இது உங்கள் இடம்!

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2019

வரவேற்பில் வித்தியாசம்!

சகோதரி பகிர்ந்த விஷயம்... திருமணம் போன்ற விசேஷங்களில் வாசலில் வரவேற்பில் சந்தனம், குங்குமம் வைக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள், பார்லரிலோ, சுயமாகவோ முக அலங்காரம் செய்து வருவதால், பெருந்தாது என குங்குமம் எடுப்பதை தவிர்க்கின்றனர். சில இடங்களில் விலை மலிவான குங்குமம் இருப்பதால், அலர்ஜியாகிவிடும் என தொடாமலேயே கடந்து விடுகின்றனர். வைத்தது அப்படியே இருக்கிறது நிறைய இடங்களில். ஆண்களும் விரும்பி சந்தனம் எடுத்துக் கொள்வதில்லை. அதனால், அவர்கள் வீட்டு விசேஷத்தில் பூவும், சாக்லேட் மட்டும் வைத்திருந்தார்களாம். நெருங்கிய உறவினர்கள், நட்பு வட்டங்களுக்கு பலகார பாக்கெட் தரும்போது பாரம்பரியத்தையும் விடாமல் நல்ல தரமான குங்கும பாக்கெட்டுடன் வழங்கி மனநிறைவடைந்தார்களாம். குங்கும பாக்கெட் தருவதால் அவர்கள் பயன்படுத்த இயலாவிட்டாலும் பூஜையறையில் விளக்கு, சாமி படங்களுக்கு பொட்டு வைக்கலாமே.... என்று கொசுறு டிப்சும் தந்தார். எனக்கும் நிறைவுதான் இதை உங்களிடத்தில் பகிர்ந்ததில்...!

– என். கோமதி, பெருமாள்புரம்

ஆடை அன்பளிப்பு செய்கிறீர்களா?

உறவினர் மகன் தனது திருமணத்திற்காக மற்ற உறவினர்களுக்கு அன்பளிப்பாக ரெடிமேட் ஆடை எடுத்து தந்தார். அந்த ஆடையை பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக குட்டையாக இருந்தது. எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கிறதோ என நினைத்து மற்ற உறவினர்களிடம் கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறைகளை கூறினர்.

மொத்தத்தில், யாவரும் அந்த ஆடையை அணியவில்லை. இது பற்றி உறவினரிடம் கேட்டால், அவர் சங்கடப்படுவார் என கருதி, அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

அன்பளிப்பு சம்பிரதாயம் என்ற பெயரில், மற்றவருக்கு பயன்படாத வகையில், பெயருக்கு ஆடை எடுத்து, பணத்தை விரையம் செய்யாதீர்கள். உங்களால் முடிந்த அளவுக்கு பணத்தை, ஒரு கவருக்கு வைத்து அன்பளிப்பு செய்யுங்கள். இதுதான் உத்தமம்.

– மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை.

ரயில்வே துறைக்கு பாராட்டு!

நெல்லையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு சாதாரண கட்டணத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு மாநில மக்களும் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.

செங்கோட்டையிலிருந்து கொல்லத்துக்கு ரயில் புறப்பட்டதும் மனதுக்கு உற்சாகம்.  ஆரியங்காவு கோயில் நகரம், தென்மலை சுற்றுலா தலம். மலைகளை குடைந்து ரயில் பாதை அமைத்து வெற்றி கண்டிருக்கிறது. ரயில்வே துறை மலை பிரதேசங்கள், நீரோடைகள் கண் கொள்ளா காட்சி.

ரயில் மலை உச்சியில் செல்வதும், வாகனங்கள் கீழே உள்ள மலைப்பாதை யில் செல்வதும் மனதுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற வகையில் ரயில்வே துறை மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. ரயில்வே துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...!

– ஏ. பாரூக், துாத்துக்குடி.

அடிப்படை வசதி செய்யப்படுமா?

திருவனந்தபுரத்திலிருந்து நாகர் கோவில் பார்வதிபுரத்திற்கு வரும் மேம்பாலத்தில் இறங்கி ஊருக்குள் சென்று வருகின்றனர். பார்வதிபுரம் மேம்பாலம் அமைக்கப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் பயணிகள் பயன்படுத்தி கொள்ள பொது கழிப்பறை இருந்தது.

மேம்பாலம் அமைக்கப்படும்போது அந்த பொதுக் கழிப்பறை இடித்து தள்ளப்பட்டது. இப்போது கழிப்பறை இல்லை. பொதுமக்களும் பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் நிரந்தரமாக கழிப்பறை வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– ஏ.ஆர். மாஹின் அபூபக்கர், நாகர்கோவில்.