கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 201

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2019

டி.எம்.எஸ். பாலூட்டி வளர்த்த கிளிகள்

பாட­கர் வேறு, பின்­னணி  பாட­கர்  வேறு.  இசை­யின் இலக்­க­ணப்­படி  பாடக்­கூ­டி­ய­வர் பாட­கர். திரைப்­பட பின்­னணி பாட­கர் என்­ப­வர், இசை­யின் இலக்­க­ணத்­தைக் கடைப்­பி­டிப்­ப­து­டன், திரைப்­ப­டத்­தின் தேவை­க­ளை­யும் பூர்த்தி செய்­ய­வேண்­டி­ய­வர்.

நடி­கர் அழு­து­கொண்டு பாடும் காட்சி என்­றால் பின்­ன­ணிப் பாட­கர் பாடும் விதத்­தில் பண் (ராகம்) தெறித்­தால் மட்­டும் போதாது, கண்­ணீ­ரும் தெறிக்க வேண்­டும்!

இந்த வகை­யில், காட்­சி­கள் எப்­படி எப்­ப­டி­யெல்­லாம் இருக்­கின்­ற­னவோ, அப்­ப­டி­யெல்­லாம்  வளைந்து கொடுத்து, சிறந்த முறை­யில் பாடக்­கூ­டி­யர் தான் சிறந்த பின்­னணி பாட­கர்.

இன்­றைய திரை­யில் இத்­த­கைய வேறு­பாடு குறிப்­பி­டும் அள­விற்கு இல்­லா­த­வாறு இருக்­கி­றது. எல்­லாமே இயந்­திர கதி­யில் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது. யதார்த்­தம் என்ற பெய­ரிலே இயந்­தி­ரத்­தன்மை நில­வு­கி­றது.

‘‘நாம் ஆங்­கி­லம் எழு­திக்­கொண்­டி­ருக்­கிற போது கம்ப்­யூட்­டரே இலக்­க­ணப்­படி திருத்­தி ­வி­டு­கி­றது, ’’ என்று ஒரு­வர் என்­னி­டம் கூறி­னார். கம்ப்­யூட்­டர் திருத்­து­கிற லட்­ச­ணங்­களை நான் அறி­வேன். அதன் உட­னடி மொழி­பெ­யர்ப்­பு­கள் இன்­னொரு காமெடி. இவற்­றை­யெல்­லாம் மன­தில் கொண்டு, ‘‘சேதி­யைத்  தெவிக்க இயந்­தி­ரத்தை நம்­பி­னால் விளங்­கி­டும்,’’ என்­றேன்.

ஏனென்­றால், மனி­த­னின் மனதை மிக நுட்­ப­மாக வெளிப்­ப­டுத்­தக்­கூ­டிய ஒரு கரு­வி­தான் மொழி. அது உணர்­வு­க­ளோடு கலந்த ஒரு அரிய ரசா­ய­னம். இயந்­தி­ரம் அதை திருத்­தத்­தொ­டங்­கி­ னால் மனி­த­னின் நாக்கு புண்­ணாக்­கா­கி­வி­டும்!

மொழி விஷ­யத்­தில் இப்­ப­டிப் போய்க்­கொண்­டி­ருக்­கும் அவ­லம், இசை என்ற மொழி­யி­லும் வந்து விட்­டது. மொழி தெரி­யா­த­வர்­கள் இசை­ய­மைக்­கி­றார்­கள். இசை­யின் வழி தெரி­யா­த­வர்­கள் பாடல்­கள் சமைக்­கி­றார்­கள்.

இன்­றைய இசை­ய­மைப்­பா­ளர் எல்­லா­வற்­றை­யும் கற்­பனை செய்து இசை­ய­மைக்­கத் தேவை­யில்லை....வேலையை இல­கு­வாக்­கும் முறை­யில், இணை­யத்­தி­லி­ருந்து பல­வித தொனி­க­ளை ­யும் இசைக்­கூ­று­க­ளை­யும் எடுத்­துக்­கொள்ள முடி­கி­றது. பண்­பட்ட உணர்­வு­கள் கொண்­ட­வன் இந்த சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னா­லும் ஓர­ள­வுக்­குத் தப்­பிக்க முடி­யும்....

