உத்தரபிரதேச கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் செல்போன் பயன்படுத்த தடை

பதிவு செய்த நாள் : 18 அக்டோபர் 2019 18:55

லக்னோ,

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து உத்தரபிரதேச உயர்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

கல்லூரி நேரங்களில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் நேரத்தை செல்போன்களில் செலவிடுவதை அரசாங்கம் கவனித்து வந்தது.

அதன் அடிப்படையில் மாநிலத்தின் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கற்பித்தல் சூழலை உறுதி செய்வதற்காக செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.

உத்தரபிரதேசத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குள் மாணவர்கள் இனி செல்போன்களை எடுக்கவோ பயன்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த தடை மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என உத்தரபிரதேச உயர்கல்வி இயக்குநரகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முக்கியமான கூட்டங்களில் சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் செல்போனில் செய்திகள் படிப்பதில் மும்முரம் காட்டியதால் அரசு கூட்டங்களில் செல்போன் பயன்படுத்த முதல்வர் யோகி ஆதித்தியநாத்  தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.