மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ – 6

பதிவு செய்த நாள் : 29 அக்டோபர் 2019

பிரம்மதேவனின் துறக்கப்பட்ட சரீரம். ஸ்தவ குணத்தின் சார்பினால் பகலாக ஆயிற்று. இந்த சந்தர்ப்ப விசேஷங்களால் அசுரர்கள் இரவில் பலசாலிகளாகவும், தேவர்கள் பகலில் பலசாலிகளாகவும் இருந்தார்கள்.

 பிறகு, பிரம்மதேவன் ஸ்த்வம்சம் கொண்ட இன்னொரு தேகத்தை ஏற்று, தன்னை லோலபிதாவாக மனதில் நினைத்து ஸ்ருஷ்டியை மேற்கொண்டான். அப்பொழுது அவனது பக்கவாட்டிலிருந்து பித்ரு கணங்கள் தோன்றின. மறுபடியும் அந்தச் சரீரத்தையும் துறந்து வேறொரு சரீரத்தை பிரம்மா எடுத்துக் கொண்டான். விடப்பட்ட சரீரத்திலிருந்து அந்த வேளை உண்டாயிற்று. பிரம்மா ஏற்றுக் கொண்ட புதிய சரீரம் ரஜோ குணம் மேலிட்டதாக இருந்ததால், ரஜோ குணம் கொண்ட மனுஷ்யர்கள் அவனது ஸ்ருஷ்டியில் தோன்றினார்கள். மறுபடியும் பிரம்மா அந்தச் சரீரத்தை நீக்கிக் கொள்ள, அதனின்றும், ப்ராதஹ்காலம் என்ற விடியற்காலை ஸ்ந்த்யை  தோன்றியது. இந்த மாதிரி முன்று குணங்களைச் சார்ந்து பிரம்மதேவனுடைய சரீரத்திலிருந்து இரவு, பகல், அந்தி, விடியல், ஆகிய நான்கும் தோன்றின.

 பிறகு, ரஜோ குணம் படைத்த சரீரத்தை பிரம்மதேவன் எடுத்துக் கொண்டான். அப்பொழுது பிரம்மாவிற்குப் பசியும், அதனால் கோபமும் ஏற்பட்டன. அப்பொழுது இருட்டில் இருந்து கொண்டு, பசியுடன் சிருஷ்டியைச் செய்ததால் அப்பொழுது தோன்றியவர்கள் மீசை தாடிகளுடன் குரூபிகளாக இருந்தனர். அப்பொழுது அவர்களில் சிலர் பிரம்மாவை உண்டு விடுவோம் என்று சொல்லி, அவரை நெருங்கி ஓடி வந்தார்கள். இன்னும் சிலர் அவரைக் காப்பாற்றுவோம், என்று கூறித் தடுத்தார்கள்.

  இப்படி ஏற்படுத்திய ஸ்ருஷ்டிகளினால் வருத்தம் அடைந்த பிரம்மதேவனுக்கு தலைமுடி அவிழ்ந்து கீழே தொங்கியது. ஆயினும் முடிகள் மேலே எழுந்து ஊர்ந்து தலை மீது சுற்றிக் கொண்டன. அவையே ஸர்ப்பங்கள் ஆயின. கோபம் கொண்ட பிரம்மதேவன் மறுபடியும் ஸ்ருஷ்டியைத் தொடர, அப்பொழுது மாமிச பட்சிகளான பூத கணங்கள் உற்பத்தியாயின. பிறகு, சாந்தமடைந்த பிரம்மன் கானம் செய்து கொண்டிருந்தபோது கந்தர்வர்கள் படைக்கப்பட்டார்கள். இவ்விதம் பல இனங்களைப் படைத்துவிட்டு பிரம்மா, தன் விருப்பப்படி பட்சிகளைத் தன் ஆயுளிலிருந்து படைத்தான். தனது மார்பிலிருந்து மரங்களையும், வாயிலிருந்து ஆடுகளையும், உதரத்திலிருந்து பசுக்களையும், கால்களிலிருந்து குதிரைகள், யானைகள், மான்கள், கழுதைகள் போன்ற மிருகங்களையும் உற்பத்தி செய்தான். ரோம கூபங்களிலிருந்து பச்சிலைகள், மருந்துகள் தோன்றின. இவ்விதம் உருவான க்ருத யுகத்தில் இவை யாகங்களில் பயன்படுவதற்காக பிரம்ம ஸ்ருஷ்டி செய்தான். மிருகங்களில் பசுக்கள், ஆடுகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் போன்றவை மக்களுக்கு உபயோகமான நாட்டுப் பிராணிகள். சிங்கம், புலி, யானை, குரங்கு ஆகியவை காட்டுப் பிராணிகள். இதன் பிறகு,  பறவைகளையும், நீர்வாழ் உயிரினங்களையும், அதன் பிறகு புழு, பூச்சிகளையும் பிரம்மன் படைத்தான்.

