ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 30–10–19

பதிவு செய்த நாள் : 30 அக்டோபர் 2019

இளை­ய­ராஜாவுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை!

(சென்ற வார தொடர்ச்சி...)

இளை­ய­ரா­ஜா­வின் அண்­ணன் பாஸ்­கர் அடிக்­கடி போய் சந்­திக்­கும் நண்­பர்­க­ளில் ஒரு­வர், கலை­ஞா­னம். அவர் அப்­போது தேவர் பிலிம்ஸ் கதை இலா­கா­வில் இருந்­தார். அவர் அப்­போது ஒரு படம் தயா­ரிக்­கப் போவ­தா­க­வும், இயக்­கு­னர் ஸ்ரீத­ரி­டம் உத­வி­யா­ள­ராக இருந்த பாஸ்­கர் என்­ப­வர் படத்தை இயக்­கப் போவ­தா­க­வும் இளை­ய­ரா­ஜா­வின் அண்­ணன்  பாஸ்­க­ரி­டம் சொல்லி, படத்­திற்கு இளை­ய­ரா­ஜாவை இசை­ய­மைக்க ஒப்­பந்­தம் செய்­ய­வேண்­டும் என்­றும் கேட்­டி­ருக்­கி­றார். அவ­ரும் இளை­ய­ரா­ஜா­வி­டம் இவரை அழைத்­துச் செல்ல, கதை கேட்ட இளை­ய­ராஜா இசை­ய­மைக்க ஒப்­புக்­கொண்­டார்.

படத்­தின் பெயர் 'பைரவி.' படத்­தின் நாய­கன், ரஜினி. நாயகி, ஸ்ரீப்­ரியா. இயக்­கு­னர் பால­சந்­த­ரி­டம் இரண்டு ஹீரோக்­க­ளாக கம­லும், ரஜி­னி­யும் நடித்து கொண்­டி­ருந்­த­வர்­கள், தனித்­தனி ஹீரோக்­க­ளாக நடிக்க முடி­வெ­டுத்த கால­கட்­டம் இது. பாடல் பதி­விற்கு முன்­னமே படப்­பி­டிப்பு தொடங்­கி­யது. படப்­பி­டிப்­பில் ஒரு முறை ரஜி­னியை நேரில் பார்த்த இளை­ய­ராஜா சொன்­னது:–

“ரஜி­னியை படப்­பி­டிப்­பில் நேரில் பார்த்­த­போது, ஒரு நெருப்பு கனன்று கொண்­டி­ருப்­பது போல இருந்­தது. எனக்­குள்­ளும் அப்­படி ஒரு நெருப்பு ஓடிக்­கொண்­டி­ருந்­தது. அன்று எங்­கள் இரு­வ­ரு­டைய பேச்­சும் சாதிக்க வேண்­டிய இலக்கு பற்­றியே இருந்­தது.” இன்று இரு­வ­ரும் அவ­ர­வர் வழி­யில் சாதித்து விட்­ட­னர்.

படப்­பி­டிப்­பில் கலை­ஞா­ன­மும், பாஸ்­க­ரும் இளை­ய­ரா­ஜா­வி­டம் சென்று தேவை­யான பாடல்­களை உட­ன­டி­யாக ரிக்­கார்­டிங் செய்­ய­வேண்­டும் என்று கேட்­ட­தும், கவிதா ஓட்­ட­லில் கவி­ய­ர­சர் கண்­ண­தா­ச­னு­டன் கம்­போ­சிங் தயா­ரா­னது.

இயக்­கு­னர் பாடல்­க­ளுக்­கான சிச்­சு­வே­ஷனை சொல்ல, டியூன்­களை வாசித்­துக் காட்­டி­னார் இளை­ய­ராஜா. ஒரு பாட­லுக்­கான சிச்­சு­வே­ஷ­னைக் கேட்­ட­தும், கிரா­மப்­பு­றத்­தில் பாடப்­ப­டும் குழந்­தை­க­ளின் விளை­யாட்­டுப் பாட­லான ''நண்­டூ­ருது நரி­யூ­ருது'' என்ற பாடலை பல்­ல­வி­யாக வைத்­தால் நன்­றாக இருக்­கும் என்று சொல்லி டியூனை ''நண்­டூ­ருது நரி­யூ­ருது…'' என்ற சந்­தத்தை வைத்தே தொடங்­கி­னார் இளை­ய­ராஜா. கவி­ய­ர­ச­ரும் ''நண்­டூ­ருது'' என்றே தொடங்கி பாடலை எழு­தி­னார். இந்த பாட­லின் சர­ணத்­தில் தங்­கையை இழந்து, தங்­கையை கொன்­ற­வர்­க­ளைப் பழி­வாங்க துடிக்­கும் அண்­ணன் உச்­சஸ்­தா­யி­யில் வரும் “ஏழைக்கு வாழ்வு என்று எழு­தி­ய­வன் எங்கே?” என்ற வரி­கள் அரு­மை­யாக இருக்­கும்.

