10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 22 அக்டோபர் 2019 15:32

சென்னை,

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் அதிகரித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடக்கும். பொதுத்தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு 2.30 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணி நேரத்துடன் கூடுதலாக அரை மணி நேரம் (30 நிமிடங்கள்) தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் (3 மணி நேரம்) நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் இன்று தனியார் டி.வி. க்கு அளித்த பேட்டியில்  கூறியுள்ளார்.

தேர்வு நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக முதலமைச்சர், அமைச்சர், செயலாளர் ஆகியோரின் முடிவின்படி இந்த கல்வியாண்டிலேயே கூடுதல் நேரம் அமல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையின் போது, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.