பிறகு பிரம்மன் தனது கிழக்கு முகத்திலிருந்து காயத்ரீ, ருக் வேதம், என்று பல யாகங்களைப் படைத்தான். தெற்கு முகத்திலிருந்து யஜூர் வேதம் போன்ற யாகங்களைப் படைத்தான். மேற்கு முகத்திலிருந்து சாம வேதம், வடக்கு முகத்திலிருந்து அதர்வன வேதம் ஆகியவை தோன்றின. இப்போது அடுத்த ஸ்ருஷ்டியைப் பற்றி சொல்லத் தொடங்கினார் பராசரர். இந்த யுகத்தின் தொடக்கத்தில் பிரம்மா தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று நினைத்தார். அப்போது நீல நிறத்தில் ஒரு  ஆண் குழந்தை அவர் மடியில் தோன்றியது. அவன் அங்கும் இங்கும் ஓடி அழத்தொடங்கினான். பிரம்மா அவனைப் பார்த்து, ‘நீ எதற்காக அழுகிறாய்?’ என்று கேட்டார்.

 அவன் ‘எனக்கு ஒரு பெயர் கொடுங்கள்’ என்றான்.

‘உனக்கு பெயர் ருத்ரன்’ என்றார் பிரம்மா.

ரோதனம் என்றால் அழுதல் என்று பொருள். அதிலிருந்து வந்த வார்த்தைதான் ருத்ரன்.

 அதற்கு பிறகு அந்தப் பிள்ளை அழுவதை நிறுத்தவில்லை. அவன் தொடர்ந்து ஏழு முறை அழுதான். அதனால் ஒவ்வொரு அழுகைக்கும் ஒரு பெயர் தந்தார் பிரம்மா. அதனால் வெவ்வேறு பெயர்களில் மொத்தம் எட்டு ருத்ரர்கள் உருவானார்கள். அவர்களுக்கு எட்டு ஸ்தானங்களையும், எட்டு பத்திரிகளையும் பிரம்மதேவன் அளித்தார். எட்டு ருத்ரர்களின் பெயர்கள் – ருத்ரன், பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்ரன், மகாதேவன். இவர்களின் உருவங்கள் முறையே சூரியன், நீர், பூமி, வாயு, அக்னி, ஆகாசம், என்பது மாதிரியாக இருந்தன. அவர்களுடைய தர்மபத்தினிகள், சுவர்சலா, உஷா, விகேசீ, சிவா, ஸ்வாஹா, திசா, தீட்சா, ரோஹினி என்பதாகும்.

 இந்த எட்டு ருத்ர தம்பதிகளுக்கு பிறந்த  புத்திரர்களின் பெயர்கள் இதுதான்:– சனீஸ்வரன், சுக்ரன், லோஹிதாங்கன், மனேஜவன் (அனுமன்) ஸ்கந்தன், ஸர்கன், ஸ்ந்தானன், புதன். ருத்ரன் தட்சனின் மகள் ஸுதியை மணந்தான். அவள் ஒரு சமயம் தட்சன் மீது கோபம் கொண்டு தனது சரீரத்தைத் துறந்தாள். பிறகு, அவள் ஹிமாவானுக்கும் மேனாதேவிக்கும் மகளாகப் பிறந்து சங்கரனை மணந்தாள்.

பூமியில் பிறந்து பார்வதி, சிவனை மணந்தது போல! மகாலட்சுமியும் பிருகு முனிவருக்கு மகளாகப் பிறந்து ஸ்ரீமத் நாராயணனைக் கணவனாக அடைந்தாள். பிருகு முனிவருக்குத் தனது தர்மபத்தினி க்யாதியினிடத்தில் தாதா,  விதாதா என்ற இரு புதல்வர்களும், பிறகு லட்சுமிதேவியும் பிறந்தார்கள்.  பராசரர் தொடர்ந்தார், ‘ஸ்ரீதேவி அமுதம் கடையும்போது அமிர்தக் கடலில் தோன்றினாள் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்கும் போது பிருகு முனிவருக்கும் அவள் மகளாகப் பிறந்தாள் என்று தாங்கள் கூறுவது எப்படி?’ என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் சொல்லத் துவங்கினார்.