இந்த வரி­க­ளுக்கு ஏற்ப படத்­தி­லும் மிக அரு­மை­யா­கப் பட­மாக்­கி­யி­ருப்­பார் இயக்­கு­னர். இந்த வரி­க­ளைப் பட­மாக்­கும் போது இளை­ய­ரா­ஜா­வும் படப்­பி­டிப்­புத் தளத்­தில் இருந்­தி­ருக்­கி­றார். இந்த படத்­தில் இடம்­பெற்ற நான்கு பாடல்­க­ளில் சொல்­ல­வேண்­டிய இன்­னும் ஒரு பாடல் கவி­ய­ர­சர் எழு­திய “கட்­ட­புள்ள குட்­ட­புள்ள… கரு­க­மணி போட்ட புள்ள…” பாடல். இந்த பாட­லின் கம்­போ­சிங்­கும் கவிதா ஓட்­ட­லில்­தான் நடந்­தது.

இயக்­கு­னர் கலை­ஞா­னத்­தைப் பார்ப்­ப­தற்­காக சில விநி­யோ­கஸ்­தர்­கள் வந்­தி­ருந்­த­னர். அவர்­களை கண்­ண­தா­சனி­டம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார் இயக்­கு­னர். இவர்­க­ளைப் பார்த்­த­துமே இளை­ய­ரா­ஜா­விற்கு 'கவிக்­கு­யில்' படத்­தின் பாடல் பதி­வின் போது ஏற்­பட்ட சம்­ப­வம் ஞாப­கத்­திற்கு வர, பாடலை யாரா­வது பாடிக்­காட்­டுங்­கள் என்று கேட்­டால் பாடிக்­காட்­டக்­கூ­டாது என்று முடிவு செய்து வைத்­தி­ருந்­தார் இளை­ய­ராஜா.

இந்த நேரத்­தில் கண்­ண­தா­ச­னுக்கு அறி­மு­கப்­ப­டுத்­திய பின் கலை­ஞா­னம் இளை­ய­ரா­ஜா­வைப் பார்த்து “பாடலை கொஞ்­சம் வாசித்­துக் காட்­டுங்­கள்” என்­றார். எல்­லோ­ரும் ஆவ­லு­டன் இளை­ய­ராஜா பாடு­வார் என்று எதிர்­பார்க்க இளை­ய­ரா­ஜாவோ ஆர்­மோ­னி­யத்தை மூடி­விட்டு எழுந்து கலை­ஞா­னத்­தி­டம் கூலாக, “இங்கே பாடி­னால் ஒன்­றும் புரி­யாது. டி.எம்.எஸ்., சுசீ­லாவை பாட­வைத்து மியூ­சிக்­கோடு ரிக்­கார்டு செய்து போட்டு காட்டி விடு­வோம். அப்­போது நன்­றாக இருக்­கும்” என்­றி­ருக்­கி­றார். இதை பார்த்த எல்­லோ­ரும் என்ன சொல்­வ­தென்று தெரி­யா­மல் விழித்­தி­ருக்­கி­றார்­கள்.

இது போன்­ற­தொரு நிகழ்ச்­சியை பார்த்­த­தில்லை என்­பது கண்­ண­தா­சன் பார்த்த பார்­வை­யி­லேயே தெரிந்­தது என்று ஒரு­முறை இளை­ய­ரா­ஜாவே இந்த சம்­ப­வத்தை நினை­வு­கூர்ந்­த­போது சொல்­லி­யி­ருக்­கி­றார்.

இந்த படத்­தின் பின்­னணி இசைச்­சேர்ப்­பின் போது கலை­ஞா­னத்­திற்­கும் இளை­ய­ரா­ஜா­விற்­கு­மி­டையே ஒரு சிறு பிரச்னை ஏற்­பட்­டது. இதற்கு மேலே சொன்ன சம்­ப­வம்­தான் கார­ணமா என்று தெரி­ய­வில்லை. பின்­னணி இசைச்­சேர்ப்­பிற்கு படம் தயா­ரா­ன­தும், கலை­ஞா­னம் இளை­ய­ரா­ஜா­வி­டம் வந்து இன்­னும் மூன்று நாட்­க­ளுக்­குள் பின்­னணி இசையை முடித்­தாக வேண்­டும், அதற்கு மேல் ஆகக்­கூ­டாது என்­றும் அந்த அள­விற்­குத்­தான் என்­னி­டம் பணம் உள்­ளது என்­றும் சொல்­லி­யி­ருக்­கி­றார்.

