மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரங்கனை மேரி கோம் வெண்கலம் வென்றார்

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2019 12:06

உலான் உடே

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை  மேரி கோம் அரையிறுதியில் வெற்றியை இழந்து, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது.

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம், மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றதுடன் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

அரையிறுதி போட்டியில் தர வரிசையில் 2-ம் இடத்தில் உள்ள துருக்கி வீராங்கனை புசேனாஸ் காகிரோக்லுவிடம் 1-4 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வி அடைந்தார். இதனால் மேரி கோமுக்கு வெண்கலப் பதக்கம் உறுதியானது

 51 கிலோ உடல் எடைப்பிரிவில் மேரிகோம் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.

2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரிகோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்கப் பதக்கமும் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), 1  வெள்ளிப் பதக்கமும் (2001) வென்றுள்ளார்.

8-வது பதக்கத்தை உறுதி செய்து இருப்பதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக பதக்கம் வென்றவர் என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார்.

அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை புசேனாசிடம் மேரி கோம் தோல்வியடைந்தார். நடுவரின் தீர்ப்புக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்தது

ஆனால், மேரி கோமின் மேல்முறையீட்டை சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் தொழில்நுட்பக் குழு நிராகரித்தது.

இதற்கு முன்பு கியூபா வீரர் பெலிக்ஸ் சவோன் உலக குத்துச்சண்டை போட்டியில் 6 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.