ஆனால் சரக்­கில்­லா­மல் இந்த சத்த சந்­தைக்­குள் இறங்­கி­னால் சங்­கீ­தம் சக்­கை­யா­கி­வி­டும்! இன்­றைக்கு, இத்­த­கைய சந்­த­டி­கள்­தான்  டெங்கு கொசுக்­க­ளைப்­போல் செவி­க­ளில்  சங்­கீ­தம் பாடிக் கொண்­டி­ருக்­கின்­றன!

கலைப்­ப­டைப்­பில் அச­தியை ஏற்­ப­டுத்­தும் இத்­த­கைய வச­தி­கள்  மிகக்­கூ­றை­வாக இருந்த காலத்­தில் வந்த பாடல்­கள் நம் மனதை இன்­றும் கவர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. இதற்கு அவற்­றில் இருக்­கும் ஜீவன்­தான் கார­ணம்.

எத்­த­னையோ நடி­கர்­கள் வரு­கி­றார்­கள், போகி­றார்­கள். சினிமா தொழில் நுட்­பத்­தின் துணை­கொண்­டும், விளம்­ப­ரத்­தா­லும், கள்­ளப்­ப­ணத்­தால் கிடைக்­கும் வாய்ப்­பு­க­ளா­லும், சில வெற்­றி­களை ஈட்­டி­விட்டு, பெரிய ஹீரோக்­க­ளாக வலம் வரு­கி­றார்­கள். முகத்­தில் பைசா அளவு உணர்ச்சி இருக்­காது. ஆனால், பைசா கோபு­ரத்­தையே வாங்­கி­வி­டும் அள­வுக்கு பைசா சம்­ப­ள­மா­கக் குவித்­துத் தரப்­ப­டும்,   நடிப்­பில் பப்­பாக்­க­ளாக இருக்­கும் இந்த காலி டப்­பாக்­க­ளுக்கு!

ஒரு வரி வச­னத்­தைக்­கூ­டத் தெளி­வா­கப்­பே­சத் தெரி­யாத இவர்­கள், நடி­கர் தில­கம் என்ற நடிப்­பின் சிக­ரத்­தின் முன்னே,  தம்­மாத்­தூண்டு தூசி!  ஆனால், நடி­கர் தில­கத்­தையே தன்­னு­டைய பின்­ன­ணிப் பாட்­டால் பிர­மிக்க வைத்­த­வர் டி.எம். சவுந்­த­ர­ரா­ஜன்.

இசை­ய­மைப்­பா­ளர் கற்­றுக்­­கொ­டுத்த மெட்டை மட்­டும் அவர் பாட­வில்லை. ரசி­கர்­க­ளின் உணர்­வு­களை மீட்­டிக்­கொண்டு பாடி­னார். இன்­றைய சினி­மா­வில், திரை­யில் பெரிய அளவு உணர்ச்சி காட்­ட­வேண்­டிய கட்­டங்­கள் அரிது...அப்­படி இருந்­தா­லும்  பாடல்­கள் அவற்றை வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை. யதார்த்த பாணி என்று பேசிக்­கொண்டு, யதார்த்­த­மும் இல்லை வேறு எந்த பதார்த்­த­மும் இல்லை என்­கிற நிலை வந்து விட்­டது.

மாஸ் ஹீரோ என்று கூச்­ச­லைக் கிளப்­பி­விட்டு, சத்­தத்­தைக் கிளப்பி சங்­கீ­தம் என்­கி­றார்­கள். மொழி­யின் நேர்த்­தியோ, இசை­யின் வளமோ, உணர்­வு­க­ளைத் தொடக்­கூ­டிய உயர்ந்த எண்­ணங்­களோ இல்­லா­மல் செய்­யப்­ப­டும் கூச்­சல், பாட்டு அல்ல, கூப்­பாடு.

