ரூபிக்ஸ் கியூப் புதிர் விடுவிப்பு விளையாட்டில் சென்னை மாணவர் உலக சாதனை!

பதிவு செய்த நாள் : 21 அக்டோபர் 2019 09:52

சென்னை,         

சென்னை சேர்ந்த பி.கே.ஆறுமுகம் என்ற கல்லூரி மாணவர், கனச்சதுர புதிர் (Rubik’s Cube) விடுவிப்பு விளையாட்டில் வல்லவர். இவர் தன் ஒற்றைக்கையால் 24 மணிநேரத்தில் 2,815 கனச் சதுர புதிர்களை விடுவிட்த்து மாபெரும் சாதனை படைத்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவுள்ளது.

பி.கே.ஆறுமுகம், பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர். இவரது தந்தை திரு.பி.பி.குமரவேல் அவர்கள் ஓ.என்.ஜி.சி எண்ணெய் எரிவாயு நிறுவனத்தில் துணை பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

பி.கே.ஆறுமுகம், ஏழாம் வகுப்பு பயிலும்போது, தன் சக மாணவன் ரூபிக்ஸ் கியூப் விடுவிப்பு விளையாட்டில் புதிர்களை லாவகமாக விடுவிப்பதைப் பார்த்தவுடன் இவருக்கு அதில் ஆர்வம் தொற்றிக்கொள்ள, தன் முழு கவனத்தையும் ரூபிக்ஸ் கியூப் புதிர் விடுவிப்பு விளையாட்டில் செலுத்தி, அதிலுள்ள நுட்பத்தை தெரிந்து துரிதமாகத் தீர்வுகள் விடுவிப்பதில் வல்லவரானார்.

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, மிதிவண்டியை இயக்கியபடி ரூபிக்ஸ் கியூப் புதிர்களை விடுவித்தார். இந்நிகழ்வைக் கண்காணிக்க இரு நடுவர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 2016ம் ஆண்டு, ஸ்ரீ வத்சவ் ராஜ்குமாரின் சாதனையான 7.20 மணிநேரத்தில் மிதிவண்டி இயக்கியபடி 752 ரூபிக்ஸ் கியூப் விடுவிப்பு சாதனையை, ஆறுமுகம் 4 மணிநேரத்திலேயே முறியடித்ததுடன் கீழே கால் ஊன்றாமல், 6 மணிநேரம் 7 நிமிடம் 44 வினாடிகளில் 1,010 தீர்வுகளை விடுவித்து சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு ஒளிப்பதிவு செய்யப்பட்டு, கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் ஒரு சாதனையை படைக்கவேண்டும் என்று எண்ணிய ஆறுமுகம், சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில், நடத்தப்பட்ட ரூபிக்ஸ் கியூப் புதிர் விடுவிக்கும் போட்டியில் கலந்துகொண்டார். கடந்த அக்டோபர் 12, 13ம் தேதிகளில் நடந்த இந்த போட்டியில், ஆந்திராவை சேர்ந்த கிருஷ்ணம் கடராஜின் 24 மணிநேரத்தில் 2176 தீர்வுகள் விடுவிப்பு சாதனையைவிட, ஆறுமுகம் 639 தீர்வுகள் அதிகமாக விடுவித்து அதே 24 மணிநேரத்தில் 2,815 தீர்வுகள் தந்து சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்வும் ஒளிப்பதிவு செய்யப்படு கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திற்கு அனுப்பப்படவுள்ளது.

ஆறுமுகத்தின் இந்த உலக சதனைக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.