் தொடர் ‘ஹரியானா மவுண்டெய்ன்’ என அழைக்கப்படுகிறது. தமிழில் இதை நாம் இமயமலை என்கிறோம். இந்திய தேசத்தையும், அருகிலுள்ள திபெத் நாட்டையும் பிரிக்கின்ற பெரிய மதில் சுவராக இந்த பிரமாண்ட மலைத் தொடர் அமைந்துள்ளது.

மத்திய ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய பீட பூமி பகுதியின் தெற்குப் பகுதியில் செங்குத்தான சரிவுமலைத் தொடராக இமயமலை அமைந்துள்ளது. ஆங்காங்கே இடைவெளியுடன் கூடிய பல மலைத் தொடர்களை உள்ளடக்கிய தாக இது அமைந்துள்ளது. இமயமலையை தெற்கிலிருந்து வடக்காக 5 மண்டலங்களாக ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர்.

* சிவாலிக் மலைகளும் அவற்றின் பின்புறத்தி லுள்ள பள்ளத்தாக்குகளும்.

* சிறிய அளவிலான மலைத் தொடர்கள். இவற்றின் உயரம் 6000 அடியிலிருந்து 13000 அடி உயரம் வரை இருக்கும்.

* பெரிய மலைத் தொடர்களின் கிளை மேடுகள், இவற்றின் சராசரி உயரம் சுமார் 15000 அடிகள்.

* பெரிய அளவிலான மலைத் தொடர்கள், உயரமான பல சிகரங்கள் இப்பகுதியில் உள்ளன. இவற்றில் சில சிகரங்கள் உலகிலேயே மிக உயரமானது.  அவை :

எவரெஸ்ட் – 29,141 அடி

காட்வின் ஆஸ்டின் – 22,250 அடி

கஞ்ஜன் ஜங்கா – 28,146 அடி

தவளகிரி  – 26,795 அடி

மேலும் சில சிகரங்கள் சராசரியாக சுமார் 2௦,000 அடி வரை உள்ளது.

* சிந்து பிரம்மபுத்ரா பள்ளம். இதுதான் 5வது மண்டலம்.

இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 12,000 அடியிலிருந்து 14,௦௦௦ அடி வரை உள்ளது. இது தவிர, இமய மலைக்கு அப்பாலுள்ள மலைத் தொடர்கள் திபெத் நாட்டின் பீட பூமிப் பகுதியின் விளிம்பில் உள்ளன. இங்குள்ள கைலாச சிகரம் 21 ஆயிரத்து 982 அடி உயரத்தில் உள்ளது. இதுவும் இதன் அருகில் உள்ள மானசரோவர் ஏரியும், மேற்கேயுள்ள நங்கபர்வதமும், மற்றும் திருக்கேதாரம், பதரி காச்சிரமம் உள்ளிட்ட இடங்கள் புனித ஸ்தலங்களாக உள்ளன.

இமய மலையின் தட்பவெப்ப நிலையில் பல வேறுபாடுகள் உள்ளன. இதன் மேற்கு பகுதிகளைவிட கிழக்கு பகுதியில் மழையும், வெப்பமும் அதிகம் இருக்கும். இதே போல இமய மலையின் தென்பகுதிக்கும் வடபகுதிக்கும் கூட அதிக அளவு தட்பவெப்ப அளவு வேறுபாடுகள்

இருக்கும். தெற்குப் பகுதியில் உள்ள மலைகள் அதிகமாக அரிக்கப்பட்டும், மேற்குப் பகுதி மலைகள் உருண்ட தோற்றத்தோடும் காணப்படுவது இப்பகுதிகளின் தட்பவெப்ப வேறுபாடுகளை அறிவுறுத்துவதாக உள்ளது.