சிவா­ஜி­யின் ஆளு­மை­யும் நடிப்­பாற்­ற­லும் மக்­கள் மன­தில் ஒரு மேஜிக்கை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த காலம்,  எழு­ப­து­க­ளின் இடைப்­ப­குதி வரை எந்­த­வித தொய்­வில்­லா­மல், இடை­வி­டா­மல் தொடர்ந்­தது.   மேடை­நா­ட­க­மாக சிவாஜி நடித்த ‘வியட்­நாம் வீடு’ திரைப்­ப­ட­மாக வந்­தது. மேடை­யில் சிவா­ஜி­யின் ஜோடி­யாக அமர்க்­க­ளப்­ப­டுத்­திய ஜி. சகுந்­த­லா­வின் இடத்­தில் திரை­யில் பத்­மினி இருந்­தார்.  

திசை தவ­றிப்­போ­கும் பிள்­ளை­க­ ளின் போக்­கு­க­ளைத் தாங்­க­மு­டி­யா­மல்,    மனை­வி­யின் அர­வ­ணைப்­பில் கதா­நா­ய­கன் ஆழ்­வ­தா­கத் திரைக்­காட்சி. இந்த நிலையை கலை­ந­யத்­தோடு வெளி­யி­டும் பாடல்,

 ‘உன் கண்­ணில் நீர் வழிந்­தால்

என் நெஞ்­சில் உதி­ரும் கொட்­டு­தடி’. ஒரு சோக கதா­நா­ய­க­னின் உள்­ளக்­கு­மு­றலை மெலடி  பாணி­யில் மகோன்­ன­த­மாக விளக்­கும் பாடல்.

மகா­கவி பார­தி­யின் வரி­க­ளைப் பல்­ல­வி­யா­கக் கொண்டு, கவி­ஞர் கண்­ண­தா­சன்  பின்­னிய பாட­லுக்கு, தன்­னு­டைய குர­லால் ஜீவனை டி.எம்.எஸ். நல்­கி­னார்.  அவ­ரு­டைய பாட்­டில் சுரப்­பி­டிப்பு மட்­டு­மல்ல...பாடல் கட்­டத்­தின் சித்­த­ரிப்­பும் அற்­பு­த­மாக அமைந்­தது. அத­னால்­தான் இந்­தப் பாடல், அது வந்த போது இருந்த மந்­த­கா­சத்­து­டன் இன்­றும் விளங்­கு­கி­றது.

ஒரு ஐம்­பது வரு­டங்­க­ளுக்கு முன் பெரும்­பா­லும் கிரா­மப்­பு­ற­மாக இருந்த தமிழ்­நாடு, இன்று ஐம்­பது சத­வீ­தம் நகர் மய­மாக்­க­லைத் தழு­வி­யி­ருக்­கி­றது! இன்று எடுத்­த­தற்­கெல்­லாம் இயற்கை, இயற்கை என்று கூக்­கு­ர­லி­டு­கி­ற­வர்­க­ளின்

ஒத்­து­ழைப்­பில்­தான் வயல்­பு­றங்­கள் எல்­லாம் வீட்­டு­ம­னை­கள் ஆகி­யி­ருக்­கின்­றன. ஆற்று மண்­ணெல்­லாம் அள்­ளிக் கொண்­டு­போ­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த மாற்­றங்­கள் தொடங்­கி­யி­ருந்த கால­கட்­டத்­தில், பாரம்­ப­ரிய பழக்­க­வ­ழக்­கங்­க­ளுக்­கும் சுய லாபங்­க­ளுக்­காக நகர்­ம­ய­மாக்­கலை அவிழ்த்து விட்ட சக்­தி­க­ளுக்­கும் நடந்த போராட்­டத்தை, ‘பட்­டிக்­காடா பட்­ட­ணமா’ சித்­த­ரித்­தது. குடுமி அங்க்­கி­ளுக்­கும் (சிவாஜி ஏற்ற மூக்­கை­யன் வேடம்) மேற்­கத்­திய நாக­ரி­கத்­தின் சின்­ன­மான கல்­ப­னா­விற்­கும் (ஜெய­ல­லிதா)  இந்த மோதல் இசை வகை­யில் நடக்­கும் போது வரும் பாடல், ‘கேட்­டுக்­கோடி உருமி மேளம்’. இது சோகத் திருப்­பத்­

திற்கு இட்­டுச் செல்­லும் போது, கண்­ணீர் கோல­மா­க­வும் ஒலிக்­கும் பாடல், ‘அடி என்­னடி ராக்­கம்மா’.  சிவா­ஜி­யின் சோக நடிப்­பிற்கு உறு­து­ணை­யாக அமைந்த இந்­தப் பாடலை பாடி­ய­வரை,  பாட­கர் என்று மட்­டும் எப்­ப­டிக் கூற முடி­யும்?

நடி­கர் தில­கத்­தின் உணர்­வு­களை ஏழு ஸ்வரங்­க­ளி­லும் நவ­ர­சங்­க­ளி­லும்  வடித்த ‘பாட­கர் தில­கம்’ என்­று­தான் கூற­வேண்­டும்!

புதுப் பாணி தேவ­தாஸ் (அழ­கா­புரி ஜமீந்­தார் ஆனந்த் - ‘வசந்த மாளிகை’ 1972), நாடக நடி­கர் ரங்­க­துரை (‘ராஜ­பார்ட் ரங்­க­துரை’ 1973), பாரிஸ்­டர் ரஜி­னி­காந்த் (‘கவு­ர­வம்’ 1973), போலீஸ் அதி­காரி சவுத்ரி (‘தங்­கப்­ப­தக்­கம்’ 1974) என்று எழு­ப­து­க­ளின் முதல் பாதி­யில் சிவாஜி சித்­த­ரித்த பாத்­தி­ரங்­கள், ரசி­கர்­க­ளைத் திரை­யோடு ஐக்­கி­யப்­ப­டுத்­தின.

 கதை­க­ளின் செயற்­கைப் பின்­னல், மிகை நடிப்பு என்று சிலர் கூவக்­கூ­டிய படங்­க­ளாக இருந்­தா­லும், சிவா­ஜி­யின் பாத்­தி­ரப் படைப்­பு­க­ளில் மக்­கள் கட்­டுண்­டார்­கள். இந்­தப் படங்­க­ளின் உணர்ச்­சி­ம­ய­மான திருப்­பங்­க­ளில்  அமைந்த பாடல் காட்­சி­க­ளில் நடி­கர்- பின்­னணி பாட­கர் ஐக்­கி­யம், பரி­பூ­ர­ண­மாக ஏற்­பட்­டது. சவுந்­த­ர­ரா­ஜன் பின்­ன­ணி­யில் பாடு­கி­றார் என்று புலப்­ப­டாத அள­விற்கு இருந்த குரல் பொருத்­தத்­திற்கு இன்­னும் வலு­வூட்­டும் வகை­யில், சிவா­ஜி­யின் நடிப்­பைப் புரிந்­து­கொண்டு சவுந்­த­ர­ரா­ஜன் பாடி­னார். பாட­லுக்கு ஏற்ப உதட்­ட­சைப்­பை­யும் முக­பா­வத்­தை­யும் செய்­கை­யை­யும் சிவாஜி வெளிப்­ப­டுத்­தி­னார்.

 வேஷங்­கள் போட்டு நடிக்­கும் மேடை நடி­கர் ரங்­க­துரை, தான் ஊட்டி வளர்த்த தம்­பி­யின் உண்மை வேஷம் வெளிப்­ப­டும் போது படு­கிற பாட்டை, ‘அம்­மம்மா தம்பி என்று நம்பி’ தெரி­விக்­கி­றது.    

‘யாருக்­காக இது யாருக்­காக’, ‘இரண்டு மனம் வேண்­டும்’ (‘வசந்த மாளிகை’),    ‘பாலூட்டி வளர்த்த கிளி’ (‘கவு­ர­வம்’), ‘சோதனை மேல் சோதனை’ (‘தங்­கப்­ப­தக்­கம்’) முத­லிய பாடல்­க­ளில், சோகத்­தின் வெளிப்­பாட்டை, அவ­லச் சுவையை, சங்­கீ­த­மாக மாற்றி தன்­னு­டைய பாணி­யில் அழ­காக வெளி­யிட்­டார் சவுந்­த­ர­ரா­ஜன்.