இளை­ய­ரா­ஜாவோ, “படத்­தின் ஆரம்­பத்­தி­லேயே கிளை­மாக்ஸ் காட்­சி­கள் போல ஹீரோ­வின் தங்­கையை கெடுப்­பது, அவ­ளின் மர­ணம், அதன் இறு­திக்­காட்­சி­கள், வில்­ல­னின் ஆட்­க­ளோடு சண்டை என்று போய் கொண்­டி­ருக்­கி­றது. அது­மட்­டு­மல்­லாது படம் முழு­வ­துமே மிக­வும் சீரி­ய­சாக மனதை தொடும் விதத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது. மூன்று நாட்­க­ளுக்­குள் முடிக்க முடி­யுமா என்­பது சந்­தே­கம்” என்­றி­ருக்­கி­றார். கலை­ஞா­னமோ வேறு எது­வும் சொல்­லா­மல், அதெல்­லாம் தெரி­யாது மூன்று நாட்­க­ளுக்­குள் முடித்­தாக வேண்­டும் என்றே சொல்­லி­யி­ருக்­கி­றார். இளை­ய­ரா­ஜா­விற்கோ கோபம். ‘‘மூன்று நாட்­க­ளுக்கு மேல் போனால் யார் சம்­ப­ளம் கொடுப்­பது? அப்­படி மூன்று நாட்­க­ளுக்கு மேல் போனால் எனக்கு நீங்­கள் சம்­ப­ளம் தர­வேண்­டாம், ஆனால் ஆர்க்­கெஸ்ட்­ரா­விற்கு கொடுத்து விடுங்­கள்’’ என்று சொல்லி பின்­னணி இசைச்­சேர்ப்பை ஆரம்­பித்­தார் இளை­ய­ராஜா.

கிட்­ட­த்தட்ட படத்­தின் எல்லா ரீல்­க­ளி­லுமே மியூ­சிக். மூன்று நாட்­க­ளுக்­குள் முடி­ய­வில்லை. இரவு 9 மணிக்கு முடிய வேண்­டிய கால்­ஷீட் இர­வும் தொடர்ந்­தது. அதி­காலை 4.30க்கு படத்தை முடித்­தார் இளை­ய­ராஜா. கலை­ஞா­னம் பாக்கி சம்­ப­ளப் பணத்தை இளை­ய­ரா­ஜா­வின் கையில் வைத்­தார். ''நீங்­கள்­தான் பணம் இல்லை என்­றீர்­களே, பர­வா­யில்லை. எனக்கு எந்த வருத்­த­மு­மில்லை. ஆர்க்­கெஸ்ட்­ரா­விற்கு மீதிப் பணத்தை தந்­து­வி­டுங்­கள்'' என்­றார் இளை­ய­ராஜா. கலை­ஞா­னமோ, “இல்லை இல்லை கஷ்­டப்­பட்டு உழைத்­தி­ருக்­கி­றீர்­கள். உங்­க­ளுக்கு பேசிய தொகை கொடுத்­தால்­தான் மரி­யாதை” என்று சொல்லி இளை­ய­ரா­ஜாவை வேறு வார்த்தை பேச­வி­டா­மல் சம்­பள பணத்தை அவ­ரு­டைய கையில் வைத்­தி­ருக்­கி­றார்.

முதல் முறை­யாக மூன்றே நாட்­க­ளில் படத்தை முடிக்க வேண்­டும் என்ற இக்­கட்­டான நிலை இந்த படத்­தில்­தான் வந்­தது என்று சிறு வருத்­தத்­தோடு இளை­ய­ரா­ஜாவே பகிர்ந்து கொண்ட ஒரு சம்­ப­வம் இது. வேக­மா­க­வும், அதே சம­யம் நல்ல இசை தரு­வ­தில் எந்த ஒரு காம்பிரமைசும் இல்­லா­மல் தந்­த­தில் எனக்கு ஏற்­பட்ட ஒரு அனு­ப­வம் என்று சந்­தோ­ஷப்­பட்­டும் இருக்­கி­றார் இளை­ய­ராஜா.