கிழக்கு பகுதியில் வெண்பனிப் போர்வை 14000 அடி உயரத்திலும் மேற்கு பகுதியில் 19000 அடி உயரத்திலும் அடர்த்தியாக இருக்கும். வறட்சியான திபெத் பகுதியில் சுமார் 3000 அடி உயரத்தில்

பனிப்படலும் சூழ்ந்திருக்கும். தட்வெப்ப நிலைக்கு ஏற்ப, இமயமலைப் பகுதியிலுள்ள தாவரங்களும் இடத்துக்கு இடம் மாறுபடும். இதில் உபஅயன மண்டலக் காடுகள், பருவமழைக் காடுகள், இலையுதிரா மரக்காடுகள், குளிர்பிரதேச ஊசி இலைக் காடுகள் போன்ற பலவகை தாவரவகை காடுகள் இங்கு காணப்படும்.

மேற்கு பகுதியில் மத்திய தரைக்கடல் தாவர வகைகளும், உயர்ந்த பகுதிகளில் ஆல்ப்ஸ் மலைத் தாவர வகைகளும், ஆப்பிரிக்க காட்டுவகைத் தாவரங்களும் உள்ளன. தேவதாரு, சாலம், வெள்வாகை உள்ளிட்ட பயன்தரத்தக்க பல்வேறு மரவகைகளும் இந்த பகுதியில் வளர்ந்தோங்கி நிற்பதை காண முடியும்.

இமயமலையின் அடி வாரத்திலிருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரம் வரையிலும் தேயிலை பயிரிடப்படுகிறது.  இதற்கு நேர்மாறாக திபெத்துப் பகுதியில் பெரும்பான்மையான தாவரங்கள் இரண்டடி உயரத்துக்கும் குறைவான வளர்ச்சியுடைய அடர்த்தியான புதர்களாகவே காட்சியளிக்கும்.  இமயமலையின் இந்தியப் பகுதியில் வெப்ப நாட்டுக்காட்டு விலங்குகள் அதிகம் காணப்படும். திபெத்துப் பகுதியில் குளிர்ப் பிரதேச விலங்கினங்கள் தான் நிறைய தென்படும்.

இமய மலையில் பல்வேறு வகையான பறவை இனங்களும் உள்ளன. மலை அடி வாரத்திலிருந்து சுமார் 8,000 அடி உயரம் வரையிலும் ஆங்காங்கே நாகப்பாம்புகளின் நடமாட்டம் இருக்கும். சுமார் 18,000 அடி உயரம் வரையில் தவளை இனங்கள், பல்லி வகைகள் உள்ளிட்ட உயிரினங்கள் இருக்கும்.

இமயமலைப்பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்த வல்லுநர்கள்,ஆய்வாளர்கள் ‘இந்த பூமியின் மேற்பகுதி மத்திய ஆசியப் பீட பூமியின் தெற்கு விளிம்பில் வலிவாக மடிந்து இந்த மலைத் தொடர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்றும் இடைப் பிராணி யுகத்தில் இது டெதிஸ் (TETHYS) எனும் பெருங்கடலின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

மேலும் கிரிட்டேஷஸ் காலத்தின் இறுதியில் காரக்கோரம் பகுதி உயர்ந்தது என்றும் மற்றப் பகுதிகள் பெரும்பாலும் உலகு தோன்றிய மூன்றாம் காலத்தில் உயர்ந்தன எனவும் தெரிவிக்கின்றனர். இமயமலை பல படிகளில் தெற்கு நோக்கி வளர்ந்தது எனவும், முதலில் தோன்றிய மலைத் தொடரின் அடிவாரத்தில் மறுதலையான பிளவுப் பள்ளம் தோன்றியது. இதை நோக்கி மலைத்தொடர் அங்கு சில மடிப்புகள் தோன்றி புதிய மலைத் தொடர்கள் உருவாகின எனவும், இது போன்ற நிகழ்வுகள் பலமுறை நிகழ்ந்தன் மூலமாகவே தற்போதுள்ள  இமயமலைத் தொடர்கள் தோன்றின எனவும், புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியின் பூமித்தட்டின் மேல் பகுதி இன்னும் நிலைப்படவில்லை எனவும் அதனால்தான் இங்கு அடிக்கடி நில அதிர்ச்சி உருவாவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.