இந்தியப் பங்குச் சந்தைகள் ஐந்தாவது நாளாக இன்றும் உயர்வு

பதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2019 18:20

மும்பை/ புதுடெல்லி

இந்திய பங்குச்சந்தைகளில் ஐந்தாவது நாளாக இன்றும் உற்சாகம் நிலவியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ். தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி ஆகியவை இன்றும் உயர்ந்தன.

சென்செக்ஸ் குறியீட்டெண் இதுவரை தொடாத 40.392 புள்ளிகளை இன்று எட்டியது. அந்த சாதனையில் கொஞ்சம் புள்ளிகளை இழந்தபின் வர்த்தக இறுதியில் 40129 புள்ளிகளில் நிலைபெற்றது. .இன்று சென்செக்ஸ் 77.18 புள்ளிகள் அல்லது 0.19 சதவீதம் உயர்ந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று 33.35 புள்ளிகள் அல்லது 0.28 சதவீதம் உயர்ந்தது. வர்த்தக இறுதியில் நிப்டி 11,877 புள்ளிகளில் நிலைபெற்றது.

இந்தியப் பங்குச்சந்தைகளில் பதிவுபெற்ற பல கம்பெனிகளின் காலாண்டு வருமானம் இன்று வெளியிடப்பட்டது. அந்த வருமானங்கள் மகிழ்ச்சி தருவதாக அமைந்தன. இந்திய அரசு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை பங்குச் சந்தையில் எதிரொலித்தது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் நிதி தொடர்ந்து மூன்றாவது முறையாக குறுகிய கால கடனுக்கான வட்டியை இன்று கால் சதவீதம் குறைத்தது. இவை அனைத்தும் பங்குச்சந்தைகளில் உற்சாகம் ஏற்பட காரணமாக அமைந்தன. அக்டோபர் மாத இறுதி நாள் என்ற காரணத்தினால் பல யூக வணிக ஒப்பந்தங்கள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. அதனால் அந்த ஒப்பந்தங்களை புதுப்பிக்க அல்லது கணக்கு முடிக்க வேண்டிய அவசியம் பல முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டது.

 அதனால் உற்சாகத்தில் முன்னேறி வந்த பங்குச்சந்தைகளில் இறுதியில் ஊசலாட்டம் ஏற்பட்டது.

 இன்றைய பங்குவர்த்தகத்தில் யெஸ் வங்கியின் பங்குகள் விலை 24.03% உயர்ந்தது .ஒருவெளிநாட்டு முதலீட்டாளர் அந்த வங்கியில் கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் முதலீடு செய்வதே இந்த உற்சாகத்துக்கு காரணமாகும்.

இன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் 7,192 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இன்ஃபோசிஸ், டாட்டா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், எச்சிஎல் டெக்., எச்டிஎப்சி ஆகியவற்றின் பங்கு விலைகள் சுமார் 8% வரை உயர்ந்தன.

அதே சமயத்தில் டெக் மஹிந்திரா .ஆக்சிஸ் பேங்க் .டாட்டா ஸ்டீல், .மஹிந்திரா அண்ட் மஹிந்திரா. ஐசிஐசிஐ வங்கி .ஆகியவற்றின் பங்குகள் விலை இரண்டு சதவீதத்துக்கும் மேலாக சரிந்தது. 

உலக அளவில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் நிதியின் வட்டி குறைப்பு உற்சாகத்தை தருவதாக அமைந்தது. அதனால் ஹாங்காங், சியோல்.டோக்கியோ ஆகிய இடங்களில் உள்ள பங்குச்சந்தைகள் சிறிது உயர்வுடன் இன்று வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஐரோப்பிய யூனியன் பங்குச்சந்தைகள் ஐரோப்பிய யூனியனுக்கு உரிய பிரச்சனைகள் காரணமாக எதிர்மறை போக்கில் நிலைபெற்றன.

 இன்று இந்திய ரூபாய் மதிப்பு டாலருடன் ஒப்பிடும் பொழுது 12 பைசா  சரிந்தது.