பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 3–11–19

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2019

தனி­யார் தொலைக்­காட்­சி­யில் ஒரு நிகழ்ச்­சியை பார்த்­தேன். அந்த நிகழ்ச்­சி­யின் தலைப்பு ‘பய­ணங்­கள் முடி­வ­தில்லை’. அதில் சென்னை நகர முன்­னாள் மேயர் ‘சைதை’ துரை­சாமி ‘மக்­கள் தில­கம்’ எம்.ஜி.ஆரின் அர­சி­யல் மற்­றும் சினிமா பின்­ன­ணி­யைப் பற்றி தொடர்ந்து பேசி வரு­கி­றார். எனக்கு சைதை துரை­சா­மியை 35 வரு­டங்­க­ளாக தெரி­யும். அவர் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்., ரசி­கர். அவர் திமு­க­வில் இருந்­ததே எம்.ஜி.ஆருக்­கா­கத்­தான்.  பல­ருக்­கும் தெரி­யாத செய்தி. எம்.ஜி.ஆர் கட்சி துவங்­கு­வ­தற்கு அவ­ரும் ஒரு முக்­கிய கார­ணம்.

 ஏதோ எம்.ஜி.ஆர்., திமு­க­வில் பத­வி­யி­லி­ருப்­ப­வர்­கள் தங்­கள் சொத்து கணக்­கு­களை காட்­ட­வேண்­டும் என்று எம்.ஜி.ஆர் கேட்­டார். அத­னால் அவரை கரு­ணா­நிதி கட்­சியை விட்டு நீக்­கி­னார் என்­ப­தைப் பற்­றி­யே­தான் எல்­லோ­ரும் பேசு­கி­றார்­கள். ஆனால், அதற்கு முன்பு கரு­ணா­நிதி எம்.ஜி.ஆருக்கு எதி­ராக என்ன செய்­தார் என்­பது பல­ருக்­கும் தெரி­யாது. 1969ம் வரு­டம் பேர­றி­ஞர் அண்ணா இறந்த போது திமு­க­வின் அடுத்த தலை­வர் யார் என்­பது பெரிய கேள்­விக்­கு­றி­யாக இருந்த நேரம். நாவ­லர் நெடுஞ்­செ­ழி­யன்­தான் அடுத்த தலை­வர் என்று எல்­லோ­ரும் நினைத்­தி­ருந்த நேரம். கார­ணம் அண்ணா 1949ம் வரு­டம் சென்னை ராபின்­சன் பூங்­கா­வில் திமுக கட்­சியை துவங்­கி­ய­போது கட்­சி­யி­லி­ருந்த ஐம்­பெ­ரும் தலை­வர்­க­ளில் நாவ­ல­ரும் ஒரு­வர். அந்­தப் பட்­டி­ய­லில் கரு­ணா­நி­தி­யின் பெயர் கிடை­யாது.  ஆனால், நாவ­லர் நெடுஞ்­செ­ழி­ய­னுக்கு பதி­லாக எப்­படி கரு­ணா­நிதி திமு­க­வின் தலை­வ­ரா­னார்? கரு­ணா­நி­தியே தன் சுய­ச­ரி­தை­யில் எம்.ஜி.ஆர்., தான் கார­ணம் என்­பதை ஒப்­புக்­கொண்­டார்.

 அப்­படி எம்.ஜி.ஆரால் தலை­வ­ராக்­கப்­பட்ட கரு­ணா­நி­திக்கு கட்­சி­யில் எம்.ஜி.ஆரின் புகழ் வளர்­வதை விரும்­ப­வில்லை. அதற்­கா­கவே தன் மகன் மு.க. முத்­துவை சினிமா கதா­நா­ய­க­னாக்­கி­னார். ஒரு தலை­வ­ரின் மகன் சினி­மா­வில் நடிப்­ப­தில் தவ­றில்லை. உண்­மை­யில் கரு­ணா­நி­தி­யின் வாரி­சு­க­ளில் நல்ல இசை, கலை ரச­னை­மிக்­க­வர் மு.க. முத்­து­தான். நல்ல பாட­க­ரும் கூட! அது வேறு விஷ­யம்.

ஆனால் மு.க. முத்­துவை எம்.ஜி.ஆரைப் போல நடை, உடை, பாவனை, சிகை­ய­லங்­கா­ரத்­தோடு திரை­யில் பவனி வரச் செய்­தார். தன் மகன் சிவாஜி கணே­ச­னைப் போல ஒரே படத்­தில் பிர­ப­ல­மாக வேண்­டும் என்­ப­தற்­காக சிவா­ஜி­யின் முதல் படத்தை இயக்­கிய கிருஷ்­ணன் – பஞ்­சு­வையே அவர் மகன் நடித்த முதல் பட­மாக ‘பிள்­ளையோ பிள்ளை’ படத்தை இயக்க வைத்­தார்  கரு­ணா­நிதி. அந்த படம் சென்னை தேவி பார­டைஸ் தியேட்­ட­ரில் ஓடி­யது என்­பதை விட நூறு நாட்­கள் ஓட்­டப்­பட்­டது என்­ப­து­தான் உண்மை. கார­ணம் அப்­போது கரு­ணா­நிதி தலை­மை­யி­லான திமுக ஆட்சி தமி­ழ­கத்­தில் நடந்து கொண்­டி­ருந்­தது.

அப்­போ­தெல்­லாம் எம்.ஜி.ஆர்., ரசி­கர் மன்­றத்­தில் சேர­வேண்­டு­மென்­றால் அந்த ரசி­கர் வசிக்­கும் இடத்­தி­லுள்ள திமு­க­வின்  பகுதி செய­லா­ளர் கையெ­ழுத்து வேண்­டும். மு.க. முத்து நடித்த முதல் பட­மான ‘பிள்­ளையோ பிள்ளை’ வெளி­யா­ன­வு­டன், எம்.ஜி.ஆர்., ரசி­கர் மன்­றத்­தில் சேர வரு­ப­வர்­க­ளை­யெல்­லாம் மு.க. முத்து ரசி­கர் மன்­றத்­தில் சேரும்­படி பகுதி செய­லா­ளர்­கள் வற்­பு­றுத்த ஆரம்­பித்­தார்­கள். அது­தான் எம்.ஜி.ஆர்., திமுக உர­ச­லின் ஆரம்ப கட்­டம். மு.க. முத்து, எம்.ஜி.ஆர்., போலவே திரை­யில் தோன்­றி­னார். அவ­ரைப் போலவே கையை தூக்கி கொள்­கைப் பாடல் பாடி­னார். அந்­தப் படத்­தின் நூறா­வது நாள் விழா­வுக்கு எம்.ஜி.ஆர்.,  தலைமை தாங்­கி­னார். அப்­போது அவர் பேசும்­போது ` தம்பி முத்து என் ரசி­கர் என்­கி­றார். இருக்­க­லாம். ஆனால், தம்பி தனக்­கென ஒரு தனி பாணியை உரு­வாக்­கிக் கொண்டு நடிக்க வேண்­டும்’ என்­றார். கூடவே தன் கையி­லி­ருந்த விலை­யு­யர்ந்த ரோலக்ஸ் வாட்சை முத்­து­விற்கு பரி­சாக அளித்­தார்.

 எம்.ஜி.ஆர்., ரசி­கர்­களை முத்து ரசி­கர் மன்­றத்­தில் சேரச் சொன்­னது பல எம்.ஜி.ஆர்., ரசி­கர்­க­ளுக்கு எரிச்­ச­லூட்­டி­யது. அதில் முக்­கி­ய­மா­ன­வர் சைதை துரை­சாமி. அவர்­தான் நடப்­பதை எம்.ஜி.ஆரி­டம் அழுத்­தந்­தி­ருத்­த­மா­கச் சொன்­னார். ஒரு வகை­யில் பார்த்­தால் சைதை துரை­சா­மி­யின் பேச்­சால்­தான் எம்.ஜி.ஆருக்கு தனி கட்சி துவங்க வேண்­டும், இல்­லா­விட்­டால் நம் திரைப்­பட வாழ்க்­கை­யை­யும் கரு­ணா­நிதி கெடுத்­து­வி­டு­வார் என்று எம்.ஜி.ஆர்., நினைக்க ஆரம்­பித்­தார்.

