உலக இளையோர் செஸ் போட்டி: சென்னை வீரர் பிரக்யானந்தா தங்கம் வென்றார்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2019 13:17

மும்பை,

உலக இளையோர் சதுரங்கப் போட்டியில் சென்னை வீரர் பிரக்யானந்தா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற பிரக்யானந்தாவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், செஸ் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10வது சுற்று ஆட்டத்தில், 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்யானந்தா (14), லிதுவேனியாவின் பாவ்லிஸ் பல்டினிவிசியசை எதிர்கொண்டார்.

வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்யானந்தா 63வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனால் மொத்தம் 8.5 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கினார். 

அடுத்த இடத்தில் ஆர்மேனியா வீரர் ஷந்த் சர்க்ஸ்யான் (8 புள்ளி) இருந்துள்ளார்.

இன்று 11வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நடைபெற்றது.

இந்த போட்டியில் பிரக்யானந்தா வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.

இதுபற்றி செஸ்.காம் வெளியிட்டுள்ள செய்தியில்,

18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெற்றி பெற்றுள்ள சிறுவன் பிரக்யானந்தாவுக்கு மனப்பூர்வ வாழ்த்துகள். இந்தியா உன்னால் பெருமை அடைகிறது என தெரிவித்து உள்ளது.

18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பிரக்யானந்தா பெற்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

 போட்டிகளை பதக்க வெற்றியுடன் முடித்த இந்திய தரப்பில் 6 பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளன. அவற்றில் 3 வெள்ளி பதக்கங்களும் அடங்கும்.

மு.க. ஸ்டாலின் வாழ்த்து

தங்கம் வென்ற பிரக்யானந்தாவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழரான பிரக்யானந்தா உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது, மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது விஸ்வநாதன் ஆனந்த்.போன்றோரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கும் பிரக்யானந்தா மேலும் பல சிகரங்களைத் தொட எனது வாழ்த்துகள் ! என மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.