பாட்டிமார் சொன்ன கதைகள் – 239 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2019

அசரீரி வாக்கு!

துருபதனுடைய யானைச் சேனை பீமனுடைய கதையின் அடிகளை தாங்க முடியாமல் பின்னோக்கி ஓடத் தொடங்கி, அந்த சேனை வீரர்களிடையே குழப்பம் விளைவித்தது. அதே சமயத்தில் அர்ஜுனனும் பாண மழைகள் பொழிந்து யானைகளையும் குதிரைகளையும் தேர்களையும் கூட்டம் கூட்டமாக நாலு பக்கங்களிலும் வீழ்த்திக்கொண்டே துருபதனிடம் வந்தான். அந்த யுத்தம் பயங்கரமாக நடைபெற்றது. துருபதன் அர்ஜுனனையும் மயங்க செய்யலாம் என்று முயன்று பார்த்தான். ஆனால் அர்ஜுன பாணங்கள், துருபத பாணங்களை காட்டிலும் அதிவேகமாய் ஆகாயத்தையும் பூமியையும் மறைத்துவிட்டன.

அர்ஜுனனுடைய வில்லாகிய காண்டிப்பதற்கு முன் துருபதனுடைய  சேனை நிற்கமுடியாமல் ஓட்டம் பிடித்தது. துருபதனைக்  காப்பாற்றிக் கொண்டு போகவேண்டும் என்று அவனுடைய நண்பர்கள் முயன்றார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான அர்ஜுன பாணங்கள் திசைகளை மறைத்து இருள் அடைய செய்துவிட்டன. அதே சமயத்தில் அர்ச்சுனன் காண்டீபத்தின்  நாணை வேகமாய் உருவி தெரித்து இடி போன்ற முழக்கத்தை உண்டாக்கினான். அந்த ஓசையும் வேகமும் துருபதனை திகைப்படையச் செய்துவிட்டன.

`என்ன செய்யலாம்?’ என்று துருபதன் தெளிவதற்குள், அர்ஜுனன் மிகுந்த வேகத்துடன் துருபதனுடைய தேரில் குதித்து கருநாகத்தை பிடிப்பதுபோல் அவனைப் பிடித்துக் கொண்டான். பாஞ்சால வீரர்கள் மறுபடியும் முயன்று தங்கள் அரணை மீட்டுக் கொள்ளலாம் என்று எண்ணினார்கள். ஆனால் அர்ஜுனனுடைய வில்லின் வன்மைக்கு முன் ஒரு முயற்சியும் பயன்படவில்லை. எந்த வீரமும் நிற்கமுடியவில்லை.

கவுரவர்கள் ஏற்கனவே ஓடிப் போனவர்கள் இப்போது தைரியம் அடைந்து துருபதனுடைய  நகரத்தை அழிக்கத் தொடங்கினார்கள். அர்ஜுனனோ ` குருவிற்கு தட்சணை தானே கொடுக்க வேண்டும். இவர்களுடைய ஜனங்களை இம்சிக்கும் போர்வீரர்களை அனாவசி யமாக வதைக்கவும் குரு உத்தரவு கொடுக்கவில்லையே!’ என்று அவர்களை தடுத்து விட்டு துருபதனை துரோணரிடம் கொண்டு வந்தான்.

 கர்வபங்கமடைந்த  பாஞ்சால மன்னனைத் துரோணர்  பார்த்து `இப்போதாவது நீ என்னை உன்னுடைய நண்பன் என்று தெரிந்து கொள்கிறாயா? கண் பார்வை சரியாகிவிட்டதா ?  என்று கொஞ்சம் சிரித்துக் கொண்டே கேட்டார். அந்த சிரிப்பும் அந்த வார்த்தையும் துருபதனுக்கு  அர்ஜுன பாணங்களை காட்டிலும் கொடியனவாக  தோன்றின. துரோணர் உடனே சிரிப்பை அடக்கிக்கொண்டு `வீரனே பால்ய சினேகத்தை  என்னால் மறக்க முடியாது. குருகுல ஆசிரமத்தில் சேர்ந்து விளையாடினோம் .சேர்ந்து படித்தோம். சிம்மாசனம் ஏறியதும் நீ தான் மறந்து போனாய். நானும் இன்னும் உன் சினேகிதத்தைத்தான்  விரும்புகிறேன். ஆனால் ராஜாவுக்கு ராஜாவே நண்பனாக இருக்க முடியுமென்றும், ஏழையொரு வனோடு  பெருஞ்செல்வனான மன்ன னுக்கு  சினேகம் இருக்க முடியாதென்றும்  நீ கண்டிப்பாக சொல்லி விட்டாய். உன்னுடைய சினேகம் பெற வேண்டு மென்று தான் நானும் இப்போது உன் ராஜ்யத்தில் பாதியை அடைந்து ராஜாவாக விரும்புகிறேன். உன்னுடைய பழைய வாக்குறுதியை நீ நிறைவேற்றித் தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் நோக்கம்  கூட எனக்கு இல்லை என்றார்.