 எம்.ஜி.ஆரை திமு­க­வி­லி­ருந்து விலக்­கி­ய­தும், அப்­போது முதல்­வ­ராக இருந்த கரு­ணா­நிதி சைதை தேரடி தெரு­வில் ஒரு கூட்­டத்­தில் பேச வந்­தி­ருந்­தார். பல­ரும் அவ­ருக்கு மாலை போட்­டார்­கள். அப்­போது மேடை­யில் ஏறி­னார் சைதை துரை­சாமி. தன் கையி­லி­ருந்த பையி­லி­ருந்து எலு­மிச்சை மாலையை கரு­ணா­நி­தி­யின் கழுத்­தில் போட்டு,  `புரட்சி நடி­கரை கட்­சியை விட்டு நீக்­கிய உங்­க­ளுக்கு பித்து பிடித்து விட்­டது. இந்த பழங்­களை தலை­யில் தேய்த்­துக் கொள்­ளுங்­கள்.  கொஞ்­சம் பைத்­தி­யம் தெளி­யும்’ என்று பகி­ரங்­க­மாக ஒலிப்­பெ­ருக்­கி­யில் அறி­வித்­தார். அதன்­பி­றகு சைதை துரை­சாமி மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வெளியே வர பல மாதங்­க­ளா­கின.  அப்­போ­தி­லி­ருந்து அவர் எம்.ஜி.ஆரின் செல்­லப் பிள்ளை. ஒரு கால­கட்­டத்­தில் சென்னை நக­ரம் திமு­க­வின் கோட்­டை­யாக இருந்த நேரத்­தில் சைதாப்­பேட்டை தொகு­தியை அதி­மு­க­வின் கோட்­டை­யாக வைத்­தி­ருந்­த­வர் சைதை துரை­சாமி. அதி­மு­க­வின் ஆரம்ப காலத் தொண்­டர். அவ­ருக்கு அதி­முக துவங்­கிய நாளி­லி­ருந்து அதன் சரித்­தி­ரம் தெரி­யும். அவ­ரு­டைய இந்த நிகழ்ச்சி பல இளை­ஞர்­க­ளுக்கு, குறிப்­பாக பல இளம் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு ஒரு  பாட­மா­கவே அமை­யும். கார­ணம், இன்­றைய பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் இன்­றைய அதி­மு­கவை வைத்து அந்­தக் கட்­சி­யில் பலத்தை குறைத்து மதிப்­பிட்டு, திமு­க­விற்கு வெண்­சா­ம­ரம் வீசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அத­னால் பல ஊட­கங்­க­ளில் நடு­நி­லைமை என்­பது காணா­மல் போய், பல விவா­தங்­கள் ஒரு பகுத்­த­றிவு என்­கிற பெய­ரில் நாத்­திக வாதங்­கள்­தான் தலை­தூக்கி நிற்­கின்­றன.

 இதே ‘வார மல’­ரில் நான் எழு­தும் கவி­ஞர் வாலி­யின் தொடர் வெளி­வந்து கொண்­டி­ருக்­கி­றது. ஆனா­லும் என்­னால் இங்கே வாலி­யின்­பெ­ரு­மை­களை சொல்­லா­மல் இருக்க முடி­யாது. கார­ணம் கடந்த வாரம் அதா­வது அக்­டோ­பர் 29 வாலி­யின் பிறந்த நாள். கண்­ண­தா­சனை கொண்­டா­டத்­தான் வேண்­டும். அதே சம­யம் கண்­ண­தா­ச­னால் வெகு ­வாக பாராட்­டப்­பட்ட வாலி­யின்  பிறந்த தினத்தை மறக்­க­லாமா?

வாலிக்கு இரண்டு முகங்­கள் உண்டு. ஒன்று–- சினிமா முகம், இன்­னொன்று இலக்­கிய முகம். ஒரு முறை அவர் பாண்­டிச்­சேரி கம்­பன் விழா­வில் கலந்து கொள்­ளப் போயி­ருந்­தார். அப்­போது அவர் –

` சாதி­யில் சம­யந்­தன்­னில்

 சிக்­கியே நோய்­வாய்ப்­பட்டு

 பேதி­யில் கிடந்த மக்­கள்

 பிழைக்­கவே மருந்­து­தந்­தோர்

ஆதி­யில் இங்­கி­ருந்­தார்.

ஆத­லால் இந்த ஊரின்

வீதி­யில் கிடக்­கும் மண்ணை

 விபூ­தி­யாய் இட்­டுக்­கொள்­வேன்’

 என்று கவிதை பாடி­னார் வாலி.

 கவி­ய­ரங்­கம் முடிந்­த­வு­டன் ஒரு முது­பெ­ரும் தமிழ்ப்­பு­ல­வர் வாலி­யி­டம் வந்­தார்.

