யாரைத்தான் நம்புவதோ ?

பதிவு செய்த நாள் : 26 அக்டோபர் 2019

 ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கும் தேர்தல் நடைமுறையை சட்ட விதிமுறைகளின்படி பாகுபாடின்றி நடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

அந்த வகையில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பு மிகவும் அதிகம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளன.

சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக விளங்க வேண்டிய தேர்தல் ஆணையம் இன்று ஆளுங்கட்சியின் அதிகாரத்தில் சிக்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிக்கிம் முதல்வர் தேர்தலில் போட்டியிட்ட கதை

இந்திய அரசியல் சட்டப்படி ஊழல் குற்றாச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்களால் 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்த சிக்கிம் முதல்வரான பிரேம் சிங் தமங், கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்த சிக்கிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

வரும் 2024ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட்டது எப்படி ?

இவரது வெற்றியின் பின்னணியில் இருப்பது நம் நாட்டின் தேர்தல் ஆணையம் தான்.

சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி உறுப்பினராக இருந்த பிரேம் சிங் தமங் கடந்த 1994 முதல் 1999 ஆண்டுவரை அப்போதைய முதல்வர் பவன் குமார் சாம்லிங் அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அவர் பதவியில் இருந்த போது பசுக்கள் விநியோக திட்டத்திற்கான நிதியில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பிரேம் சிங் தமங் கைது செய்யப்பட்டார். கடந்த 2016ம் ஆண்டு அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை சிக்கிம் உயர்நீதிமன்றம் உறுதி செய்ததால் ஒருவருட சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பிரேம் சிங் தமர் விடுதலை அடைந்தார்.

இதற்கிடையில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை விட்டு வெளியேறி சிக்கிம் கிராந்தகாரி மோர்ச்சா என்ற புதிய கட்சியை துவங்கினார்.

சிறைக்கு சென்றவர் சிக்கிம் முதல்வரானார்

பிரேம் சிங் தமர் சிறையில் இருந்து விடுதலை அடைந்த சில மாதங்களுக்கு பின் கடந்த ஏப்ரல் மாதம் சிக்கிம் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

ஆனால் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறை தண்டனை பெற்றதால் பிரேம் சிங் தமரால் இந்த தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

சட்டமன்ற தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் பிரேம் சிங் தமரின் சிக்கிம் கிராந்தகாரி மோர்ச்சா கட்சி 17 இடங்களை கைப்பற்றியது. 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களை மட்டும் கைப்பற்றி ஆட்சியை இழந்தது.

அதை தொடர்ந்து சிக்கிம் மாநில முதல்வராக பிரேம் சிங் தமர் பதவி ஏற்றார்.

ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிடாத ஒருவர் மாநில முதல்வராக பதவி ஏற்க முடியுமா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டின் கீழ் 3 வருட சிறைதண்டனை பெற்றார். ஆனால் அவர் மேல்முறையீடு செய்ததால் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இருப்பினும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் முதல்வராக பதவி ஏற்க முடியாது என கடந்த 2001ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைக்க கூடாது என தமிழக ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

அதன் காரணமாக அதிமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய நிலையிலும் ஜெயலலிதாவால் அப்போது தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க முடியவில்லை.

உச்சநீதிமன்றத்தின் இந்த தெளிவான நிலைப்பாட்டை சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத் மறந்துவிட்டார். ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்று தேர்தலில் போட்டியிடாத பிரேம் சிங் தமருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் பதவியில் அமர்ந்த ஒருவர் அடுத்த 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பது விதிமுறை.

எனவே ஆறு ஆண்டுகளாக உள்ள தன் தகுதி நீக்க காலத்தை குறைக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார் தமங்

ஆர்.பி.ஏ (RPA) என்றழைக்கப்படும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 11ம் பிரிவின் கீழ் ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நீக்க காலத்தை குறைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

அந்த அதிகாரத்தை பயன்படுத்தி சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங்கின் தகுதி நீக்க காலமான 6 வருடங்களை ஒன்றரை வருடமாக குறைத்து கடந்த செப்டம்பர் 29ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதை தொடர்ந்து அக்டோபர் 21ம் தேதி நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் சிக்கிம் மாநிலத்தின் முதல்வராக நீடிப்பதற்கு இருந்த ஒரே தடை விலகியது.

தேர்தல் ஆணையம் கூறிய விளக்கம்

பிரேம் சிங் தமங் மீதான குற்றச்சாட்டு 1994 - 1999 ஆண்டு இடையே உள்ள காலக்கட்டத்தில் நடைபெற்றது.

ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஒருவர் 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை செய்யும் திருத்தம் ஆர்.பி.ஏ சட்டத்தின் 8ம் பிரிவில் 2003ம் ஆண்டு தான் செய்யப்பட்டது.

