சிறுகதை : காதலிக்க நேரமில்லை! – தி. வள்ளி

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2019

‘‘என்னப்பா! மணி ஒன் தர்ட்டி. பசி உயிரை எடுக்குது கேண்டீன் போலாமா?’’ தர்ஷனி கேட்க,

‘‘10 நிமிஷ வேலைதான். இந்த மெயிலை அனுப்பிட்டு வந்திடுறேன்.’’ சஞ்சனா கூற, அரைமனதாய் தர்ஷனி கிளம்பினாள்.

‘‘தர்ஷனி! கேண்டீன்ல வெயிட் பண்ணுங்க! சாப்பிட்டு முடிச்சிடாதீங்க. அம்மா வத்த குழம்பும், எண்ணெய் கத்தரிக்காயும் கொடுத்து விட்டிருக்காங்க.’’

‘‘ஆங்...! சூப்பர்.... அப்ப வெளியிலே காரிடார்ல வெயிட் பண்றோம்’’ என்றவாரே தர்ஷனியும் மற்ற நண்பர்களும் நகர்ந்தனர்.

‘அம்மாவாலதான் இப்படி இருக்க முடியாது. மகளோட கூட சாப்பிடும் நண்பர்களுக்கும் சேர்த்து அதிகமாய் சமைத்து கொடுத்துவிடும் மனசு அவளுக்குத்தான் வரும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பார்த்து பார்த்து பண்றா.’ நினைப்பை உதறிவிட்டு வேலையை தொடர்ந்தாள்.

அவள் முடித்துவிட்டு வெளியே வரும்போது, சஜன், கார்த்தி, தனுஷ், விஜய், கோகுல் எல்லாரும் வர, ஒன்றாக கேண்டீனுக்கு கிளம்பினர். அடுத்து ஒரு மணி நேரம் அரட்டையில் கேண்டீன் ரெண்டுபட்டு போனது.

சாப்பிட்டுவிட்டு அவரவர் இடத்திற்கு திரும்ப, சஞ்சனாவிற்கு சோம்பலாக இருந்தது. எப்போதும் லன்ச் வரை மடமடவென பார்க்கும் வேலை சாப்பிட்ட பின் சோம்பலாக வேகம் குறைவது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். திரும்ப சூடுபிடிக்க இன்னும் அரை மணி நேரமாவது ஆகும் என்று நினைத்தவாறே சிஸ்டத்தை திறந்தாள். தற்செயலாக திரும்பியவள், அவளுடைய சீட்டுக்கு நான்கு சீட்டுகள் தள்ளி உட்கார்ந்திருந்த தனுஷ் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு வேலையை தொடர்ந்தாள்.

தனுஷ் மதுரையை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவன். சாதாரண குடும்பம். அவனது அப்பா கட்டட தொழிலாளி. நன்றாக படித்ததால், அவன் அப்பா தன் சிரமங்களை பொருட்படுத்தாது அவனை படிக்க வைத்தார். நல்ல மார்க் எடுத்ததால் அருகில் இருந்த பொறியியல் கல்லுாரியில் சீட் கிடைத்தது. படித்து முடித்ததும் இந்த பன்னாட்டு தொழில் நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது.

கல்லுாரியில் அதிகமாக தோன்றாத வித்தியாசம், வேலைக்கு சேர்ந்ததுமே உணரத் தொடங்கினான் தனுஷ். நகரத்து வாழ்க்கை, நாகரீகமான சக நண்பர்கள், நுனிநாக்கு ஆங்கிலம் எல்லாம் சேர்ந்து ஒரு தாழ்வு மனப்பான்மையை அவனுள் உருவாக்கியது. எவ்வளவுதான் நெருங்கிப் பழகினாலும் அவனால் நண்பர்களுடன் ஒட்ட முடியவில்லை. நண்பர்கள் கூட்டத்தில் சஞ்சனா மட்டுமே தனியாக தெரிந்தாள். மற்றவர்கள் கேலியாக பேசினாலும் அதை கட் பண்ணி அவனை என்கரேஜ் பண்ணிவிடுவாள். அதனாலேயே அவனுக்கு சஞ்சனாவிடம் தனி பிரியம் ஏற்பட்டது.

சஞ்சனா! என்ன பெண் இவள். எவ்வளவு அழகாக இருக்கிறாள். அழகு இருக்கும் இடத்தில் திமிர் இருக்கும் என்பார்களே. ஆனால், இவள் எவ்வளவு இனிமையாக பழகுகிறாள். யாரையும் புண்படுத்தாமல் இவளால் மட்டும்தான் பேச முடிகிறது. நினைத்து பார்க்கையில் சஞ்சனாவிற்கும் தன் பேரில் தனி பிரியம் இருப்பதாக தோன்றியது அவனுக்கு.

மாலை கேப் வர தாமதமானது. டிரைவர் போன் பண்ணி சொல்ல, சஞ்சனாவும், தர்ஷனியும் லாபியில் அமர்ந்தனர்.

‘‘இன்னைக்கு வீட்டுக்கு போகிறதுக்கு ஒன் அவராவது லேட்டாயிடும்’’ என்றாள் சஞ்சனா சலிப்பாக.

‘‘சஞ்சு! தனுஷை கவனிச்சியா? உன்னையே உத்து உத்து பார்க்கிறான். உன்னை பத்தியேதான் பேசுறான். எனக்கென்னவோ சரியா படலை. ஏதோ நெருடுது.’’

‘‘போப்பா! உனக்கு எதையெடுத்தாலும் சந்தேகம்தான். அவன் கிராமத்தில் படிச்சு வளர்ந்த பையன். கூச்ச சுபாவமா இருக்கான். தாழ்வு மனப்பான்மை ரொம்ப இருக்கு. நம்ம பசங்க ஏதாவது கிண்டலடிக்கிறாங்க. பாவம் சுருங்கி போயிடுறான். நல்ல ஸ்டப் உள்ள ஆளு. அதனாலதான் அவனை என்கரேஜ் பண்றேன்.’’

‘‘சரிதான் சஞ்சனா! இருந்தாலும் கேர்புல்லா இரு. எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு சொல்ல முடியாது. திடீர்னு புரொபோஸ் பண்ணிட போறான். ஜாக்கிரதை!’’ என்றாள் கிண்டலாக. விளையாட்டாக தர்ஷனி சொன்னாலும், சஞ்சனாவிற்கு அவள் கூறுவது உண்மையாக இருக்குமோ என்ற நெருடல் ஏற்பட்டது. அது எப்படி இருந்தாலும், இதை வளரவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.

கேப் வந்துவிட, இருவரும் கிளம்பினர். வீட்டிற்கு வந்தபோது அப்பா வாசலிலேயே நின்றிருந்தார். தன்னை காணோம் என்று தவித்துப் போயிருப்பார் என்று தோன்றியது. தனுஷ் விஷயத்தில் மைண்ட் டிஸ்டர்ப் ஆனதில் வீட்டிற்கு வர தாமதாகும் என்று சொல்ல மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அழுத்தியது.

‘‘சாரிப்பா...!’’ என்றவளை பேசவிடாமல்,

‘‘போம்மா... போய் கை, கால் அலம்பிட்டு டிரஸ் மாத்திட்டு வா... அம்மா உனக்கு பிடித்த ஆப்பமும், தேங்காய் பாலும், காரசட்னியும் பண்ணியிருக்கா. அப்பாவும் இன்னும் சாப்பிடலே. பசி வயித்தை கிள்ளுது. சீக்கிரம் வா...’’ என்று சகஜமாக பேச,

‘‘இதோ அஞ்சு நிமிஷத்திலே வந்திடுறேன்ப்பா!’’ என்றவாறே குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள். எவ்வளவு பிரியமான அப்பா. என்னை எவ்வளவு துாரம் புரிந்து  வைத்திருக்கிறார். எதற்கும், என்றைக்கும் சந்தேகப்பட்டு ஒரு வார்த்தை கேட்டதில்லை. என் பேரில் எவ்வளவு நம்பிக்கை. அப்பாவை நினைத்தபோது மனது பெருமையில் பொங்கியது.

அதே நேரம் தன் ரூமில் தனுஷ் குழம்பிக் கொண்டிருந்தான். ‘‘சஞ்சனாவிடம் தன் காதலை எப்படி சொல்வது? தன் மனதில் உள்ளதை லெட்டரில் எழுதிக் கொடுத்து விடுவோமா? சே! அது பழைய டெக்னிக். தன் மனதின் பிரதிபலிப்பை போல நல்ல கார்டு செலக்ட் பண்ணி வாங்கி கையில் கொடுத்து சொல்லிவிட வேண்டியதுதான்’’ என்று முடிவு பண்ணிக் கொண்டான்.

மறுநாள் வழக்கம்போல் லன்ச் அவர் முடிந்து சீட்டுக்கு திரும்பிய சஞ்சனா தனுஷை அழைத்தாள்.

‘‘தனுஷ், ஈவனிங் ஆபீஸ் முடிந்ததும் கேண்டீன் போவாமா? உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்’’ என்றாள். தனுஷுக்கு பிறகு வேலை ஓடவே இல்லை. சஞ்சனாவும் தன்னை விரும்புகிறாளோ, என்ன சொல்லப் போகிறாள் என்று யோசித்து குழம்பி தவித்துப் போனான். எது எப்படி இருந்தாலும் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று முடிவு பண்ணிக் கொண்டான்.

சஞ்சனா 5 மணி ஆனதும் நினைவாக அப்பாவுக்கு போன் பண்ணி சாயங்காலம் வர சற்று நேரமாகும் என்று தெரிவித்தாள். அவள் மனது தெளிவாக இருந்தது. தனுஷ் வர இருவருக்கும் காபியும், பர்கரும் ஆர்டர் செய்தாள். மவுனமாக தலைகுனிந்து அமர்ந்திருந்த தனுஷை பார்த்து,

‘‘என்னப்பா பேசாமல் இருக்கே...?’’ தனுஷ் தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருக்க...

‘‘சஞ்சனா! எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நான் உன்னை காதலிக்கிறேன்! உன்னையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்... நீ கண்டிப்பா என் காதலை ஏத்துக்கணும். இதைத்தானே சொல்ல நினைக்கிறே தனுஷ்...’’ சஞ்சனா முடிக்க தனுஷ் அவளை ஏறிட்டு பார்த்தான்.

‘‘என் உணர்வுகள் உனக்கு ஏன் புரியலே சஞ்சனா? உன்னை காதலிக்க எனக்கு தகுதியில்லையா? நீ என்னை கேலி பண்றியா?’’

‘‘நிச்சயமா இல்லை தனுஷ். நீதான் என்னை புரிஞ்சுக்கணும். இந்த காதல், கத்தரிக்கா.... இதிலேயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லே. நான் கேரியர்ல நிறைய சாதிக்கணும்னு துடிக்கிறேன்.’’

‘‘சஞ்சனா! உன் நினைப்பு புரியுது. நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அழகிலேயோ, அந்தஸ்திலேயோ உனக்கு சமமானவன் கிடையாது. அதனாலதானே என்னை வேணாங்கிறே...’’

‘‘கண்டிப்பா கிடையாது தனுஷ்.... நானும் உன்னை மாதிரி சாதாரண குடும்பத்துப்  பொண்ணுதான். கஷ்டப்பட்டு படிக்க வச்சுதான் எங்கப்பா என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்காரு. எங்கப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு. ஒரு மகன் இருந்திருந்தா அவரோட அந்தஸ்தை நிச்சயமா உசத்தியிருப்பான். இப்போ அந்த இடத்திலே நான் இருக்கேன். என்னால எங்கப்பா நிச்சயம் உயரணும். பணம், அந்தஸ்து, பெருமை, எல்லாத்திலேயும் உயரணும்ங்கிறதிலே நான் ரொம்ப உறுதியா இருக்கேன். கடுமையா உழைச்சு கேரியர்ல மேலே வருவேன். என் குடும்பத்துக்கு பெருமை தேடி தருவேன். காதல்ல சிக்கிக்கிட்டு என் லட்சியத்தை இழக்க நான் தயாரா இல்லை. கஷ்டப்பட்டு நம்மை மேலே கொண்டு வந்த பெற்றோரை மனக்கஷ்டத்துக்கு ஆளாக்க வேண்டாம்னு நினைக்கிறேன். நீ என்னைக்குமே என் நல்ல நண்பன்.

கஷ்டப்பட்ட குடும்பத்திலேர்ந்து வந்து உன் படிப்பினால் முன்னேறி இந்த இடத்திலே நிக்கிறே. அதனாலேயே எனக்கு உன் மீது தனி அன்பு, மரியாதை. அதை கெடுத்துக்க வேணாமே.... ஆயுள் பூரா நல்ல நண்பனா இரு. நீ நல்லா யோசிச்சுபாரு. என் வார்த்தையிலே உள்ள நியாயம் உனக்கும் புரியும். நான் வர்றேன்’’ கம்பீரமாக நடந்தாள் சஞ்சனா.

தனுஷ் ஸ்தம்பித்துப்போய் உட்கார்ந்திருந்தான். ஒரு பெண் தன் குடும்பத்திற்காக இவ்வளவு துாரம் யோசிக்கும் போது ஒரு ஆண் மகனாக தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமை புரிந்தது. குழம்பி இருந்த அவன் மனதில் தெளிவு பிறந்தது. இனி சஞ்சனாவிற்கு கார்டு வாங்க வேண்டும் என்று தீர்மானித்தான். அது, அவனுக்கே அவனை புரிய வைத்த அன்பு சிநேகிதிக்கு ஒரு நல்ல நண்பன் கொடுக்கும் நட்பின் கரமாக இருக்கும்.

***