 `ஐயா! இவ்­வ­ளவு அற்­பு­தமா கவி­ய­ரங்­கத்­துல பாடுற நீங்க, திரைப்­ப­டப்­பா­டல்­க­ளில் மட்­டும் வர்த்­தக நோக்­கோடு செயல்­ப­டற மாதிரி தெரி­யுதே?’ என்று சற்று தயங்­கி­ய­வாறே கேட்­டார்.  அதற்கு வாலி சொன்ன பதில் இது­தான்.

` இங்கே நான்

 வண்­ண­மொழி பிள்­ளைக்­குத்

 தாலாட்­டும் தாய்;

 அங்கே நான்

 விட்­டெ­றி­யும் எலும்­புக்கு

 வாலாட்­டும் நாய்’ என்­றார்.

 அதே போல பல கவி­ய­ரங்­கங்­க­ளில் புல­வர்­க­ளுக்­கெல்­லாம் அவர் சொல்­லி­யி­ருக்­கிற பதில் இது­தான்-–

` எந்­தப்பா சினி­மா­வில்

 எடு­ப­டுமோ? விலை­பெ­றுமோ?

 அதைப்­பாட எழு­து­கி­றேன்.

என்­தப்பா? நீர் சொல்­லும்!

மோனை முகம் பார்த்து

 முழங்­கிட நான் முயற்­சித்­தால்

பானை முகம் பார்த்­தென்

 பத்­தி­னி­யாள் பசித்­தி­ருப்­பாள்

 கட்­டுக்­குள் அகப்­ப­டா­மல்

கற்­ப­னைச் சிற­க­டிக்­கும்  சிட்­டுக்­கள் நீங்­கள்;

 சிறியே அப்­ப­டியா?  மெட்­டுக்­குள் கருத்­த­ரித்து

 மெல்­லவே இடுப்பு நோகத்

 துட்­டுக்கு தகுந்­த­வாறு

 முட்­டை­யி­டும் பெட்­டைக் கோழி!

 அற்­பு­த­மான கவி­தை­கள் எழு­தக்­கூ­டி­ய­வர் வாலி. அவ­ரு­டைய சினிமா பாடல்­கள் பல­வற்­றில் ஆழ­மாக இலக்­கிய வாடை இருக்­கும்.  ஒரு முறை காரைக்­குடி கம்­பர் விழாக் கவி­ய­ரங்­கில்  அவர் தலைமை வகித்­த­போது மனித மனத்­தைப் பற்றி பாடி­னார்.

 ‘மனத்­தாலே மனி­த­கு­லம்

 மேம்பா டெய்து – நல்ல

 மனங்­கெட்­டால் மானு­டந்­தான்

 மெல்­லச் சாகும்! – கொண்ட

 தனத்­தாலே கல்­வி­யாலே

 தருக்கு ஏறித் – தலை

 கனத்­தாலே கனத்த தலை

 கவிழ்ந்து போகும் !

 விலங்கு மனம் கொண்­டி­ருந்­தான்

 இலங்கை வேந்­தன் – அந்த

 விலங்கு இனந் தன்­னாலே

 வீழ்ச்­சி­யுற்­றான் – சிறு

 குரங்கு என அதன் வாலில்

 தீ வைத்­தானே !-  அது

 கொளுத்­தி­யதோ அவ­னாண்ட

 தீவைத்­தானே?

 கூனின்றி நிமிர்ந்­தி­ருந்­தாள்

கைகேயி!- நெஞ்­சில்

கூனி­யென்ன்­னும் குரங்கு புகக்

கூனிப் போனாள்!- அர­சின்

 பொன்­மு­டியை மக­னுக்­குப்

பேணி பெற்­றாள்!- அத­னால்

தன் முடி­யில் இருந்த பூவைத்  தவ­ற­விட்­டாள்.’

கம்­பன் மீது வாலிக்கு மிகுந்த ஈடு­பாடு உண்டு. வாலி சினி­மா­வில் கண்­ண­தா­ச­னுக்கு இணை­யாக பல பாடல்­கள் எழு­திக் கொண்­டி­ருந்­தார். ஆனால் கண்­ண­தா­ச­னின் புக­ழால்  வாலி சிறப்­புக்­கள் தமிழ் ரசி­கர்­க­ளுக்கு அதி­கம் தெரி­யா­மல் போனது. ***