தனியார் நீட் பயிற்சி மையங்களில் வருமான வரி சோதனை: ரூ. 30 கோடி சிக்கியது

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2019 19:00

சென்னை

தமிழகத்தில் நாமக்கல். பெருந்துறை .சென்னை, கரூர் ஆகிய நகரங்களில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சோதனைகளில் ரூ 30 கோடி ரொக்கம் சிக்கியது.

தனியார் நடத்தும் இந்த நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றும் இந்த வருமானத்திற்கு வருமான வரி செலுத்தாமல் தனியார் பயிற்சி மையங்கள் அரசை ஏமாற்றுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனை ஒட்டி தமிழகத்தில் நாமக்கல். பெருந்துறை .சென்னை, கரூர் ஆகிய நகரங்களில் தனியார் நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.

ஒரு பயிற்சி மையத்தின் ஆடிட்டோரியத்தில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த ஆடிட்டோரியத்தில் சோதனை நடத்தி ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அந்த ஆடிட்டோரியத்தில் அசையாச் சொத்துக்களை பதிவுசெய்து வாங்கியதற்கான விற்பனை ஆவணங்களும் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

மொத்தம் 17 இடங்களில் நடந்த இந்த சோதனைகளில் ரூ. 30 கோடி ரொக்கமாக கைப்பற்றப்பட்டது. அதுதவிர ரூ. 150 கோடி வருமானத்துக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

தனியார் நீட் பயிற்சி மையங்களில் மிக அதிகமான ஊதியத்துக்கு மிகத்திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பயிற்சி மையங்களில் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு நிர்வாகங்கள் தரும் உண்மையான சம்பள விவரங்கள் அடங்கிய கணக்கு பதிவேடுகளும் கைப்பற்றப்பட்டன.

இன்று நடந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை  ஆய்வு செய்து தனியார் நீட் பயிற்சி மையங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்று மதிப்பீடு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர் .

இந்த விவரங்களின் அடிப்படையில் தனியார் பயிற்சி மையங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்படும் என தெரிகிறது.

ஸ்டாலின் ட்விட்டரில் செய்தி 

திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் நீட் தேர்வு பயிற்சி மோசடி குறித்து பதிவிட்டுள்ளது.

நீட் பயிற்சி மையங்களை நடத்துவது பெரும் லாபம் தொழிலாக மாறியுள்ளது. 3 ஆண்டுகளில் நீட் பயிற்சி மையம் ஒன்று ரூ.150 கோடி சம்பாதித்துள்ளது. ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்கள் இந்தக கட்டணங்களை செலுத்தி நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது, என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.


நீட் தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை நகல் கீழே தரப்பட்டுள்ளது.