கங்கையின் தென்கரையில் குரு ராஜ்யம்; வடகரையில் துரோணர்  ராஜ்ஜியம் என்று பங்கு போட்டுக் கொண்டார்கள். துருபதன் பூரண சம்மதத்துடன் ராஜ்ஜியம் கொடுப்பதாய் தெரிவித்ததோடு தங்கள் மகாத்மாவா னதால்  பழைய நண்பனிடம் கருணை காட்டினீர்கள்.  இனி நானும் தங்களுடைய சினேகிதியை விரும்புகிறேன்’ என்று சொன்னான். துரோணர் அவனுக்கு விசேஷ மரியாதை செய்து அன்புடன் ராஜ்யமும் கொடுத்த அனுப்பி வைத்தார்

 துருபதன் தட்சிண பாஞ்சால தேசத்தை  ராஜ்ஜியமாக கொண்டு ஆட்சி நடத்தி வந்தான். நாளடைவில் துரோணருடைய  அன்பு அவனுக்கு அன்பாகவே தெரியவில்லை. அவம திப்பாக வே தோன்றியது .துரோணருடைய  அன்பை காட்டிலும் அர்ஜுனனுடைய அன்பே அவனை வசீகரித்து விட்டது. ` இனி நான் அர்ஜுனனிடம் அன்பையும், துரோணரிடம் துவேஷத்தையும் வளர்ப்பேன்’ என்று சங்கற்பம் செய்து கொண்டான். அது முதல் துருபதனுக்கு நல்ல தூக்கம் கிடையாது. அடிக்கடி, பெருமூச்சு விட்டுக்கொண்டே, ` என்னுடைய பந்துமித்திரர்கள் சக்தியில்லாதவர்கள்; எனக்கு தகுந்த புதல்வனும் இல்லையே!’ என்று வருந்து வான். கடைசியாக அவன் ஒரு யாகம் செய்து அக்கினியில் ஹோமம் செய்ய, அதிலிருந்து ஒரு புதல்வனும், ஒரு புதல்வியும் தோன்றினார்கள். புதல்வன் அந்த வீராவேசத்தோடு நெய் பொழிந்த அக்னி போலவே ஜொலித்தான். ` இவன் துரோணருக்கு சிஷ்யனாவான் ‘ என்றது ஒரு அசீரிரி வாக்கு. துருபதன் பெருமூச்சு விட்டான். ஆனால் அதே அசரீரி வாக்கு ` இவனே துரோணருக்கு யமனாகவும் பிறந்திருக்கிறான்!’ என்று சொல்லி முடித்தது. உடனே துருபதன் அக மகிழ்ந்து முகமலர்ந்து, ``நல்லது, நல்லது’’ என்று புதல்வனைத் தழுவிக் கொண்டான். புதல்வி அழகே வடிவெடுத்து வந்தது போலிருந்தாள். நிறம் கறுப்பு; ஆனால் அந்த அழகின் ஜொலிப்பிற்கு ஒப்பே கிடையாதென்று தோன்றியது. அவள் தோன்றியதும் அசரீரி `இவளால் தேவ காரியம் நிறைவேறப் போகிறது; பாவிகளை பலி கொள்ளும் புருஷ மேத யாகம் ஒன்று நடக்கப் போகிறது’ என்று சொல்லிற்று.

`இந்தப் பெண்மணியை நான் அர்ச்சுனனுக்கு மணஞ்செய்து கொடுப்பேன். கொடுத்து அவனுடைய உறவையும் அன்பையும் பெறுவேன் ‘ என்று தீர்மானித்தான் துருபதன். புதல்வனுக்கு திருஷ்ட்த்யும்னன் என்று பெயரிட்டார்கள். புதல்வி திரவுபதி என்றும் பாஞ்சாலி என்றும் பெயர் பெற்றாள். திருஷ்டத்யும்னன் துரோணரே சிறந்த ஆசிரியர் என்று கேள்விப்பட்டு அவரிடம் தைரியமாய் போய்,`எனக்கு அஸ்திர வித்தை கற்பிக்க வேணும்’ என்று கேட்டுக்கொண்டான். துரோணர் நடந்ததையெல்லாம் தெரிந்து கொண்டிருந்தார். எனினும் அஞ்சா நெஞ்சோடு அவனை சிஷ்யனாக அங்கீகரித்து வஞ்சனையில்லாமல் தமக்குத் தெரிந்த வித்தைகளைக் கற்பித்தார்.

(தொடரும்)