குரலை சின்­னது, பெரிசு செய்து பாடு­வது, கண்­ணீரை அடக்­கிக்­கொண்டு ஆதங்­கத்தை வெளி­யி­டு­வது போன்ற முறை­க­ளும், பாத்­தி­ரத்­தி­ட­னும் சம்­ப­வத்­து­ட­னும் ஒன்­றிப்­போ­கும் அவ­ரது பண்­பும் பாடல்­க­ளுக்கு ஒரு அபூர்­வ­மான உயி­ரோட்­டத்தை நல்­கின. கண்­ண­தா­ச­னின் வித்­தி­யா­ச­மான வரி­கள் இந்­தப் பாடல்­க­ளுக்கு தனிப்­பட்ட மணத்தை சேர்த்து அவற்­றின் தரத்­தைக் கூட்­டின.

உதா­ர­ணத்­திற்கு, ‘வசந்த மாளி­கை’­யின் தெலுங்­குப் பிர­தி­யில், ‘மனசு

கதி எந்தே’ என்ற பாடலை எடுத்­துக்­கொள்­ளுங்­கள்.

‘மன­தின் வழி என்ன, மன­முள்ள மனி­த­ருக்­குச் சுக­மில்லை என்­ப­து­தான்’ என்று தெலுங்­குப் பாட­லா­சி­ரி­யர் ஆத்­ரேயா   எழு­தி­யி­ருந்­தார். இது தமி­ழா­கும் போது, கண்­ண­தா­ச­னின் முத்­தி­ரை­யைப் பெற்­றது.

‘இரண்டு மனம் வேண்­டும்

இறை­வ­னி­டம் கேட்­டேன்

நினைத்து வாட ஒன்று

மறந்து வாழ ஒன்று’ என்று, காத­லி­யின் நினை­விற்­கும், அவளை மறக்க நினைக்­கும் முயற்­சிக்­கு­மி­டையே தவிக்­கும் ஒரு­வ­னின் நிலை­யைப் படம் பிடித்­தார் கண்­ண­தா­சன்...

 பாட­லின் இசை­ய­மைப்­பின் போது, மகா­தே­வ­னின் உதவி இசை­ய­மைப்­பா­ளர் டி.கே. புக­ழேந்தி, ‘கட­வுளை யார் தண்­டிப்­பது’ என்று கருத்­துத் தெரி­விக்க,

‘கண்­க­ளின் தண்­டனை காட்சி வழி

காட்­சி­யின் தண்­டனை காதல் வழி

காத­லின் தண்­டனை கட­வுள் வழி

கட­வுளை தண்­டிக்க என்ன வழி’ என்று கண்­ண­தா­சன் ஒரு தண்­டனை வளை­யத்தை வனைந்­தார்! அவர் காட்­டிய வழி தனி வழி!

இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்­கும் இலக்­கி­யத் தமி­ழில் நாட்­டம் இருந்த காலம் அது. பாடல் வரி­க­ளுக்கு இசை கொடுப்­ப­து­தான் திரை இசை­யின் வேலை என்று நினைத்­த­வர் மகா­தே­வன். வாத்­திய இசை­யும் பாடல் வரி­க­ளுக்­குத் துணை­போ­வ­து­தான் என்று இருந்­தது.

‘வசந்த மாளிகை’ பாடல்­க­ளின் ஒலிப்­ப­திவு வாகி­ணி­யில் நடந்து கொண்­டி­ருந்த சம­யம். ‘யாருக்­காக, இது யாருக்­காக’ என்ற பாட­லின் பிர­தி­யைக் கையில் வைத்­துக்­கொண்டு, பாட­லின் சூழ்­நி­லை­யை­யும் மெட்­டை­யும் எடை­போட்­டுக்­கொண்டு, பாட­லின் தோர­ணை­யைப் பற்றி சவுந்­த­ர­ரா­ஜன் சிந்­தித்­துக் கொண்­டி­ருந்­தார்.  ‘யாருக்­காக, இது யாருக்­காக...’என்று சவுந்­த­ர­ரா­ஜன் சோக­மா­கப் பேசிய பின், பாடல் தொடங்­கும். தான் பேசி­யதை  ‘எக்கோ எபெக்­டு­டன்’ திருப்­பிக் கேட்க விரும்­பி­னார் சவுந்­த­ர­ரா­ஜன்.