பிரேம் சிங் தமங் மீதான வழக்கு விசாரணை தாமதமாக முடிவடைந்த ஒரே காரணத்தால் அவரை தகுதி நீக்கம் செய்வது சரியல்ல என தேர்தல் ஆணையத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் ஆணையம் கூறும் எந்த விளக்கமும் அதன் செயலை நியாயப்படுத்த முடியாது என்பதே உண்மை.

ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்கு பணிந்து தேர்தல் ஆணையம் இத்தகைய காரியத்தை செய்ததாக பல்வேறு கட்சிகள் விமர்சனம் செய்தன.

அதை உறுதிப் படுத்துவது போல் சிக்கிம் கிராந்தகாரி மோர்ச்சா கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்த மறுநாளே முதல்வர் பிரேம் சிங் தமங்கின் தகுதி நீக்க காலம் குறைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியானது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய சுயேட்சையாக இயங்க வேண்டிய அமைப்பு ஆளுங்கட்சியின் அரசியல் விளையாட்டுக்காக தன் நம்பகத்தன்மையை இழக்கிறதா ?

கர்நாடக இடைத்தேர்தல் 

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விக்குரியை எழுப்பும் மற்றொரு விவகாரம் கர்நாடகத்தில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவில் காங்கிரஸ் – மதசார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த ஜூலை மாதம் மஜத, காங்கிரஸை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதன் காரணமாக பெரும்பான்மை இழந்த காங்கிரஸ் – மஜத அரசு 14 மாதங்களில் அதன் ஆட்சி கலைந்தது.

இதற்கிடையில் ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏக்களையும் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.அதன்படி வரும் 2023ம் ஆண்டு அடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வரை அவர்களால் வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.

தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்க கோரி 17 முன்னாள் எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

இந்நிலையில் காலியான 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் வாதம்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணையில் சபாநாயகரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என எம்.எல்.ஏக்கள் தரப்பில் வாதாடப்பட்டது.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற்ற விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறுகையில் :

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் குறித்து எதுவும் கூறுவதற்கு இல்லை. கர்நாடக முன்னாள் சபாநாயகரின் உத்தரவால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் காலியாக உள்ளன. அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே இடைத்தேர்தலை ஒத்திவைக்க கூடாது.

அதேசமயம் சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவால் 15 எம்.எல்.ஏக்களிடம் இருந்து தேர்தலில் போட்டியிடும் உரிமையை பறிக்க முடியாது என தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த வாதம் மிகவும் ஆச்சரியமளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்த 3 நாட்களில் நடந்த விசாரணையின் போது கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கில் அக்டோபர் 21ம் தேதிக்குள் ஒரு முடிவு கிடைக்காது என்பதால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ஒத்திவைக்க சம்மதித்தது.

அதன்படி கர்நாடகத்தில் வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் நவம்பர் 11ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க கூடாது என தேர்தல் ஆணையம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.

மேலும் கர்நாடக இடைத்தேர்தலை தள்ளிபோட தயக்கம் காட்டியது, அதற்கு தேர்தல் ஆணையம் கூறிய பதில் ஆகியவற்றிக்கு உச்சநீதிமன்றம் எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. 

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுவது போல் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் போன்ற அரசு அமைப்புகள் ஆளுங்கட்சியின் பகடைக்காயாக மாறி வருகிறதா ? என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுவடைகிறது.

ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் கைப்பாவையாக மாறி வரும் பட்சத்தில் எதிர்காலத்தில் அது தேசிய அளவிலான பிரச்சனையாக உருவாகும். இந்தியாவின் ஜனநாயகம் பெரும் கேள்விக்குரியதாகிவிடும்.

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு வேலை இல்லை. தேர்தலை அறிவித்த பின் தேர்தல் ஆணையம் உள்பட அனைவரும் தேர்தல் விதிகளின்படி இயங்கும் கட்டாயத்தின் கீழ் வந்துவிடுகிறார்கள். சட்டப்படியான காரணம் இல்லாமல் தனக்குத் தானே தேர்தல் ஆணையம் விதிவிலக்குத் தர முடியாது.

இது பிரச்சனையை பாஜக அல்லது காங்கிரஸ் போன்ற கட்சிகளின் அடிப்படையில் பார்க்க முடியாது.

அரசியல் விளையாட்டில் நாளை எந்த கட்சி வேண்டுமானாலும் ஆளுங்கட்சி அந்தஸ்துக்கு உயர வாய்ப்புள்ளது.

எனவே பிரச்சனை எந்த கட்சி மத்தியில் ஆட்சி புரிகிறது என்பது அல்ல. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக நம்பகத்தன்மையுடன் செயல்பட முடியுமா என்பது தான்.

இந்த நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உலக அரங்கில் இந்தியாவின் பெருமையாக விளங்கும் ஜனநாயகத்தின் மீதான மதிப்பு மற்றும் நம்பிக்கை நீடிக்கும்

 

 


கட்டுரையாளர்: சி. நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation