ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 16–10–19

பதிவு செய்த நாள் : 16 அக்டோபர் 2019

உச்சக்கட்ட சாதனை ஆண்டுகள்!

(சென்ற வார தொடர்ச்சி...)

1976ம் ஆண்­டில் திரைப்­பட உல­கில் புதிய பூபா­ள­மாய்ப் புகுந்த இளை­ய­ராஜா, 1979ம் ஆண்டு வரை­யி­லான 4 ஆண்­டுக்­கா­லத்­தில் சுமார் 40 படங்­க­ளுக்­குத்­தான் இசை­ய­மைத்­தி­ருந்­தார். 1979ம் ஆண்டு அவ­ரு­டைய திரைப்­பட வாழ்க்­கை­யில் சிறிது சூடு பிடித்­தது. 1979ம் ஆண்­டில் மட்­டும் மொத்­தம் 29 படங்­க­ளுக்கு இசையமைத்­தார் இளை­ய­ராஜா.

அவற்­றில் தமிழ்ப்­ப­டங்­கள் 24, தெலுங்கு படங்­கள் 3. கன்­ன­டப் படங்­கள் 2. ஆனால், அந்த ஆண்டு வரை மெல்­லிசை மன்­னர் எம்.எஸ். விஸ்­வ­நா­தன்தான் இசை­ய­மைப்­பில் முன்­ன­ணி­யில் நின்­றார். 24 தமிழ்ப்­ப­டங்­கள், 5 மலை­யா­ளப் படங்­கள், 4 தெலுங்­குப் படங்­கள் என்று 33 படங்­க­ளுக்கு இசை­ய­மைத்து முதல் இடத்தை வகித்து வந்­தார் எம்.எஸ்.வி. இருப்­பி­னும், 1979ம் ஆண்­டி­லேயே எம்.எஸ்.விஸ்­வ­நா­த­னுக்கு இணை­யாக இளை­ய­ரா­ஜா­வும் 24 தமிழ்ப்­ப­டங்­க­ளுக்கு இசை­ய­மைத்ததன் மூலம் சரிக்­குச் சரி­யாக நின்­றார்.

1980ம் ஆண்­டில் சங்­கர் – -­­க­ணேஷ் குழு­வி­னர் 26 படங்­க­ளுக்கு இசை­ய­மைத்து முத­லி­டத்­தைப் பெற்­றா­லும், சுமார் 20 படங்­க­ளுக்கு இசை­ய­மைத்த இளை­ய­ராஜா தான் முன்­னணி இசை­ய­மைப்­பா­ள­ராக விளங்­கி­னார். எம்.எஸ்.வி.யும் போட்­டி­யில் இருந்­தார்.

1981ம் ஆண்­டி­லும், 82ம் ஆண்­டி­லும் கூட 30 , 33  படங்­க­ளுக்கு இசை­ய­மைத்த சங்­கர்-­­ – க­ணேஷ் குழு­வி­னர் எண்­ணிக்­கை­யில் முத­லி­டத்­தை­யும், 20, 21 படங்­க­ளுக்கு இசை­ய­மைத்த இளை­ய­ராஜா ஊதி­யத்­தில் முத­லி­டத்­தை­யும் வகித்­த­னர்.

1983ம் ஆண்­டில் வெளி­யான 97 தமிழ்ப்­ப­டங்­க­ளில் 31 படங்­க­ளுக்கு இசை­ய­மைத்த இளை­ய­ராஜா, மற்ற இசை­ய­மைப்பாளர்­க­ளை­யெல்­லாம் பின்­னுக்­குத்­தள்ளி விட்டு முதல் இடத்­திற்கு வந்­தார். அதே  ஆண்­டில் 4 தெலுங்­குப் படங்­கள், 2 கன்­ன­டப்­ப­டங்­கள், 4 மலை­யா­ளப் படங்­கள், 1 இந்­திப்­ப­டம் ஆகிய 11 வேற்று மொழிப் படங்­க­ளுக்­கும் சேர்த்து இசை­ஞானி இசை­ய­மைத்த மொத்­தப் படங்­க­ளின் எண்­ணிக்கை 42 ஆக உயர்ந்­தது. இந்­தச் சாத­னையை அதற்கு முன்­னர் எந்த ஆண்­டி­லும் அவர் நிகழ்த்­த­வில்லை.

1984- – 85ம் ஆண்­டு­கள் இளை­ய­ரா­ஜா­வைப் பொறுத்­த­வரை உச்­ச­க்கட்ட சாதனை ஆண்­டு­க­ளா­கவே அமைந்­தன. 1984ல் மொத்­தம் 43 படங்­க­ளுக்கு இசை­ய­மைத்த இளை­ய­ராஜா, 1985ம் ஆண்­டில் 50 படங்­க­ளுக்கு இசை­ய­மைத்து ஒரு புதிய சாத­னை­யைப் படைத்­தார். அந்த ஆண்­டில் வெளி­வந்த நேர­டித் தமிழ்ப்­ப­டங்­கள் 130.  அதில் 43 படங்­க­ளுக்கு இளை­ய­ரா­ஜா­தான் இசை­ய­மைத்­தார். அதா­வது மூன்­றில் ஒரு படத்­திற்கு இளை­ய­ரா­ஜா­வின் இசை. 5 தெலுங்­குப் படங்­கள் 1 மலை­யா­ளப் படம், 1 கன்­ன­டப்­ப­டம் ஆகி­ய­வற்­றுக்­கும் இசை­ய­மைத்து தம் சாதனை எல்­லையை 50 பட­ங்களாக ஆக்­கி­னார்.

ஆக, முதல் பத்­தாண்­டு­க­ளில் சுமார் 230 படங்­க­ளுக்கு இசை­ய­மைத்து தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம் மற்­றும் இந்­திப்­பட ரசி­கர்­க­ளை­யும் கவர்ந்து தம்­மு­டைய நாத­வெள்­ளத்­தில் ஆழ்த்தி வெற்றி கொண்­டார் இளை­ய­ராஜா.

ஆனா­லும் 1986ம் ஆண்­டில் கூட அவ­ருக்­குத் தமிழ்ப்­ப­டத்­து­றை­யில் கடு­மை­யான போட்­டி­யும் இருந்து வந்­தது. இளை­ய­ராஜா, எம்.எஸ் விஸ்­வ­நா­தன் சங்­கர்-­­ – க­ணேஷ், கங்­கை ­அ­ம­ரன், கே.வி. மகா­தே­வன், ஷியாம், முத­லிய அறி­மு­க­மான இசை­ய­மைப்­பா­ளர்­க­ளோடு, டி.ராஜேந்­த­ரும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட இசை­ய­மைப்­பா­ள­ராக உயர்ந்­தி­ருந்­தார். அது­வரை தன் படங்­க­ளுக்­கு­மட்­டுமே இசை­ய­மைத்து  வந்த டி.ராஜேந்­தர் வெளி­யார் படங்­க­ளுக்­கும் இசை­ய­மைக்க ஒப்­புக்­கொண்­டது 1986ம் ஆண்­டில்­தான். அந்த ஆண்­டில் மட்­டும் பல்­வேறு வெளிப்­ப­டங்­க­ளுக்கு இசை­ய­மைக்க ஒப்­புக்­கொண்டு, பணி­யாற்­றி­னார் டி.ராஜேந்­தர்.

‘‘இளை­ய­ரா­ஜா­வுக்­காக என்­னால் காத்­தி­ருக்க முடி­யாது" என்று கூறி டைரக்­டர் பாக்­ய­ராஜ், தாம் சம்­பந்­தப்­பட்ட படங்­க­ளுக்­குத்­தாமே இசை­ய­மைத்­துக் கொள்­வ­தா­கக்­கூறி விட்டு ‘காவ­டிச் சிந்து’ ‘தென்­பாண்­டிச்­சீ­மை­யிலே’ ’எங்க சின்ன ராசா’ முத­லிய படங்­க­ளுக்கு இசை­ய­மைத்­தது அந்த ஆண்­டில்­தான். மற்­றும் பல புதிய இசையமைப்­பா­ளர்­க­ளும் அதே ஆண்­டில் அறி­மு­கமானார்­கள். தேவேந்­தி­ரன், சம்­பத்-­­செல்­வம், மனோஜ்-­­ கி­யான், தாயன்­பன், ஆனந்த சங்­கர், சங்­கீ­த­ராஜா என்று சிலர் அறி­மு­க­மாகி மக்­க­ளைக் கவர முயன்­றார்­கள்.