‘எக்­கோ­வோட கேட்­டாத்­தான் இவ­ரால் பாட முடி­யுமோ?’ என்று ஒலிப்­ப­தி­வா­ளர் அலட்­சி­ய­மா­கப் பேசி­யது சவுந்­த­ர­ரா­ஜன் காதில் விழுந்­து­விட்­டது. சவுந்­த­ர­ரா­ஜன் காதில் அணிந்­து­கொண்­டி­ருக்­கிற ஹெட்­போ­னுக்­குச் செல்­கிற டிராக்கை மூடா­மல் ஒலிப்­ப­தி­வா­ளர் அப்­படி பேசி­விட்­டி­ருந்­தார்!

சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு கோபம் பொத்­துக்­கொண்டு வந்­தது. ஹெட்­போனை கழற்றி வைத்­து­விட்டு,  ‘ஏன் எக்­கோ­வைக் கேக்­கும்­படி செய்ய முடி­யாதா...ஏவி.எம்­மில் சம்­பத் அப்­ப­டிச் செய்­யத் தயாரா இருக்­கார்...அங்கே போய் ரிக்­கார்ட்

பண்­ணிக்­கி­றோம்’ என்று கிளம்­பி­விட்­டார்.  

அப்­போது சிவாஜி அங்­கி­ருந்­தார். கசா­மு­சா­விற்­கான கார­ணம் கேட்­டார். ‘‘எக்கோ  எபெக்டு கேட்­டுப் பாடினா உணர்ச்­சி­யோட பாட முடி­யும்னு  நினைக்­கி­றேன்...அவர் முடி­யா­துங்­க ­றாரு’’ என்று சொன்­ன­வர், சிவாஜி தெளி­வ­டை­கிற முறை­யில் ஒரு உதா­ர­ணம் சொன்­னார்.

‘‘நீங்க கட்­ட­பொம்­மன் நாட­கம் நடிச்சு

டய­லாக் பேசிக்­கிட்­டி­ருக்­கி­றப்போ பேச­றது உங்க காதிேல விழ­லைன்னா, தொடர்ந்து

உங்­க­ளால உணர்ச்­சி­க­ரமா பேச­மு­டி­யுமா?’’ என்று கேட்­டார்.

‘‘அவர் சொல்­றது நியா­யம்­தான்...அவர் கேக்­கிற மாதிரி செஞ்சு கொடுங்க’’ என்று சொல்­லி­விட்­டார் சிவாஜி! நடி­கர் தில­கத்­திற்­குத் புரிந்­தது அவ­ரு­டைய பாட­கர் தில­கத்­தின் உள்­ளக் குமு­றல்.

ஆதி­யி­லி­ருந்து வந்­து­கொண்­டி­ருக்­கும் ‘தேவ­தாஸ்’ கதை­யின் ஒரு மிகைப்­ப­டுத்­தப்­பட்ட படம் என்று விமர்­ச­கர்­கள் ‘வசந்­த­மா­ளி­கை’யை விளா­சி­னா­லும், படம் ஓடிக்­கொண்டே இருந்­தது...தமிழ்­நாட்­டில் 250 நாட்­கள் ஓடிய ‘வசந்த மாளிகை’, இலங்­கை­யில் 41 வாரங்­கள் கண்­டது...சுசீலா தனித்­துப் பாடிய ஒரு பாட­லைத் தவிர, படத்­தில் ஆறு பாடல்­கள் பாடிய சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­கும் மகத்­தான வெற்றி அது.

(தொட­ரும்)